புதன், 15 ஜூன், 2011

மற்றுமொரு ஊழல் பூதம் வெளியே கிளம்பியிருக்கிறது - மன்மோகன் சிங் ஆட்சியின் லட்சணம் பாரீர்...!

     மன்மோகன் சிங் அரசின் செயல் பாட்டால் இந்தியாவின் பெருமுதலாளியான முகேஷ் அம்பானியின்  நிறுவனம் ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிடைத்ததாகவும், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறை கூறியுள்ளது.

           கிருஷ்ணா - கோதாவரி நதிப்படுகையில் சமையல் எரிவாயு எடுக்கும் பணியை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது. இந்தப் பணியை பொதுத்துறை நிறுவனங்களே திறம்படச் செய்ய முடியும் என்றபோதும் அம்பானிக்கு நாட்டின் இயற்கை வளத்தை கொள்ளையடிக்க அனுமதி கொடுத்தது மன் மோகன் சிங் அரசு.

          இந்த தேசத்தின் சொத்தை பங்குபோட்டுக் கொள்வதில்  முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் தகராறு ஏற்பட்டபோது, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப. சிதம்பரம் இருவருமே  நேரடியாக கட்டப் பஞ்சாயத்து செய்தார்கள் என்பது நாம் மறந்திருக்க முடியாது.  அதன்  பிறகு தான் அவர்களுக்குள்  சமரசம் ஏற்பட்டது.

             கிருஷ்ணா - கோதாவரி நதிப்படுகையில் உற்பத்திப் பொருளை பகிர்ந்து கொள்வது தொடர்பான உடன்பாடு முழுக்க முழுக்க ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்தது என்றும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் மற்றும் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்றும் மத்திய தணிக்கை மற்றும் கணக்கு அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

      அரசுக்கு ஏற்படும் இழப்பு குறித்து பிரதமர் அமைச்சகத்திற்கு தொடர்ச்சியாக பலமுறை எச்சரிக்கை செய்து கடிதம் எழுதினேன். ஆனால் பிரதமர் அமைச்சகம் இது குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை என்று மத்திய அரசின் முன்னாள் வருவாய்த்துறை செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா குறிப்பிட்டுள்ளார்.

    முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஆர்ஐஎல் மற்றும் கெய்ரின் நிறுவனத்திற்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் உடன்பாடு அமைந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

         ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமருக்கு தெரிந்து தான் எல்லாம் நடந்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா திரும்பத்திரும்ப கூறி வருகிறார். இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அநியாயமாக ஆதாயம் கிடைக்கும் வகையில் அமைந்த உடன்பாடு குறித்து பிரதமர் அமைச்சகம் கண்டுகொள்ளாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

      தேசத்தை உலுக்கி வரும் தொடர் ஊழல்களுக்கு மத்தியில் இந்த முறைகேடும் வெளியாகியுள்ளது. முழுமையாக விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

நன்றி : தீக்கதிர்  ( அரசியல் விழிப்புணர்வு பெற ''தீக்கதிர்'' நாளேட்டினை படியுங்கள் )

கருத்துகள் இல்லை: