வியாழன், 30 ஜூன், 2011

இந்தியாவிற்கு சாத்தான் அளித்த பொருளாதார தர சான்றிதழ்..!

                    “சரிவிகிதப் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதில் அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இந்தியா திகழ்கிறது. பரந்துபட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றால் அதற்கு இந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்”. இப்படி இந்தியாவைப் பாராட்டி சான்றிதழ் வழங்கியவர்  அமெரிக்க நிதி அமைச்சர் திமோத்தி கெய்த்னர் என்பதை தான் உற்று நோக்கவேண்டும்.
                      அமெரிக்க- இந்திய பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு மாநாடு வாஷிங்டனில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியதை யொட்டி வாசிக்கப்பட்டதே இந்தப் பாராட்டு . இந்த மாநாட்டின் நோக்கம், பொருளாதாரக் கொள்கையில் அமெரிக்காவுக்கு சாதகமாக இந்தியா மேலும் வளைந்து கொடுக்க வகை செய்வதே ஆகும். அமெரிக்க மீதான  அடிமை விசுவாசம் மேலும் பலம் பெற செய்யவே இந்த மாநாடு. 

ஆனால் இந்தியா இன்று..?

              இந்தியாவில் சரிவிகித பொருளாதார வளர்ச்சி என்பது எங்கே இருக்கிறது ?  இப்போது இல்லையே. இன்றைக்கு இந்தியா இரண்டு இந்தியாவாக தானே இருக்கிறது. ஒன்று.... வசதி படைத்தவர்களின் இந்தியா. இன்னொன்று... வயிறு பசித்தவர்களின் இந்தியா. இந்த பணக்கார இந்தியாவிற்கும் ஏழை இந்தியாவிற்கும் உள்ள இடைவெளி மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளியாக உள்ளது. இந்தக் கைப்புண்ணை அறிய பெரிய ஸ்கேன் ரிப்போர்ட் எதுவும் தேவையில்லை. நம் வாழ்க்கையின் அன்றாட அனுபவங்களே சாட்சியாக இருக்கிறது. தாராளமயம், உலகமயம், தனியார்மயம் நடைமுறைக்கு வந்த  பின்பு, கடன் தொல்லை தாங்காமல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். வறுமை மேலும் மேலும் அதிகரித்துகொண்டே வருகிறது. விலை ஏற்றம் தாங்க முடியாத அளவிற்கு எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. கிராமப்புறங்களில் விவசாயம் கட்டுப்படி ஆக வில்லை என்பதாலும், போதுமான வேளாண்பணி கிடைக்கவில்லை என்பதாலும்  கிராமத்தை விட்டு நகர்ப்புறங்களுக்கு  படை எடுப்போர்களின் எண்ணிக்கை பலமடங்குகளாக பெருகி வருகிறது.  நகர்ப்புற வறுமை கிராமப்புற வறுமையைப் போல் பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது. இன்றைக்கு பல்வேறு சமூகக் குற்றங்களுக்கு இதுவே களமாக அமைகிறது என்பது தான் உண்மை. இப்படி சிதிலமடைந்து கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தைத்தான் “சரிநிகர்ப் பொருளாதார  வளர்ச்சி” என்றும் "பரந்துபட்ட வளர்ச்சி" என்றும் அமெரிக்கா இந்தியாவிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

எஜமானர்களுக்கு  நம் அடிமை அளித்த வாக்குறுதி..! 

               இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை மேலும் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றும், வங்கிகள், இன்சூரன்ஸ், ஓய்வூதியம், சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் மட்டுமின்றி வரிச்சீர்திருத்தம் உள்பட அனைத்து துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டை தாராளமாக அனுமதிக்கும் விதத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு செயல்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமெரிக்க பெருமுதலாளிகளின் பிரதிநிதிகளிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார். அமெரிக்கா இந்த தேசத்தை கொள்ளை அடிப்பதற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்து தருகிறோமென்று இந்திய நிதி அமைச்சர் உறுதியளித்திருப்பது  என்பது  நமக்கு கொபமளிக்கக்கூடிய விஷயமாகும்.
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ.. நாங்கள் சாகவோ.. என்கிற பாரதியின் கவிதை வரிகள் தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை: