
இந்தியாவில் பல்வேறு துறைகளில் இன்று இந்த இரண்டு ஜோடி அபூர்வ சகோதரர்கள் ஈடுபட்டு மக்களின் பணத்தை அவர்கள் பாக்கெட்டில் இருந்தே உருவி விடுகிறார்கள். இவர்கள் நவீனக் கொள்ளைக்காரர்கள். இன்றைக்கு இந்தியாவில் இவர்கள் செய்யாதத் தொழில்களே கிடையாது. எந்தத் தொழிலில் லாபம் கொழிக்கிறதோ அந்தத் தொழிலில் இவர்கள் நுழைந்து விடுவார்கள். அதனால் பரம்பரைப் பரம்பரையாக - குடும்பம் குடும்பமாக பிழைப்புக்காக தொழில் செய்தவர்களின் கதி அதோ கதியாகிவிட்டது. இவர்கள் செய்யாத தொழில் என்பது ஒன்றொன்று தான். அது பிச்சை எடுக்கும் தொழில். அதில் லாபம் கிடைக்கும் என்று தெரிந்தால் அதைக்கூட செய்ய இவர்கள் தயங்கமாட்டார்கள். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்த கார்ட்டூன் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு பிச்சைக்காரன் ஓவென்று அழுகிறான். அவனை மற்றொரு பிச்சைக்காரன் ஏனப்பா அழுகிறாய் என்று கேட்கிறான். அதற்கு அந்த பிச்சைக்காரன், " போகிறபோக்கைப் பார்த்தால் நம்பத் தொழிலிலேயும் இந்த அம்பானிச் சகோதரர்களும் மாறன் சகோதரர்களும் நுழைந்துடுவார்களோன்னு பயமா இருக்கு.. அதான் அழறேன்". இது நகைச்சுவையாக இருந்தாலும் உண்மையிலும் உண்மை தான்.
சொத்துக்காக குடும்பச் சண்டை :
அம்பானி சகோதரர்கள் நாட்டின் சொத்துகளை கூறுபோடுவதில் கூசாமல் சண்டைப் போட்டுக்கொண்டதை நாடே பார்த்தது. அரசாங்கமே எடுத்து நடத்தவேண்டிய இயற்கை வளமான கிருஷ்ணா - கோதாவரி படுகையிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு கம்பெனியை தாங்களே ஏற்று நடத்துவதற்கு தான் இவர்கள் சண்டைப் போட்டுக்கொண்டார்கள். உடனே பிரதமர் மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்து இருவர் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து எண்ணெய் வளங்களை முகேஷ் அம்பானிக்கும், தொலைத்தொடர்பு வளங்களை அணில் அம்பானிக்கும் கொடுத்து சமரசம் செய்து வைத்தார்கள் என்பது ஒரு வெட்கக்கேடான விஷயமாகும்.
இங்கே தமிழகத்தில் இந்த கலவாணிச் சகோதரர்களில் ஒருவரான தயாநிதி மாறனுக்கு திமுக தலைமையின் மீது ஒரு பார்வை இருந்தது. அதனால் தன சொந்த நாளேட்டிலும், தொலைக்காட்சியிலும் தானே தயாரித்த கருத்துக் கணிப்பை வெளியிட அது பூதாகரமாக அந்த கலவாணிச் சகோதரர்களுக்கே எதிராக அமைந்துவிட்டது. கருணாநிதியின் கேடிப்பிள்ளைகளில் ஒருவரான அஞ்சாநெஞ்சன் அழகிரி விஸ்வரூபம் எடுக்க ஏகப்பட்ட களேபரங்கள் தமிழ்நாட்டில் நடந்தேறியது. இந்த தேசப் பிரச்சனையில் கருணாநிதியின் குடும்பமும் கலவாணிச் சகோதரர்களின் குடும்பமும் பிரிந்துவிட்டது. ஆனால் இந்தப் பிரிவு என்பது கொஞ்ச காலம் தான் நடந்தது. ஏனென்றால், இப்படியாக இரண்டு குடும்பங்களும் பிரிந்திருந்தால் நாம் "இத்தனை நாட்களாக கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துகளும்" பிரிந்துவிடுமே என்று கருணாநிதி சுதாரித்துக்கொண்டு சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் இரண்டு குடும்பங்களையும் இணைத்து வைத்தார் என்பதும் இந்த நாடே பார்த்த உண்மைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக