சனி, 28 மே, 2011

பெண் உரிமைகளை தடை செய்யும் பழமைவாதம்

பெண்களுக்கு கல்வி கற்பித்ததால் ஆப்கனில்  தலைமை ஆசிரியை சுட்டுக்கொலை

                அண்மையில் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி கற்பித்ததால் தலைமை ஆசிரியை ஒருவர் தாலிபான் பிற்போக்குவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். எங்களின் எச்சரிக்கையை மீறி பெண்கள் கல்வி கற்றால் இதே போல் சுட்டு கொலை செய்வோம் என்று கல்வி பயின்ற அந்தப் பெண்களையும் எச்சரித்துள்ளனர்.
                ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகில் உள்ள லோகர் என்ற இடத்தில் பெண்கள் பள்ளி ஒன்று உள்ளது. இதில் தலைமை ஆசிரியையாக கான்முகமது பணியாற்றி வந்தார். அங்குள்ள தாலிபான்கள் இஸ்லாமிய சட்டப்படி பெண்கள் கல்வி கற்பதும், பெண்களுக்கு கல்வி கற்பிப்பதும் கூடாது என்று முரண்டுபிடிக்கிறார்கள்.  இதையும் மீறி பெண்களுக்கு கல்வி கற்றுத்தந்ததால் அந்த தலைமை ஆசிரியையை தாலிபான்கள் தொடர்ந்து மிரட்டிவந்துள்ளனர். ஆனாலும் கான்முகமது அதைப் பொருட்படுத்தாமல், கல்வி கற்றுக் கொடுத்து பெண்களை முன்னேற்றச் செய்யவேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன் கல்வி கற்பிக்கும் தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார்.
               இந்நிலையில் கடந்த 25 - ஆம் தேதி அன்று,  கான்முகமது தனது வீட்டிலிருந்து பள்ளிக்குச்  செல்ல வெளியே வந்த போது தாலிபான் பயங்கரவாதிகள் அவரைச் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றனர்.
               ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி பயில்வதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. பழைமைவாதிகள் பெண்கள் பள்ளிகள் மீது தொடர் தாக்குதலை நடத்திவருகின்றனர். பள்ளிக்குச் செல்லும் பெண்கள் மீது ஆசிட் வீசுதல், பள்ளிகளை தீக்கிரையாக்குதல், பெண்கள் பள்ளிக்கட்டடங்களுக்குள் விஷவாயுவை செலுத்துதல் உள்ளிட்ட வன்முறைகளில் பழைமைவாதிகள் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக ஆப்கனில் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்பது வருந்ததற்குரியது.

தடையை மீறி வாகனம் ஒட்டிய பெண் ஒருவர் சவூதியில் கைது

             சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது என்று பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி வாகனம் ஓட்ட முயன்ற பெண் ஒருவர் சவூதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தான் வாகனத்தை ஓட்டும் முயற்சியில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் நாட்டின் மற்றப் பெண்களையும் வாகனம் ஓட்டச் செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார் என்றும் மனால் அல் ஷெரீப் என்கிற அந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிலமணிநேரத்தில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அடுத்த  சிலமணி நேரங்களில்  மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பேஸ்புக் மற்றும் யூ டியூப் மூலம், சவூதி பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமையை அரசு தரவேண்டும் என்ற பிரச்சாரத்தையும் செய்தார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. இந்நிகழ்ச்சி பெண்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த பல பெண்கள் தடையை மீறி வாகனம் ஓட்டும் வீடியோக் காட்சிகளை இணைய தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கும் பெண்கள் திட்டமிட்டுள்ளனர்.
                   மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் பெண் உரிமைக்கெதிரான பழமைவாதத்தின் வளர்ச்சியைத்தான் காட்டுகிறது.
                   இந்தியாவில் ஒழித்துக்கட்டப்பட்ட   பழக்கமான, கணவர் இறந்த பிறகு உடன்கட்டை ஏறும் பழக்கம் மீண்டும் வரவேண்டும் என்று கூறிய  முந்தைய பிரதமர் வாஜ்பாயி, கணவன் இறந்த பிறகு பெண்கள் உயிர் வாழ்வது வீண் என்று பேசிய சம்பவமும்....
                   கணவன் இறந்தபிறகு பெண்கள் களர் நிலம் , அதனால்  உடன்கட்டை ஏறும் பழக்கம் மீண்டும் வரவேண்டும் என்று தன்னை இந்து மதத்தின் தலைவனாகக் காட்டிக்கொள்ளும் சங்கராச்சாரியார் பேசிய சம்பவமும்... இப்போது என் நினைவுக்கு வருகிறது.
                   மதத்தின் பேரால் பெண் உரிமைக்கெதிரான  பழமைவாதம்  நாட்டின் உள்ளே நுழைந்தால், அதை அனுமதிக்க முடியாது. முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

கருத்துகள் இல்லை: