வெள்ளி, 3 ஜூன், 2011

தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் நீக்கவேண்டும்

                 ஏர்செல் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு அலைக்கற்றை உரிமங்களை வாரி வழங்கிய தில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முந்தைய தொலைத்தொடர் புத்துறை அமைச்சரும், தற்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறன் சுமார் ரூ.700 கோடி அளவிற்கு லஞ்சம் வாங்கியதாக புகார்கள் வலுத்துள்ள நிலையில், இதுகுறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கும்  தொடரப்பட்டுள்ளது.

                  ஊழலை ஒழிப்பேன் என்று வாய் கிழியப்பேசும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் - திமுக - திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்,   தொலைத்தொடர்புத்துறையில் வரலாறு காணாத ஊழல்கள் நடந்திருப்பது தொடர்பாக அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் ஆதாரப் பூர்வமாக வெளியாகிய வண்ணம் உள்ளன. ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு சூறையாடப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி இந்த அரசின் தொலைத்தொடர் புத்துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா, திமுக எம்.பி.-யும் கருணாநிதியின் மகளுமான  கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியில் இருபது சதவீத பங்குகளை வைத்திருக்கும் சரத்குமார்  மற்றும் மிகப்பெரும் நிறுவனங்களின் அதிகாரிகள் என பலர் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் தீவிர கண்காணிப்பின் கீழ் இந்த ஊழல் தொடர்பான விசாரணை கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், எந்த கூட் டத்தில் பங்கேற்றாலும், ஊழலை ஒழிக்கப்போவதாக வீராவேசத் துடன் முழங்கிவரும் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் அவரது சகாக்களில் ஒருவராக அமர்ந்திருக்கும்  ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், தொலைத்தொடர்புத்துறையில் நடந்த மிகப்பெரும் ஊழல்கள் தொடர்பான புகார்களில் சிக்கியுள்ளார்.

                 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நடத்திய பல்வேறு முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமங்கள் வழங்கியதிலும், அந்நிறுவனத்தை மலேசிய தொழ லதிபருக்கு கைமாற்றிவிட்டதிலும் தொடர்புடையவராக குற்றச்சாட்டு எழுந்துள்ள தயாநிதி மாறன், இதற்கு கைமாறாக தனது குடும்பத்திற்கு சொந்தமான சன் டி.வி. குழுமத்திற்கு ரூ.700 கோடி அளவிற்கு லஞ்சப்பணம் கைமாறுவதற்கு உறுதுணையாக இருந்தார் என்றும் புகார்கள் வலுப்பெற்று புயலடிக்கத் தொடங்கியுள்ளன.

                  இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்த மத்திய குற்றப்புலனாய்வுக் கழகத்திற்கு (சிபிஐ) உத்தரவிட வேண்டும் எனக்கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநலன் வழக்குகள் மையம் (சிபிஐஎல்) சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

                 தற்போது தீவிரமாக நடை பெற்று வரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணைகளை மேலும் துரிதப்படுத்த மேற்கண்ட பொதுநலன் வழக்குகள் மையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களே முக்கியக் காரணமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

                இந்நிலையில், தயாநிதி மாறனின் ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மூலமாக மனுத்தாக்கல் செய்துள்ள இம்மையம், 2004 மே 23ம் தேதி முதல் 2007 மே 15ம் தேதி வரை தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த காலகட்டத்தில் நடந் துள்ள நிகழ்வுகள் குறித்து தெகல்கா ஏடு வெளியிட்ட விபரங் களை முன்வைத்துள்ளது.

                2006 நவம்பர் முதல் மூன்று மாத காலத்திற்குள் ஏர்செல் நிறுவ-னத்திற்கு 14 தொலைத்தொடர்பு வட்டங்களுக்கான அலைக்கற்றை உரிமங்களை அளிப்பதில் துரிதமாக செயல்பட்ட தயாநிதி மாறன், அதற்கு கைமாறாக, ஏர் செல் நிறுவனத்தின் உரிமையாள ரான மலேசியாவைச் சேர்ந்த மேக் ஸிஸ் குழுமத்திடமிருந்து ரூ.600 கோடி அளவிற்கு, சன் டி.வி. குழுமத்தில் முதலீடு என்ற பெயரில் எப்படி பெற்றார் என்பது குறித்து தெகல்கா ஏடு வெளியிட்டுள்ள விபரங்களை தனது மனுவோடு மேற்கண்ட பொதுநலன் வழக்குகள் மையம் இணைத்துள்ளது.

                இந்த முதலீடுகள், தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவியிலிருந்த காலத்திலேயே - அதாவது 2007, மார்ச் 2 மற்றும் 19 ஆகிய தேதி களில் முதலீடு செய்யப்பட்டுள் ளது. இதற்காக நிதியமைச்சகத் துறையின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. ஆனால் தனது பதவிக்காலத்தில், தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான எந்த ஒரு நிறுவனத்திலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனமும் முதலீடு செய்யவில்லை என்று தயாநிதி மாறன் மறுத்துள் ளார். இதை நிராகரிக்கும் விதமாகவே மேற்கண்ட தகவலையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இம்மையம் தெரிவித்துள்ளது.
              
                இப்படியாக நாடு முழுதும் ஊழல் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது, ஊழலை ஒழிப்பேன் என்று வீரமுழக்கமிடும் மன்மோகன் சிங் கண்டுகொள்ளாமல் இருப்பது  ஏன் ?  ஊழலை ஒழிப்பது இருக்கட்டும்.   முதலில் தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து ஒழித்துக்கட்டுங்கள்..

கருத்துகள் இல்லை: