வியாழன், 5 மே, 2011

தேசியகவி தாகூர் -150

                    ரவீந்தரநாத் தாகூர் என்கிற மாமனிதனின் 150-வது  பிறந்தநாள் மே 7-ஆம் தேதி உலகெங்கும்  சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது. 
                    இந்தியாவிற்கு தேசியகீதம் தந்த தேசியகவி.. இந்தியாவிற்கு மட்டுமல்ல நமது சகோதர நாடான பங்களாதேஷ் நாட்டிற்கும் தேசியகீதம் தந்தவர்.
                    தாகூர்.. கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை, நாடகம் போன்ற அனைத்து எழுத்துலகப் படைப்பாளி. நாட்டுப்பற்று, பெண்ணியம், கலாச்சாரம்,
உலக அமைதி, சுற்றுச்சூழல், மனிதநேயம் போன்ற கருத்துக்களை தன் எழுத்தில் தீட்டிய முற்போக்கு எழுத்தாளர். வண்ணங்கள் தீட்டி ஓவியங்கள் வரைவதில் வல்லவர். சாந்திநிகேதன் என்கிற கல்விநிலையம் அமைத்த உண்மையான கல்வியாளர் ( இன்றிருப்பவர்களை போலல்ல). இன்றும் அந்த கல்விநிலையம் கொல்கத்தாவில் ஒரு பெருமைவாய்ந்த பல்கலைக்கழகமாக உயர்ந்து நிற்கிறது.   நிறைய புத்தகங்களை படித்த சிந்தனையாளர். இந்திய மக்களுக்காக ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்திய பெருமைக்குரியவர். 
                  இப்படி பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு மாமனிதனின் 150-வது பிறந்தநாளை இந்தியா, சீனா, பங்களாதேஷ், சிங்கபூர், இலங்கை உட்பட உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. அந்த கொண்டாட்டத்தில் நாமும் நம்மை இணைத்துக்கொள்வோம். 
                  இந்திய காப்பீட்டுத்துறையில் தாகூருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே, ஹிந்துஸ்தான் கோ-ஆப்பரேட்டிவ் லைப் அஷூரன்ஸ் சொசைட்டி என்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை தனது வீட்டிலேயே நடத்தி வந்தார்.  பிற்காலத்தில் சுதந்திர இந்தியாவில்  தனியார் வசமிருந்த இன்சூரன்ஸ் துறை தேச உடைமை ஆவதற்கு தாகூரின் இந்த காப்பீட்டு நிறுவனம்  மிகப்பெரிய பங்களித்திருக்கிறது.  மக்களின் சேமிப்பு நிதியை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி முதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள். எனவே இன்சூரன்ஸ் துறையை தேச உடைமை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முழக்கமிட்டு, தாகூரின் இந்த நிறுவனத்தில் வேலை செய்த தோழர் சரோஜ் சௌத்ரி உள்ளிட்ட தோழர்களின் போராட்டக்கரங்கள் இணைந்ததால் உதயமானது தான் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்பது இந்த நேரத்தில் நினைவு கூறத்தக்கது. 
          தாகூரின் 150-வது பிறந்தநாளில் அவரின் நினைவை போற்றுவோம்..

கருத்துகள் இல்லை: