ஞாயிறு, 29 மே, 2011

மத்திய அரசின் அலட்சியம் : தடுப்பூசிப் போடப்பட்ட குழந்தைகள் மரணம் அதிகரிப்பு

              சமீபகாலமாக, குறிப்பாக 2008 - ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியாவில் தடுப்பூசி போட்டதன் காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது நமக்கெல்லாம் ஒரு  அதிர்ச்சியான  தகவல்.    அண்மையில் கேரள மாநிலம் கண்ணுரைச் சேர்ந்த கே. வி. பாபு என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்டக் கேள்விக்கு மத்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் கொடுத்த தகவல் தான் இது என்பது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. 
               AEFI - Adverse Effect From Immunisation என்று சொல்லக்கூடிய தடுப்பூசி போடப்பட்டதால் ஏற்பட்ட குழந்தைகள் மரணம் என்பது, 2001- ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை 136 எனவும், அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் 2008 முதல் 2010 வரை 355 குழந்தைகள் மரணமடைந்திருக்கிறார்கள் என்கிற உண்மை மத்திய அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது.
               மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மேலும் 2001 முதல் 2010  வரை தடுப்பூசி  போடப்பட்டதால் மரணமடைந்த குழந்தைகளின் எண்ணிக்கையையும் வெளியிட்டிருக்கிறது. 2001 - ஆண்டு அப்படிப்பட்ட குழந்தை மரணம் இல்லை. அதே சமயத்தில் 2002 - ஆம் ஆண்டு ஆறு குழந்தைகளும், 2003 - ஆம் ஆண்டு 13 குழந்தைகளும், 2004 - ஆம் ஆண்டு 23 குழந்தைகளும், 2005 - ஆம் ஆண்டு 18 குழந்தைகளும், 2006 - ஆம் ஆண்டு 54 குழந்தைகளும்,  2007 - ஆம் ஆண்டு 32 குழந்தைகளும், 2008 - ஆம் ஆண்டு 111 குழந்தைகளும், 2009 - ஆம் ஆண்டு 116 குழந்தைகளும், 2010 - ஆம் ஆண்டு 128 குழந்தைகளும் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது  அரசே தரும் தகவல் என்றால் உண்மையான மரண எண்ணிக்கை நிச்சயம் அதிகமாக இருக்கும். 
                 தடுப்பூசியால் உண்டாகும் குழந்தைகள் மரணத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் : 
               ஒன்று - இடதுசாரிகள் ஆதரவு பெற்ற  சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - 1 - இன் ஆட்சிகாலத்தில் - இடதுசாரிகளின் கண்காணிப்பில் ஆட்சி நடந்தபோதே அன்புமணி ராமதாஸ் போன்ற சுயநலக்காரர்கள் மத்திய அமைச்சர் என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படித்தான் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது   மத்திய அரசுக்கு   சொந்தமான இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த  103 -  ஆண்டுகள் வயதான  Central Research Institute (CRI ), தமிழ்நாட்டிலுள்ள குன்னூரில் இருக்கும் நூறு ஆண்டுகளைக்  கடந்த Pasteur Institute of India ( PII ), சென்னையிலிருக்கும்  அறுபது  ஆண்டுகளைக்  கடந்த          BCG Vaccine Laboratory ( BCGVL ) போன்ற தடுப்பூசி நிறுவனங்களை 2008 -ஆம் ஆண்டு தன்னிச்சையாக மூடிவிட்டார் என்பது மட்டுமல்ல அதன் பிறகு தனியார் நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளையே குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தியதால் தான் 2008, 2009, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கிறது என்பது மறைக்க முடியாத உண்மை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டுக்குப் பிறகு மூடப்பட்ட அந்த நிறுவனங்கள் இன்றைக்கு திறக்கப்பட்டிருக்கிறது.
               இரண்டு - முன்பெல்லாம் ஒரு நாடு தடுப்பூசிகளோ,  மருந்துகளோ புதிதாக கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அந்த கண்டுபிடிப்புகளை குரங்கு, எலி போன்றவற்றிற்கு செலுத்தி சோதனை செய்தபிறகு தான் அதன் வெற்றியை பொறுத்து மக்களுக்கு செலுத்துவார்கள். அப்படி செய்தால் மக்களுக்கு பாதிப்புகளோ உயிரிழப்புகளோ இருக்காது. ஆனால், இன்றைக்கோ  அமெரிக்கா மற்றும் அதை சார்ந்த நாடுகள் புதிய தடுப்பூசிகளோ  அல்லது புதிய மருந்துகளோ கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அதை குரங்கு - எலி போன்றவற்றிற்கு செலுத்தி சோதனைச் செய்வதில்லை. நேரடியாக மனிதர்களுக்கே போட்டே சோதனை செய்கிறார்கள். அந்த மனிதர்கள் வேறு யாருமல்ல - இந்தியர்கள். அதுவும் குறிப்பாக கிராமப்புறங்களில் - சேரிகளில் வாழும் தலித் மக்களைத்  தான் இன்றைக்கு சோதனை எலிகளாக பயன்படுத்துகிறார்கள். இந்த வகையான சோதனை என்பது மத்திய அரசின் அனுமதியில்லாமல் நடைபெற வாய்ப்பில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இப்படித்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன் புதுடெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவன மருத்துவமனை ( AIIMS ) -யில்   தனியார் தயாரித்த புதியவகை தடுப்பூசி போடப்பட்டதால் ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணமடைந்திருக்கிறார்கள் என்பதும் மறைக்க முடியாத உண்மை.
                அண்மையில் சென்ற ஆண்டு, பெண்களுக்கு விலா எலும்பில் வரக்கூடிய cervical cancer என்கிற புதிய வகை புற்றுநோய்க்கு தடுப்பூசி புதிதாக கண்டுபிடிக்கப் பட்டிருகிறது. அது ஒரு அமெரிக்க நிறுவனம் என்றும் சொல்லபடுகிறது. அப்படி கண்டுபிடிக்கப் பட்ட புதுவகை தடுப்பூசியை ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கிராமங்களில் வாழும் பத்து வயது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட தலித் பெண் குழந்தைகளுக்கு போட்டு சோதனை செய்தார்கள். அதில் ஆறு பெண் குழந்தைகள் மரணமடைந்தார்கள். பத்திரிகைகளிலும் செய்தியாக வந்தது. அன்றைய தினம், பாராளுமன்ற மாநிலங்களவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் பிருந்தா காரத்  இந்த பிரச்சனையை எழுப்பி கண்டித்துப் பேசியதுமட்டுமல்லாமல், பெண் குழந்தைகளுக்கு அந்த புதிய வகை  தடுப்பூசி போடுவதை நிறுத்தவும் செய்தார்.
                 மேற்குறிப்பிட்ட இரண்டு தகவல்களும், நம் நாட்டு குழந்தைகள் மீதான மத்திய அரசின் அலட்சியத்தையும் , பொறுப்பின்மையையும் தான் காட்டுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு காட்டுகிற அதீத விசுவாசம் நம் நாட்டுக் குழந்தைகளை பலி வாங்குகிறது என்பது தான் உண்மை.  

தகவல்கள் : The Hindu / 29-05-2011

1 கருத்து:

S.Raman,Vellore சொன்னது…

Both the Doctors wanted to recapture the Union Health Ministry once again. The People of Tamil Nadu
taught them very good lesson.
otherwise they will kill more people