புதன், 18 மே, 2011

மம்தாவின் வளர்ச்சியும் வெற்றியும் : நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது

                            
               இந்திய விடுதலைக்கு முன் சுதந்திரப்போராட்டக் காலத்தில் தனக்கு இணையான போராட்ட இயக்கத்தையோ அல்லது போராட்டத் தலைவர்களையோ பொறுத்துக்கொள்ள முடியாத ஏற்றுக்கொள்ளமுடியாத காங்கிரஸ் கட்சி -  இந்திய விடுதலைக்கு தான் மட்டுமே ரொம்பக் கிழித்ததாகக்  காட்டிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி, சுதந்திர இந்தியாவின் ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றிய நாளிலிருந்து, எந்த  மாநிலத்திலாவது  தனக்கு ஆதரவு குறைகிறது என்றாலோ அல்லது  எந்த மாநிலத்திலாவது கம்யூனிஸ்ட் இயக்கம் வளருகிறது என்றாலோ அந்த மாநிலத்தில் பிரிவினைவாதத்தையும், தீவிரவாதத்தையும் உருவாக்கி, தேவையான நிதி மற்றும் ஆயுதங்களை அளித்து,  தீனிப் போட்டு வளர்த்து அந்த மாநிலத்தில் குழப்பத்தை உண்டு பண்ணும் வேலையைத் தான் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் ஆளும் மத்திய அரசும்  இதுவரையில் செய்துவந்திருக்கின்றன. ஜம்மு -காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், பீஹார், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் இப்படியாக காங்கிரஸ் கட்சியின் சாதனைப் பட்டியல் நீண்டுகொண்டேப்போகும். பக்கத்து நாடான  இலங்கையில் கூட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு தமிழர்களின் அமைப்புகளை உருவாக்கி, அதற்கு நிதியையும் ஆயுதத்தையும் அளித்து பிரிவினையையும் தீவிரவாதத்தையும் கிளப்பி விட்டு இன்றைக்கு அமைதியை குலைக்கச் செய்ததில் காங்கிரசுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. தன சுயநலத்திற்காக காங்கிரஸ் கட்சி  எதையும் செய்யத் துணியும் என்பது வரலாறு.
                அதேப்போல், மேற்குவங்கத்தில் மக்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சியை தூக்கிஎறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி அரசை  ஆட்சியில் அமர்த்திய  நாளிலிருந்து அங்கு ஏதாவது குழப்பங்களை உண்டுபண்ணி மீண்டும் தான் ஆட்சிக்கு வர காங்கிரஸ் கட்சி  துடித்துக் கொண்டே இருந்தது. அதற்கு பலவேறு அந்நிய பிரிவினைவாத சக்திகளின் உதவியோடும் , உள்நாட்டு மதவாத சக்திகளின் - பிரிவினைவாத சக்திகளின் உதவியோடும் ஆரம்பக் காலத்திலிருந்தே பல்வேறு குழப்பங்களை மேற்குவங்கத்தில் செய்துவந்திருக்கிறார்கள். புருலியாவில் விமானத்திலிருந்து  ஆயுதங்களை பொழிந்ததே காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆளும் மததிய அரசின் நாசகரக் கொள்கைக்கு உதாரணமாகும். 
 
                           அதன் தொடர்ச்சியாகத்தான் காங்கிரஸ் கட்சியின் வாரிசான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் மம்தா பானர்ஜியும் இறுதியாக மாவோயிஸ்ட்டுகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் தீவிரவாத - பிரிவினைவாத இயக்கத்தோடு கைகோர்த்தனர். ஆயுதங்களை ஏந்திய மாவோயிஸ்ட்டுகள் அப்பாவி மக்களை மிரட்டி பணத்தை பிடுங்கி நிதி சேர்ப்பதும், அண்டை நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதும், தனக்கு அடங்கி நடக்காத அப்பாவி மக்களை சுட்டுக்கொல்வதும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதும், அரசியல் பணிகளைச் செய்யும் மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்களை சுட்டுக்கொல்வதும் போன்ற பல்வேறு நாசகார வேலைகளையும் குழப்பங்களையுமே மேற்குவங்கத்தில் மம்தாவின் ஆதரவுடனும், துணையுடனும் மாவோயிஸ்ட்டுகள் செய்துவந்தனர். அதுமட்டுமல்ல, கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலிலும் வாக்காளர்களை மிரட்டியே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போட செய்திருக்கின்றனர். இப்படித் தான் முப்பத்துநான்கு ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி செய்த இடது முன்னணி அரசை வீழ்த்தி  வெற்றி பெற்று  இன்றைக்கு மம்தா பானர்ஜி ஆட்சிக்குவந்திருக்கிரர்கள் என்பது தான் உண்மை. எனவே மம்தாவிற்குப்  பின்னால் இருப்பவர்கள் - திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்குப் பின்னால் இருப்பவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்கிற தீவிரவாத அமைப்பு தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. தீவிரவாத அமைப்போடு கைகோர்த்து தான் மம்தா பானர்ஜி ஆட்சியில் அமர்கிறார் என்பதையும்  அவர்கள் துணையோடும் வழிகாட்டுதலோடும் தான் ஆட்சி நடத்துவார் என்பதையும் மறுக்கமுடியாது.    
                 இப்போதே தேர்தல் முடிவுக்குப் பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்   மாவோயிஸ்ட்கள் துணையுடன் பல்வேறு அட்டூழியங்களையும் அராஜகங்களையும் வன்முறைகளையும்  கட்டவிழ்த்து விட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன.
மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணி அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டனர். பலத் தோழர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். பெண்கள் - குழந்தைகளைக் கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் துப்பாக்கி முனையில் அவர்களது வீட்டிலிருந்து விரட்டப்படுகின்றனர். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப் படுகின்றனர்.
                    ஜம்மு-காஷ்மீர், ஆந்திர பிரதேசம், பீகார், சத்தீஷ்கர், ஜார்கண்ட், அஸ்ஸாம்  போன்ற மாநிலங்களில் பிரிவினைவாதிகள் - தீவிரவாதிகளின் போராட்டங்களை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வுகண்டு அந்த மாநிலங்களில் அமைதியை ஏற்படுத்த துப்பில்லாத மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப்பின் நடைபெற்றுவரும் வன்முறைகளைக் கண்டு கவலைப்படுகிறார். இடது முன்னணி ஆட்சியிலிருந்த போதே மம்தா - மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை வெறியாட்டங்களை கண்டுகொள்ளாமல் இடது முன்னணி அரசையே குறைகூறி வந்ததுமில்லாமல், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அரசின் மீதே புழுதியை வீசியவர் தான் இந்த ப. சிதம்பரம் என்பதை மறந்துவிடக்கூடாது.
                  இப்படியாக, மேற்கு வங்கத்தில் வளர்ந்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் - மாவோயிஸ்ட்டுகள் வன்முறைக் கலாச்சாரப்போக்கு என்பதும், மத்திய அரசாங்கம் அதை கண்டுகொள்ளாமல் வளர்த்து வருவதும் எதிர்காலத்தில் மேற்கு வங்கத்திற்கு மட்டுமல்ல நாட்டின் பாதுகாப்பிற்கே பேராபத்தாக முடியும் என்பதை மனதில் வைத்து மத்திய அரசு செயல் படவேண்டும்.
                                                     

கருத்துகள் இல்லை: