வெள்ளி, 27 மே, 2011

சாலை விபத்தும் மனிதகுலத்தை அழிக்கும் அணுகுண்டுக்கு இணையானது

சாலை விபத்துகள்: கொலைக்கான அனுமதியா?
-ரகு
   சமீப காலமாக இந்தியாவில் சாலை விபத்துகளால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு ஒரு விபத்து. நான்கு நிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றார். சாலை விபத்துகளால் பலியாகிறவர்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளது. விபத்துக்களில், குறைந்த 
வருவாய் உடையவர்கள் மரணமடைவதும் அதிகரித்து வருகின்றது.

     "2011-2020 ம் ஆண்டு வரை சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைக்கான பத்து  ஆண்டுகள்" என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது. "பெருமளவிலான மக்கள் உயிரிழப்பதற்கு சாலைவிபத்துகளே உலகளாவிய காரணமாக அமையும்" என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

           சாலைவிபத்துகள் காரணமாக ஆண்டொன்றுக்கு 2 லட்சம் மக்கள் 
உயிரிழக்கின்றனர். 5 லட்சம் மக்கள் காயமடைகின்றனர். 90 சதவீதமான விபத்துக்கள், குறைவான மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளில் நடைபெறுகிறது. சாலைவிபத்துகளின் காரணமாக ஏற்படும் இழப்புகள் நாடுகளின் முன்னேற்றப்பணிகளை மிகவும் தீவிரமாகப் பாதிக்கிறது. சாலை விபத்துகளால் ஏற்படும் நஷ்டம் ஒரு வருடத்திற்கு  சுமார் 51800 கோடி டாலர்களாகும்.

              இத்தொகை, இந்திய மக்களின் கல்விக்கு அல்லது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படுவதை விட அதிகமாகும் என்று திட்டக்கமிஷன் தெரிவிக்கிறது. மேலும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் சந்திக்கும் தீவிரமான காயம், அதற்கான மருத்துவச்செலவு, மறுவாழ்விற்கான செலவுகள் போன்ற அளவுக்கதிகமான சுமையைச் சுமக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

      இந்த ‘நவீன’க் கொள்ளை நோய்க்குப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக இந்தியா இந்த விஷயத்தில் மிகவும் மோசமான உதாரணமாக உள்ளது. மேலும், பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்நிலைமை மேலும் மேலும் சீரழிந்து வருகிறது. சாலை விபத்துகளை அரசும் கண்டுகொள் வதில்லை; மக்களும் கண்டுகொள்வதில்லை என்ற நிலைமைதான் உள்ளது. சாலைவிபத்துகளை மக்கள் மிகவும் சகஜமாக ஏற்றுக்கொண்டுவிட்டனர். விதி என்று சுலபமாகச் சொல்லி விடுகின்றனர். ஆனால் உண்மையில் அப்படியல்ல. பெரும்பாலான விபத்துகள் ஏதோ ஒன்றாலோ, யாரோ ஒருவராலோ ஏற் படுத்தப்படுகிறது. இவை நிர்வாகத்தில் புரையோடிப் போயுள்ள சீரழிவை சமூக நடத்தையில் தனது பங்கையும் சுட்டிக் காட்டுகிறது.

இந்தியாவில் உயிரிழப்புகள்:

   கடந்த ஆண்டு சாலைவிபத்துகளில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 1.6 லட்சமாகும். 2009ம் ஆண்டு 1.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஓராண்டில் 28 சதவீதம் அதிகரிப்பு என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். ஐ.நா. சபை அறிவிப்பின்படி சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவை யான ஒரு அறிக்கையை சுகாதார அமைச்சகமும் சாலைப்போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து தயாரித்துக் கொண்டிருக்கின்றன.

          5-44 வயதுடைய பிரிவினரின் மர ணத்திற்கான முக்கியமான மூன்று  காரணங்களில் விபத்து மிக முக்கியமானதாகும். பிற நாடுகளில் விபத்தில் மரணம் 5வது காரணியாக உள்ளது. 0-4வயதுள்ள குழந்தைகள் விபத்தில் மரணமடைவது வாகனங்களின் அடர்த்தியை விட அதிக மாக உள்ளது. சில நாடுகளின் விபத்து குறித்த புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும் போது இந்தியா படுமோசமான நிலைமையில் உள்ளது. வளரும் நாடுகளைப் பொறுத்தவரை சரியான புள்ளிவிவரங்கள் கிடைப்பதில்லை. கிடைக்கும் புள்ளி விவரங்களும் தவறான வழிகாட்டக் கூடியவையாக உள்ளன.

          சாலை விபத்துகளில் பலியாபவர் களில் 13 சதவீதம் பேர் பாதசாரி-  களாவார்கள், 20 சதவீதம் பேர் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள், 7 சதவீதம் பேர் 3 சக்கர வாகனங்களில், 22 சதவீதம் பேர் லாரிகளில், 8 சதவீதம் பேர் பேருந்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இந்தியாவில் கிட்டத்தட்ட 100 மில்லியன் வாக னங்கள் உள்ளன. இவற்றுள் இரு சக்கர வாகனங்கள் 70 சதவீதமாகும். எனவே, விபத்து சதவீதம் அதிகரிப்பது ஆச்சரியமில்லை. ஆனால் தரைவழிப் போக்குவரத்துத்துறை அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கரவாகனங்கள் மற்றும் கார்கள், லாரிகள், பேருந்துகள் ஏற்படுத்தும் சாலை விபத்துகளின் சதவீதம் தலைகீழ்விகிதமாக உள்ளன. அதாவது, சைக்கிளில் செல்பவர்களே அதிகம் விபத்தில் உயிரிழக்கின்றனர்.

        நகர்ப்புறங்களை விட கிராமப்புறத்தில் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. அதாவது 62 சதவீத விபத்துகள் கிராமப்புறத்திலேயே நடை பெறுகின்றன. அதற்கான காரணங்கள் வருமாறு, முதலாவதாக ஒரேயொரு வாகனம் மட்டுமே செல்ல ஏதுவான சாலைகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடவோ ஒதுங்கிச்செல்லவோ இயலாத நிலைமை, போக்குவரத்து குறைவாக உள்ளதால் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வது முதலியவை ஆகும்.

         அடுத்ததாக நடைபெறும் விபத்துக ளில் பாதிக்கும் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன.

        மேலும் விபத்து நடைபெற்றதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதில் சரியான அணுகுமுறை இல்லை. விபத்தை ஏற்படுத்தியவர்களுக்குத்   தண்டனை வாங்கிக் கொடுப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வாங்கிக் கொடுப்பதோடு, போக்குவரத்துக் காவல் துறையின் பணி முடிவடைந்து விடுகிறது.

          80 சதவீத சாலைவிபத்துகள், அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் செல்வதால் ஏற்படுகிறது. இவற்றுள் 10 சதவீதம் மரணத்தில் முடிவடைகிறது. இப்புள்ளிவிவரங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது தெளிவாக இல்லை. மேலும் பல இடங்களில் இப்புள்ளிவிவரங்கள் உண்மை என்று நம்பப்படுகின்றன.

       உண்மையான சாலைவிபத்துகள் மிகவும் குறைவாகவே நடைபெறு- கின்றன. குறுக்கே வரும் விலங்குகள் / மனிதர்கள் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக வேறுபக்கம் வாகனத்தைத் திருப்பும் போது பிறர் மீது மோதுவது. ஆனால் பெரும்பாலான சாலை விபத்துகள் எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்வதனால் ஏற்படுகின்றன.

     ஒரு மணி நேரத்தில் ஒருகிலோமீட்டர் (கேஎம்பிஹெச்) வேகத்தை அதிகப்படுத்துவதனால் மரணமடைவதற்கான வாய்ப்புகள் 3 சதவீதம் அதிகரிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்கிறது. உதாரணமாக, 10 கிமீ வேகத்தில் சென்று விபத்தில் சிக்குவதற்கும் 70 கிமீ வேகத்தில் சென்று விபத்தில் சிக்கும்போது மரணத்திற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரிக்கின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 22 மே 2011)
தமிழில்: எஸ். சுப்ரமணியன் 
நன்றி : தீக்கதிர்

கருத்துகள் இல்லை: