வியாழன், 5 மே, 2011

தமிழர்கள் மாண்டது போதும் - அவர்களின் தேவை வாழ்வாதாரம்

பொதுவாக தமிழக அரசியலில் காங்கிரஸ் ஆட்சி முடிந்து  திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததில் தொடங்கி இன்று வரை தமிழக மக்களின் உணர்வுகளை  உசுப்பேத்தி உசுப்பேத்தி உணர்ச்சிசயப்பட  செய்து அதிலே அரசியல் லாபம் காண்பது தான் வழக்கமாக இருந்துவருகிறது.
               விலைவாசி உயர்வு, கல்விக்கட்டணம் உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வாழ்க்கை நடத்துவதற்கே போதுமான வருமானமின்மை - இப்படியாக மக்கள் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் போது தமிழக அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் ஹிந்தி மொழி திணிப்பு பிரச்சனை, வட இந்தியா-தென்னிந்தியா பிரச்சனை, காவிரி நீர் பிரச்சனை, இலங்கைத்தமிழர் பிரச்சனை போன்ற உணர்வுகளுக்கு இடம்கொடுக்கும் பிரச்சனைகளை தமிழக மக்களின் மனதில் எரியவிட்டு இன்றுவரை தமிழக அரசியல்வாதிகள் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
                அப்படி நம்முடைய உணர்வுகளை கிளப்பிய பிரச்சனைதான் இலங்கைத் தமிழர் பிரச்சனை. இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதில், கொழுந்துவிட்டு எரியும் அந்தப் பிரச்சனையை காட்டி இங்குள்ள தமிழ் மக்களின் உணர்வுகளை கிளறிவிட்டு தங்களை உண்மையான தமிழினத் தலைவர்களாகக் காட்டிகொள்வதில் போட்டிப்போடுகிறார்கள். கருணாநிதி, வீரமணி, வைகோ மற்றும் இன்னும் சில குட்டித் தலைவர்கள் போன்றவர்கள் மக்களின் உணர்வுகளை கிளப்பிவிட்டு அரசியல் வியாபாரம் செய்பவர்கள் என்பது தான் யாரும் மறக்க முடியாத உண்மை. இலங்கையில் விடுதலைப்புலிகள் வளர்ந்ததற்கும், அவர்கள் வீழ்ந்ததற்கும் மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், எஞ்சியுள்ள தமிழர்கள் இன்று அல்லலுருவதற்கும் இவர்களே காரணமானவர்கள். இலங்கைப்பிரச்சனையைப் பற்றிய அரசியல் ரீதியான புரிதல் இல்லாத நம் தமிழ் மக்களிடம் பகுத்தறிவோடு புரிதலை  உண்டுபண்ணத்  தவறியவர்கள் இவர்களே.
               அதனால் உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் - உணர்ச்சிவசப்படாமல்  இந்தக் கட்டுரையை படிக்க வேண்டுகிறேன்.  
 இலங்கைப் பிரச்சனைகள், அவற்றுக்கான காரணங்கள், அவைகளுக்குப் பின்னால் இருந்து இயக்கியவர்கள், யார் தவறு-யார் சரி  இப்படியாக பல்வேறுப் பிரச்சனைகள் சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றுக்குள் நான் செல்லவிரும்பவில்லை.
                விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இலங்கை உள்நாட்டுப் போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்- பட்டிருப்பதையும் எஞ்சியுள்ள தமிழ் மக்களும் வாழ்வாதாரம் தேடி அல்லல்பட்டுக் கொண்டிருப்பதையும் ஐ. நா சபை கண்டித்திருக்கிறது.  அதுமட்டுமில்லாமல் இலங்கையரசு ஒரு போர்க்குற்றவாளி என்றும் பிரகடனம் செய்திருக்கிறது. ஐ. நா.பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூன்று பேர் கொண்ட குழு இலங்கைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்த்து - விசாரணைகள் செய்து 196 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 
                அந்த அறிக்கையை எந்தவிதமான் உணர்வுகளுக்கும் இடமளிக்காமல் நடுநிலையோடு விவாதிக்கவேண்டும். இலங்கையில் மனித உரிமை என்பது அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை இலங்கை அரசின் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் பலவிதமான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறது. 

இலங்கை அரசின் மீதான 5 குற்றச்சாட்டிகள்
                
            (1) போரில் புலிகள் மீது தாக்குதல் நடத்தும் போதே அப்பாவி பொதுமக்கள் (தமிழர்கள்) மீதும் ராணுவம் குண்டுகளை பொழிந்திருக்கிறது. 
            (2) போரில் காயமடைந்தவர்களும் நோயாளிகளும் சிகிச்சைப்பெற்று வந்த மருத்துவமனைகளிலும் இலங்கை ராணுவம் குண்டுகளை பொழிந்திருக்கிறது. 
            (3) போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பப்பட்ட உணவு மற்றும் மருந்துகள் அவர்களுக்கு கொடுக்கப் படாமல் நிறுத்தப்பட்டிருகிறது. 
            (4) போர் நடந்த காலத்திலிருந்து இன்று வரை பத்திரிக்கைகாரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. 
            (5) புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர்களையும் இளம்பெண்களையும் இலங்கை ராணுவம் எங்கோ கொண்டு சென்றிருக்கிறார்கள். அவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை. 
            இது தான் போர்க்குற்றவாளியான இலங்கையரசின் மீது ஐ. நா. அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள  குற்றச்சாட்டுகள்.

விடுதலைப்புலிகள் மீதான 6 குற்றச்சாட்டுகள்

             (1) புலிகள் போரில் தங்களை பாதுகாத்துக்கொள்ள அப்பாவி தமிழ் மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தினார்கள்.
             (2) சிறுவர்களையும் புலிகள் தன்னுடையப் படையில் சேர்த்து போரில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.
             (3) புலிகள் போர் பிரதேசமில்லாதப் பகுதிகளான பள்ளிக்கூடம், நூலகம், மருத்துவமனை போன்ற பொதுமக்கள் நடமாடும் பகுதிகளிலிருந்தும் ராணுவத்தை தாக்கி இருக்கிறார்கள். ( பழமையும் பெருமையும் வாய்ந்த யாழ் நூலகம் அப்படித்தான் எரிந்து நாசமானது என்பது குறிப்பிடத்தக்கது )
             (4) போருக்கு பயந்து - உயிர் வாழ ஆசைப்பட்டு தப்பியோடிய புலிகளை 
விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.
             (5) சிறுவர்களையும் வயதானவர்களையும் பதுங்கு குழி வெட்டுவது போன்ற போர் சம்பந்தமான வேலைகளை வாங்கி இருக்கிறார்கள்.
             (6) விடுதலைப்புலிகளை  எதிர்த்துப் பேசியவர்களை சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். 
              இது தான் விடுதலைப்புலிகள் மீது ஐ. நா. அறிக்கை சுட்டிக்காட்டும் குற்றச்சாட்டுகள்.
               நடந்தப் போரில் இருவர் பக்கமும் வேறுவேறு விதமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இன்றைக்கு விடுதலைப்புலிகளை அழித்துவிட்டார்கள். அவர்களை தண்டிக்க வழியில்லை. ஆனால் இலங்கை அரசை தண்டிக்கவேண்டாமா என்பது தான் நமது கேள்வி. 
              இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் இலங்கை அதிபர் ராஜபக்சேவால்
மறுக்க முடியுமா என்பது தான் நம் கேள்வி.
              இன்னும் தமிழர்கள் மீதான கொடுமைகளை அந்த அரசு செய்துகொண்டுதான் இருக்கிறது. 
              தமிழர்கள் அதிகமாக வாழும் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் சிங்களர்களை குடியேற்றுகிறது அந்த அரசு. 
              இன்னும் அங்குள்ள தமிழர்கள்  சொந்த நாட்டிலேயே  முள்வேலியில் அடைக்கப்பட்டு அகதிகளாக வாழ்கிறார்கள். வாழ்வாதாரத்திற்காக ஏங்கித் தவிக்கிறார்கள்.
               சொந்த மக்களையே கொன்று குவித்துவிட்டு வெற்றிபெற்றுவிட்டோம் என்று இலங்கையரசு கொண்டாடுவது  என்பது   மனிதகுலத்துக்கு எதிரானது. 

இங்குள்ள தமிழினத்தலைவர்கள் செய்யவேண்டியது என்ன ?              
  
               தமிழகத்திலிருந்து இலங்கையில் உள்ள நிலைமைகளை கண்டுவர  சென்றவர்களிடம் அங்குள்ள தமிழர்கள் "நீங்க பேசினதெல்லாம் போதும்..  இனிமேலும் நீங்க யாரும் பேசவேண்டாம்" என்று கையெடுத்து கும்பிட்டார்களாம். அங்குள்ள தமிழர்கள் அத்துணை கொடுமைகளையும் அனுபவித்து, உற்றாரையும் உறவினர்களையும் கண்ணுக்கு எதிரிலேயே இழந்துவிட்டு  இன்று உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வெளிச்சம் தேவை. அவர்களுக்கு அமைதி தேவை. அவர்களுக்கு நிம்மதி தேவை. அவர்களுக்கு பயம் நீங்கிய வாழ்வாதாரம் தேவை. அவர்களுக்கு இங்குள்ள தமிழினத்தலைவர்களின் உணர்ச்சிகரமான வசனங்கள் தேவை இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மீண்டும் மீண்டும் உசுப்பேத்தி உசுப்பேத்தி உணர்ச்சிகரமான வசனங்களை பேசாதீர்கள். அப்படிப்பட்ட வசனங்கள் நீங்கள் ஓட்டுகளை பொறுக்குவதற்குத் தான் பயன்படும். அங்குள்ளத் தமிழர்களுக்கு எந்தவகையிலும் பயன்படாது. 
இலங்கைத்தமிழர்களை அமைதியுடனும் நிம்மதியுடனும் வாழவிடுங்கள். அதைத்தான் அவர்களும் எதிர்பார்கிறார்கள்.
               
               #  இலங்கை அரசு அப்பாவி தமிழ் மக்களை கொல்வதை 
நிறுத்துதற்கும்                
               #  பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு இலங்கை அரசை  உத்திரவாதப்படுத்துவதற்கும்
              #   பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் பகுதியில் சிங்களர்களை குடியமர்த்துவதை தடுத்து நிறுத்துவதற்கும் 
              #  எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை அரசு மனசாட்சி இல்லாமல் செய்த போர்க்குற்றத்திற்கும்
              இந்திய அரசு இலங்கை அரசின் மீது அரசியல் ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை உடனான ராஜ்ய உறவை மறுப்பரிசீலனைச் செய்யவேண்டும். 
               
             இதைதான் இங்குள்ள தமிழினத்தலைவர்கள் மத்திய அரசை நிர்பந்திக்க போராட்டம் நடத்தவேண்டுமேதவிர உணர்ச்சிமிக்க வசங்களை பேசி அல்லது உண்ணாவிரதமிருந்து காலத்தை கழிக்கவேண்டாம். இதை தான் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்கிறார்கள்.

    

கருத்துகள் இல்லை: