சனி, 14 மே, 2011

மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிந்திருக்கிறார்கள் தமிழக மக்கள்

              கடுமையான விலைவாசி உயர்வு, மோசமான மின்வெட்டு, விவசாயிகள் - தொழிலாளர்கள் பாதிப்பு, 
வேலையின்மை அதிகரிப்பு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, திரைப்படத்துறையில் கருணாநிதி குடும்பத்தின் ஆக்கிரமிப்பு, ஆட்சியில் கருணாநிதி குடும்பத்தின் தலையீடு, அதிக வருமானம் தரக்கூடிய இலாபம் கொழிக்கக்கூடிய அனைத்துத் துறைகளிலும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள்  ஆக்கிரமிப்பு, இடைத்தேர்தலில் பணத்தை இரைத்து வாக்குகள் சேகரிப்பு,  கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் முறைகேடான முறையில் சொத்து சேர்ப்பு, இளைய மகனுக்கு முதலமைச்சராக பட்டாபிஷேகம் செய்து பார்க்க துடிப்பு   - இப்படியாக கடந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் அவலங்களை  நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம். அதுமட்டுமல்ல மத்தியிலும் ஆட்சியில் பங்கெடுத்துக்கொண்டு கருணாநிதியின் குடும்பமே     2 - ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் செய்து பணம் சேர்த்தது.   இவைகள் தான் மக்கள் திமுக-வின் மீது மக்கள் இவ்வளவு கோபத்தைக்காட்டி தூக்கி எரிந்ததற்குக் காரணம் என்பதை யாரும் மறக்க முடியாது. அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் அ. இ. அ. தி. மு. க. கூட்டணி இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற முடிந்திருக்கிறது.  அதுமட்டுமல்ல, தமிழக மக்கள் எம். ஜி. ஆரை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த போதும் கூட திமுக-வை சட்டமன்றத்தில் இரண்டாவது இடத்தில் - எதிர்க்கட்சி வரிசையில் வைத்திருந்தனர். ஆனால் இந்த தேர்தலிலோ திமுக-விற்கு மூன்றாவது இடத்தைக் கொடுத்தது மட்டுமல்லாது, அதிமுக கூட்டணியிலேயே இருக்கும் விஜயகாந்த் கட்சிக்கு இரண்டாவது இடத்தை கொடுத்தும் எதிர்க்கட்சி தலைவர் என்கிறப் பொறுப்பும் கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது திமுக-வின் மீது கருணாநிதியின் மீது மக்களுக்குள்ள கோபத்தின் வலிமை எப்படிப்பட்டது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 

தேர்தல் முடிவின் பாடங்கள் :                  

                பாடம்  - 1:  கடந்த ஐந்து ஆண்டுகளில் 2006-ஆம் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்  அதிமுக-வின் தலைவர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாரே தவிர  ஒரு பொறுப்பான எதிர்கட்சித்தலைவராக செயல்பட்டிருப்பாரா என்றால், இல்லை என்று தான் பதில் வரும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஓரிரு முறை தான் சட்டமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பதும் வெளிப்படையான உண்மை. வருகைப்  பதிவேட்டில் கையெழுத்து இடுவதோடு அவரது எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பு முடிந்துவிடும். 
                 அதுமட்டுமல்ல,  கடந்த ஐந்து ஆண்டுகளில் மேலே சொன்ன மக்கள் பிரச்சனைகளுக்காக ஒரு போதும் வீதியில் நின்று போராடியவர் இல்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு மூன்று அல்லது நான்கு  பொதுக்கூட்டங்கள் தான் நடத்தி இருப்பார். பொறுப்பான எதிர்கட்சித்தலைவர் என்கிற முறையில் பொதுமக்களை சந்திப்பதற்கு மாறாக போயஸ் தோட்டத்து வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பார் அல்லது கொடநாடு சென்று ஓய்வு எடுப்பார் என்பது தான் கடந்த ஐந்து ஆண்டுகால எதிர்க்கட்சித்தலைவரின் முக்கியப் பணியாக இருந்தது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. தேர்தல்-தேர்தலுக்கு தான் ஒட்டுக்கேட்டு வீதியில் வளம் வரக்கூடிய எதிர்க்கட்சித்தலைவராகத் தான் இருந்தார் என்பதும் யாரும் மறுப்பதற்கில்லை.
                இப்படிப்பட்ட, ஒரு கட்சித் தலைவரைத்தான் தமிழக மக்கள் அதிகமான  வாக்குகளை கொடுத்து அதிகமான இடங்களில் வெற்றிபெறச் செய்து ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள் என்றால் அதற்கு அதிமுக மீதோ அல்லது செல்வி.ஜெயலலிதா மீதோ தமிழக மக்கள் வைத்திருக்கும் நன்னம்பிக்கை என்று பொருள் அல்ல என்பதையும் அரசியல் நோக்கர்கள் மறுக்கமாட்டார்கள். ஏனென்றால் இன்று திமுக-வின் மீது கோபம் கொண்ட இதே  மக்கள் தான் கடந்த முறை 1996-லும் 2006-லும் செல்வி. ஜெயலலிதா மீதும் கோபம் கொண்டு தூக்கி எறிந்தார்கள் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
               எனவே இந்தத் தேர்தல் முடிவின் மூலம் தமிழக மக்கள் கருணாநிதியின் மீதான கோபத்தை - அதிருப்தியை வாக்குகளாக காட்டி இருக்கிறார்கள். அது அதிமுக-விற்கு சாதகமாக மாறி இருக்கிறது என்பது தான் இந்த தேர்தல் நமக்கு - குறிப்பாக அதிமுக-விற்கு கற்றுகொடுக்கும் பாடம் என்பதை மறுப்பதற்கில்லை. 
               பாடம் - 2 : வழக்கமாக தமிழக மக்கள் திமுக-வை தோற்கடித்தால் ஆளும் கட்சி பொறுப்பிலிருந்து எதிர்கட்சித் தலைவர் பொறுப்பில் அமர்த்திவிடுவார்கள். அதிமுக-வை தோற்கடித்தாலும் அப்படித்தான் செய்வார்கள். எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையுமே ஆளும் கட்சி - எதிர்க்கட்சி என்றே மாற்றி மாற்றி அமரவைத்திருக்கிறார்கள் என்பதை தான் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆனால் இந்த முறை திமுக-வின் மீதிருந்த மக்களின் அதீத கோபத்தின் காரணமாக சட்டமன்றத்தில் வழக்கமாக கொடுத்த எதிர்கட்சித் தலைவர் பதவியைக்கூட கொடுக்காமல் மூன்றாவது இடத்திற்கு தூக்கி எறிந்திருக்கிறது என்பது மட்டுமல்ல கட்சி ஆரம்பித்து குறைந்த காலமே ஆன நடிகர் விஜயகாந்த் கட்சியான தேமுதிக கட்சிக்கு சட்டமன்றத்தில் இரண்டாவது பெரியக்கட்சி என்ற அங்கீகாரத்தையும் முதல் முறையாக எதிர்கட்சித்தலைவர் என்கிற பொறுப்பையும் தமிழக மக்கள் அளித்திருக்கிறார்கள்   என்பதையும் இங்கே கவனிக்க வேண்டி இருக்கிறது. 
                  அப்படியென்றால் தமிழக மக்களின் பார்வை விஜயகாந்த் மீது திரும்பி இருக்கிறது என்பதும், செல்வி. ஜெயலலிதாவிற்கு மாற்றாக இனி விஜயகாந்த் என்பது மக்களின் மனதில் எழுந்துள்ளது என்பதும், ஜெயலலிதாவின் மீது வெறுப்பு ஏற்பட்டால்  விஜயகாந்த்  நாளை முதல் இடத்திற்கு வருவார் என்பதையே மக்கள் இந்த தீர்ப்பின் மூலம் அறிவிக்கிறார்கள் என்பதும் இந்த தேர்தல் நமக்கு கொடுக்கும் அடுத்தப் பாடம்.
                  பாடம் - 3 : தன் சாதி மக்களின் ஓட்டுக்களை பெற்று பதவி சுகம் காணும் தலைவர்களை கொண்ட சாதிய அமைப்புகளான பாட்டாளி மக்கள் கட்சியையும் விடுதலைச் சிறுத்தை கட்சியையும் அவர்கள் சாதிய மக்களே புரிந்துகொண்டு ஒரு இடம் கூட வரமுடியாமல் தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பது சாதிய அமைப்புகளுக்கு கிடைத்த பாடம்.
                  இந்த தேர்தலின் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கான பாடமாக எடுத்துக்கொண்டு - அதில் கற்றுக்கொண்டு  மக்களுக்கு சேவைச் செய்யும், மக்களின் பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடத்தும் உண்மையான தன்னலமற்ற கட்சிகளாக மாறவேண்டும் என்பதே நமது எதிர்ப்பார்ப்புகளாகும்.
         

கருத்துகள் இல்லை: