வெள்ளி, 3 ஜூன், 2011

மத்திய தொலைத்தொடர்புத் துறை கருணாநிதி குடும்பத்திற்கு ஓர் அமுதசுரபி...!

               தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களும்,   திமுக கட்சியை சேர்ந்தவர்களும்  மத்திய அமைச்சர் பதவியை பயன்படுத்தி - இந்திய மக்களை முட்டாள்களாக நினைத்துக்கொண்டு  பல்வேறு முறைகேடுகளையும், ஊழல்களையும் செய்து பல கோடிகளை சுருட்டிய தகவல்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருவது என்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. 
               அண்மையில்  ஊழல் பட்டியலில்  கருணாநிதியின் பேரன் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் சேர்ந்திருக்கிறார். ஏர்செல் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு அலைக்கற்றை உரிமங்களை வாரி வழங்கியதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முந்தைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும், தற்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறன் சுமார் ரூ.700 கோடி அளவிற்கு லஞ்சம் வாங்கியதாக புகார்கள் வலுத்துள்ள நிலையில், இதுகுறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத் தில் வழக்குதொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்த மத்திய குற்றப்புலனாய்வுக் கழகத்திற்கு (சிபிஐ) உத்தரவிட வேண்டும் எனக்கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநலன் வழக்குகள் மையம் (சிபிஐஎல்) சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

                 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிபிஐ இதுவரை தாக்கல் செய்துள்ள இரண்டு குற்றப்பத்திரிகைகளில் 17 நபர்களும் நிறுவனங்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள இம்மையம்,  இரண்டாவது குற்றப்பத்திரிகையில் டி.பி.ரியால்டி குழுமம் என்ற நிறுவனத்திடமிருந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்திற்கு சொந்தமான கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி அளவிற்கு பணம் கைமாறிய விவகாரமும் இடம்பெற்றுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. அப்படி பெருமளவு பணம் கைமாறிய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட கலைஞர் டி.வி.யில் பங்கு தாரர்களான தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும், அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன; ஆனால் தலா 20 சதவீத பங்குகள் மட்டுமே வைத்துள்ள சரத்குமார் மற்றும் கனிமொழி ஆகியோர் முறையே 16 மற்றும் 17வது நபர்களாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆனால் 60 சதவீதப் பங்குகள் வைத்துள்ள தயாளு அம்மாள் அப்பட்டியலில் சேர்க்கப்படாதது ஏன் என்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேற்கண்ட மனுவில் பொதுநலன் வழக்குகள் மையம் கேள்வி எழுப்பியுள்ளது. தயாளு அம்மாளை, சிபிஐ திட்டமிட்டே பட்டியலில் சேர்க்காமல் விட்டுவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ள இம்மையம், 2011 மே 10ம் தேதி நடைபெற்ற கலைஞர் டி.வி.யின் மிக முக்கிய இயக்குநர் குழு கூட்டத்தில் தயாளு அம்மாள் பங்கேற்றார் என்ற செய்தித்தகவலையும் சுட்டிக்காட்டியுள்ளது.

                 அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள், டாடா நிறுவனத்திடமிருந்து, அந்நிறுவனத்திற்காக அமைச்சர் ராசா மூலம் செய்த உதவிகளுக்கு கைமாறாக, அரசியல் இடைத்தரகர் நீரா ராடியா மூலம் பெருமளவு விலைமதிப்பு கொண்ட முக்கிய நிலத்தை பெற்று கைமாற்றியது தொடர்பாகவும் சிபிஐ உரிய முறையில் விசாரணையை நடத்தவில்லை என்றும்  இந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டாடா நிறுவனத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் சிபிஐ செயல்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

                 அம்மாடியோவ்.. அலிபாபாவும் 40 திருடர்களும்னு பேரு வைக்கலாம் போலிருக்கு. இதை எல்லாம் பார்க்கும் போது தொலைத்தொடர்புத் துறை என்பது கருணாநிதி குடுமபத்திற்கு ஒரு அட்சயப் பாத்திரமாக - ஒரு அமுதசுரபியாக இருந்திருக்கிறது என்பது தான் உண்மை.

                 இன்னும் T. R. பாலு மத்திய அமைச்சராக பொறுப்பிலிருந்த  கப்பல் போக்குவரத்துத் துறையை தோண்டிப்பாருங்க.. கப்பல் கப்பலா ஊழல் கிடைக்கும். 2 ஜி - ஸ்பெக்ட்ரம் -இல் கிடைத்த 1, 76,000  கோடியை விட பல லட்சம் கோடி கிடைக்கும். சேது சமுத்திரத் திட்டத்தில் கடலை ஆழப் படுத்துவதற்காக தோண்டப்பட்ட கடல் மணல் எங்கே போனது என்று தேடுங்கள். கிடைக்கும் கோடிக்கணக்கான பணம்..............? இது பிரதமருக்கும் தெரியும் அதனால் தான் இந்த முறை அந்த யோக்கியருக்கு அமைச்சர் பதவி கொடுக்க மறுத்தார்..........!   இப்படியெல்லாம்  பேச்சு அடிப்படுகிறது.

கருத்துகள் இல்லை: