செவ்வாய், 10 மே, 2011

குழந்தைகள் என்ன வித்தைக்காட்டும் குரங்குகளா ?

                 நேற்று தான் +2 - தேர்வு முடிவுகள்   வெளியானது. தேர்வு முடிவை வெளியாகும் தேதியை தமிழக பள்ளிக்கல்வி  அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தவுடனேயே பல மாணவர்களுக்கு, இவருக்கு தேர்தல் முடிவு தெரியும் முன்னரே தேர்வு முடிவை அறிவிக்கிறாரே என்கிற எரிச்சல். தேர்வு முடிவு நாள் நெருங்க நெருங்க  நம்ம மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் ரொம்ப டென்ஷன்ல தாங்க  இருந்தாங்க. பெற்றோர்கள் மூஞ்சில ஈயாடல. முடிவு நாளன்று ஒரே பரபரப்பு தான். கோயிலுக்குப் போறாங்க. வாசலுக்கும் வீட்டுக்கும் நடந்துகிட்டே இருக்காங்க.   யாரு கூப்பிட்டாலும் காதுல விழமாட்டேங்குது. அவ்வப்போது அலறும் செல்போன் சத்தம் எரிச்சலூட்டுகிறது. அந்த சனியன ஆப் பண்ணித் தொலையேன். இப்படியாகத் தான் பிளஸ் டூ தேர்வு எழுதிய  மாணவ-மாணவியர் வீடுகளெல்லாம் ஒரே  கலவரங்களாகவும், ஆர்ப்பாட்டங்களாகவும் காட்சியளித்தன.   
                தேர்வு முடிவு நாள் தான் , Pre-KG - லிருந்து பதினைந்து ஆண்டுகள் அவர்கள் படித்த படிப்பின் பலன் கிடைக்கப்போகும் நாள். குழந்தை பிறந்தவுடனேயே படிக்கப்போகும் குழந்தையை ஆலோசனைச் செய்யாமலேயே, பெற்றோர்களே முடிவு செய்து, அதை குழந்தைகள் மீதே திணித்து, இரண்டு வயதானவுடனேயே அந்தக்குழந்தையை பள்ளியில் சேர்த்து அவர்களை நச்சரித்து படிக்கவைத்து, குழந்தைப்பருவத்தில் அவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைகளையும் பொழுது போக்குகளையும் அவர்களுக்குக் காட்டாமல், டி.வி. மற்றும் சினிமா இவைகளெல்லாம் என்னவென்றே தெரியாமல் வளர்த்து, எல்லா பாடத்திலும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்குகிற பள்ளியில் -  மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெறுகிற பள்ளியாகப் பார்த்து டொனேஷன் கொடுத்து முட்டி மோதி சீட் வாங்கி, விடியற்காலையில் எழுப்பி டியூஷனுக்கு அனுப்பி, பிறகு பள்ளிக்கு அனுப்பி, மாலை அப்படியே வீட்டுக்கு வராமல் டியூஷனுக்கு அனுப்பி, குழந்தைகள் பெற்றவர்களையே பார்க்கும் நேரத்தைக் குறைத்து, விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாமல், தன பக்கத்தில் படிக்கும் சக மாணவனே தன்னை விட அதிக மார்க்குகள் பெற்றுவிட்டால் அவனை தன்னுடைய போட்டியாளனாக - எதிரியாக நினைத்துக்கொண்டு, தாத்தா-பாட்டி போன்ற உறவு முறைகளே தெரியாமல், வெளி உலகமே புரியாமல்... இப்படியாக ஒரு எந்திர மனிதனைப்போல் அவர்களை வளர்த்து....குழந்தைகளை வித்தைக்காட்டும் குரங்குகளாகத்தான் பெற்றோர்கள்  இன்றைக்கு மாற்றி இருக்கிறார்கள் என்று சொன்னால் யாரும் அதை மறுக்க முடியாது.  
                  குழந்தைகள் தாங்கள் எதிர்பார்த்தது போல் மதிப்பெண்கள் வாங்கவில்லைஎன்றால் முதலில் கவலைப்படுபவர்கள் பெற்றோர்களாகத் தான் இருப்பார்கள். 
                  நேற்று எங்களுக்கு தெரிந்த குடும்ப நண்பர்கள் வீட்டில் ஒரே அழுகை மயம். ஒருப் பக்கம் பிளஸ் டூ எழுதிய பெண்ணின் அம்மா ஓயாமல் தேம்பித்தேம்பி அடக்கமுடியாமல் அழுதுகொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அந்தப் பெண் அழுதுகொண்டிடுக்கிறது. அப்பாவோ தலையில் கையை வைத்துக்கொண்டு உக்கார்ந்துட்டு இருக்கிறார். அந்த பொண்ணு அப்படி ஒன்றும் பெயில் ஆகிறப் பொண்ணுமில்லையே என்று நாங்க குழம்பிப்போனோம்.  மெல்ல அந்த பெண்ணிடம் எவ்வளவு மார்க் மா வாங்கி இருக்கிற. அன்று கேட்டேன் மிகவும் அதிர்ச்சியாய் இருந்தது. என்ன மார்க் தெரியுமா.. ரொம்ப அதிகமெல்லாம் கெடையாது.  1200-க்கு வெறும் 1191 மார்க்கு தான் வாங்கி இருக்காம். இதுக்குப் போயா அழுவுரீங்கன்னு அந்த அம்மாவை கேட்ட போது, நான் என் பொண்ணு மாநிலத்திலேயே முதல் மாணவியா வருவான்னு எதிர்பார்த்தேன். ஆனா ஸ்கூலிலேயே மூணாவது இடத்துக்கு தான் வந்திருக்கா என்று சொல்லி இன்னும் அடக்க முடியாமல் அழுகிறார்கள்.
எனக்கு அப்படியே சுவற்றில் முட்டிக்கொள்ளவேண்டும் போல் இருந்தது.
                அடுத்து இன்னொரு தெரிந்தவர்கள் வீடு.. ஒரே மயான அமைதி.. காலையில் ரிசல்ட் -ஐ  பார்த்துவிட்டு காலை உணவு சாப்பிடலாம் என்றிருந்தவர்கள், மதிய சாப்பாடும் சாப்பிடாமல் அம்மாவும் பொண்ணும் ஆளுக்கொரு மூலையாக உம்மென்று உட்கார்ந்திருந்தார்கள்.  பாவம் அந்தப்பெண் பெயிலாயிடுத்தோ என்று பதறிப்போய் என்னம்மா மார்க்  என்று கேட்டேன். 1200-க்கு 979 மார்க் வாங்கி தேர்ச்சிபெற்றிருக்கிறது அந்தப்பெண். 
அப்படின்னா நீங்க ஏன் இவ்வளவு துக்கமா இருக்கீங்கன்னு கேட்டது தான் தாமதம் அந்த அம்மா ஓவென்று வெடித்து அழ ஆரம்பித்துவிட்டது. 1000-க்கு மேல மார்க் எடுத்திருந்தா பி. இ., சேர்ந்திருக்கலாம். இவ குழந்தையா இருந்த காலத்திலிருந்து பி. இ., படிக்கணும் என்ஜினிராகனும்னுலாம் கனவு கண்டு வந்தேன்.. நல்லா தலைல இடிய தூக்கிப்போட்டுட்டா.  இதுக்கும் ஏதாவது சுவத்துல பொய் முட்டிக்கணும்போல் இருந்தது. 
                 தேர்வு முடிவு பரபரப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்க ஒரு பள்ளிக்கு 
சென்றிருந்தோம். அங்கே ஒரு பெண்ணை ஒரு ஆசிரியை என்ன மார்க் வாங்கியிருக்கே என்று திட்டிக்கொண்டிருந்தார்கள். பதிலுக்கு அந்தப் பெண்ணின் அப்பா நானும் சொல்லிசொல்லித் தான் பார்த்தேன் மேடம். இவதான் சரியா படிக்கவில்லை   என்று புலம்பிக்கொண்டிருந்தார். அந்தப்பெண் என்ன மார்க் என்று கேட்டதும். அதிர்ந்துப்போனேன். என்ன மார்குன்னா... 991 மார்குகள் அந்தப்பெண் பெற்றிருப்பதாக சொன்னார்கள்.. கேட்டது எனக்கு கோபமாய் வந்தது..  
                  மேலே சொன்னது ஒரு சிறு உதாரணம் தான்... நாலு இலக்க மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் மாநிலத்திலேயே முதலிடம் அல்லது பள்ளியிலேயே முதலிடம் வரமுடியலையே என்று புலம்புகிறார்கள். 
                   மூன்று இலக்க மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் நான்கிலக்க மதிப்பெண்கள் பெறவில்லையே என்று ஆதங்கபடுகிறார்கள்.
இஞ்சினீரிங் கல்லூரியில் சேர்த்து படிக்க முடியாதே என்றும் புலம்பித்தள்ளுகிறார்கள். 
                   இவர்களுக்கென்ன,  குழந்தைகள் வித்தைக்காட்டும் குரங்குகள் என்று நினைத்தார்களோ...?
                   உலகமயம் இன்று கல்வியையும் குழந்தைகளையும் பெற்றோர்களையும் சீரழித்திருக்கிறது. உலகமயத்தின் தாக்கத்தால் கல்வி வியாபாரமயமாகி இருக்கிறது. மாணவர்கள் பெரும் தேர்ச்சி எண்ணிக்கைகளை காட்டி.. அவர்கள் பெரும் மதிப்பெண்களை காட்டி தனியார் பள்ளிகளின் தரத்தை உயர்த்திக்காட்டுகிறார்கள். இந்தக் கல்விமுறை அறிவை வளர்க்கவில்லை. மாறாக போட்டியை வளர்த்திருக்கிறது. 
                  இந்தக் கல்விமுறை கல்வியாளர்களை உருவாக்கவில்லை. கல்வியின் பேரால் கட்டணக் கொள்ளையர்களைத்தான் உருவாக்கி இருக்கிறது. இந்தக்கல்வி முறை என்பது மாணவர்களை உருவாக்கவில்லை. மாறாக, போட்டியாளர்களைத் தான் உருவாக்கி இருக்கிறது. இந்தக் கல்விமுறை மாணவ மாணவியர் இடையே சக நண்பர்களை உருவாக்கவில்லை. மாறாக, பொறாமைக்காரர்களைத்  தான் உருவாக்கி இருக்கிறது என்பது  தான் வேதனையாயிருக்கிறது.  
                 இந்தக் கல்விமுறை சமூகத்தின் மீது அக்கறையுள்ள - தேசத்தின் மீது அக்கறையுள்ள  அறிவார்ந்த மனிதர்களை உருவாக்கவில்லை. மாறாக, மதிப்பெண்கள் அதிகம் பெற்ற  முட்டாள்களையும், கோழைகளையுமே உருவாக்கி இருக்கிறது என்பதுமட்டுமல்ல சமூகத்தின் மீதோ தேசத்தின் மீதோ அக்கறை இல்லாதவர்களாக உருவாக்கி இருக்கிறது.
                  குழந்தைகளை, பெற்றோர்கள் விருப்பப்படி படிகின்ற , மதிப்பெண் பெறுகின்ற எந்திரர்களாக மாற்றும் வழக்கத்தை மாற்றவேண்டும். குழந்தைகளுக்கு அவர்கள் வயதில் பொழுதுபோக்குகளும், விளையாட்டுகளும், வேடிக்கைகளும், விருப்பங்களும், உரிமைகளும் இருக்கின்றன என்பதை இந்தச் சமூகம் உணரவேண்டும். முதலில் பெற்றோர்கள் உணரவேண்டும். நம் வீட்டுக் குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் தான். அதை மறுக்கவில்லை. அதை அவர்கள் வேடிக்கையாய் செய்யட்டும். அதை அவர்கள் விருப்பமாய் செய்யட்டும். நாம் படிக்கும் கல்வி என்பது நாம் மட்டுமே பணம் பண்ணுவதற்கு தான் என்கிற எண்ணமில்லாமல் கல்வியோடு விருப்பமாய் பழகட்டும். கல்வி என்பதை  குழந்தைகளுக்கு புத்தகச் சுமையோடு மனச் சுமையையும் மனச் சோர்வையும் உண்டாகும் கருவியாக மாற்றிவிடாதீர்கள். 
                 பெற்றோர்களே... கல்வி என்பது குழந்தை என்னும் களிமண்ணை எல்லா சிறப்புகளும் பெற்ற மனிதனாக உருவாக்கும் கருவியாகும். ஆசிரியர்கள் அப்படிப்பட்ட மனிதர்களை உருவாக்கும் சிற்பிகள் ஆவார்கள். பள்ளி என்பது நல்ல சிந்தனையோடு மனிதர்களை உருவாக்கும் சிந்தனைக்கூடமாகும். நம் வீட்டுக் குழந்தைகளை இந்த சிந்தனையோடு வளருங்கள். குழந்தைகள் நம் விருப்பப்படி ஆடும் வித்தைக்காட்டும் குரங்குகளல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை: