வெள்ளி, 17 ஜூன், 2011

எடுத்துக்காட்டாய் ஒரு மாவட்டக் கலெக்டர் - பாராட்டுகிறோம்

         இன்றைக்கு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார்ப் பள்ளியில் தான் சேர்த்து பெருமைபடுகிறார்கள். இதில் அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. அவர்களுக்கே தங்கள் பணியில் - கற்பித்தலில் நம்பிக்கை இல்லை. ஆட்சியாளர்களும் அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தவேண்டும் என்று அக்கறைக் காட்டுவதில்லை.    ஆனால் வசதியில்லாத, கிராமப்புறக் குழந்தைகள் வேறுவழியில்லாமல் அரசுப் பள்ளியில் தான் சேருகிறார்கள். காரணம் இலவசக் கல்வி மட்டுமல்ல. அவர்கள் அரசுப் பள்ளிக்குச் செல்வது என்பது இலவச மதிய உணவுக்காகத் தான் என்பது தான் உண்மையானக் காரணமாகும்.
                அப்படிப்பட்டப் பள்ளியில் தான் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஆர். ஆனந்தகுமார் தனது ஆறு வயது பெண் குழந்தை கோபிகாவை குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய  அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்திருக்கிறார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகும். அவர் அதோடு மட்டும் விடவில்லை. தன குழந்தைக்கு இலவச சீருடை வழங்க முடியுமா என்று அப்பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவரோ, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டுமே இலவச சீருடை வழங்க முடியும் என்று சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட ஆட்சித்தலைவர், என் குழந்தையும் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து பள்ளி சீருடை வழங்குங்கள் என்று தலைமையாசிரியரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். 
                 இப்படிப்பட்ட  சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருப்பது நமக்கு பெருமையாய் இருக்கிறது. அரசுப் பள்ளியின் மீது நம்பிக்கையை வைத்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவரையும், அவரது இந்த முடிவுக்கு அனுமதியளித்த அவரது மனைவியையும் கண்டிப்பாக பாராட்டவேண்டும்.  

1 கருத்து:

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
பாராட்டப்பட வேண்டிய தைரியமான முயற்சி.
வாழ்த்துக்கள்.