திங்கள், 13 ஜூன், 2011

குழந்தைகள் உழைப்பில் உருவான கறுப்புப் பணம் - இந்திய நாட்டின் அவமானச் சின்னம்

               உலக குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் என்பது நேற்றைய தினம்  ஜூன் 12 - ஆம் தேதி  எல்லா நாட்களையும்  போல்  - வழக்கம் போல் சம்பிரதாயச் சடங்கோடு முடிந்துவிட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடக்கின்ற ஒன்று தான். ஆனால் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை என்னவோ ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதைப்  பற்றிய அக்கறை இந்த ஆட்சியாளர்களுக்கோ அல்லது சமுதாயத்திற்கோ இருப்பதாக தெரியவில்லை. தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் தங்கள் பங்கிற்கு குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டு தாங்கள் மட்டுமே அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொண்டனர் என்று தான் சொல்லவேண்டும். அப்படி வந்த செய்திகளை இங்கு பார்ப்போம்...
          கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்  பணம் குறித்த கடுமையான விவாதங்கள் நடந்துவருகின்றன. 
இச்சூழலில் குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பில் மட்டுமே ரூ. 1.2 லட்சம் கோடி வரை கறுப்புப்  பணம்  உருவாகுவதாக குழந்தை உரிமைகளுக்கான அமைப்பு ( Bachpan Bachao Andolan - BBA) தெரிவித்துள்ளது.

         “உயர்மட்ட ஊழல் மற்றும் இந்திய தொழிலாளர்கள்” ( Capital Corruption: Child Labour in India ) பற்றிய அறிக்கையில் வெளியிடப்பட்ட இப்புள்ளி 
விபரங்கள் வாயிலாக முறையற்ற வகையில் முதலாளிகள் திரட்டிய மூலதனம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

     முதலாளிகளின் அதிகளவு லாபவேட்கை காரணமாக இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில்  குறைந்த கூலியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். குழந்தைத் தொழிலாளர் முறை, ஊழல் மற்றும் கறுப்புப்பணம் போன்றவற்றிற்கு இடையே ஒன்றுக்கொன்று தொடர்புகள் உள்ளன.   இந்தத்  தொடர்புகளால் இந்திய  முதலாளிகள் மற்றும் இடைத்தரகர்கள் அதிகளவு லாபம் சம்பாதிக்கின்றனர்.

             இந்தியாவில் ஆறு கோடிக்கும் மேல்  குழந்தைத் தொழிலாளர்கள் உள்ள நிலையில், சராசரியாக 200 நாட்கள் வரை வேலை நாட்களாக கணக்கிடப்பட்டாலும் சுமார் ரூ.18 ஆயிரம் கோடிகள் வரை கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது.

        தற்போது ஆறு கோடி குழந்தைத் தொழிலாளர்களுக்கு மாற்றாக பிற தொழிலாளர்களை பயன்படுத்தும் சூழலில், நாள் ஒன்றுக்கு ரூ.115 வரை சராசரி வருமானம் என கணக்கிடப்பட்டால் ரூ. 1லட்சத்து 38 ஆயிரம் கோடி வரை கறுப்புப்பணம் உருவாகிறது. தற்போது வழங்கப்படும் குழந்தைத் தொழிலாளர் ஊதியத்தை கழித்தால் ரூ.1.20 லட்சம் கோடி வரை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் முதலாளிகள் தங்களின் தவறான வருமானத்தை அரசுக்கு தெரிவிக்காத நிலையில், வரி செலுத்தாமல் மோசடியிலும்  ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

              இந்தியாவில் குறைந்த சம்பளத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பென்பது அதிக அளவில் சுரண்டப்படுகிறது என்பது தான் ஒரு கொடுமையான உண்மை ஆகும். படிக்கவேண்டிய வயதில் குழந்தைகள் உழைப்பென்பது இந்த தேசத்தின் அவமானச் சின்னம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

கருத்துகள் இல்லை: