வியாழன், 9 ஜூன், 2011

இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எதிராக நியாயம் கேட்போம் - பொருளாதாரத் தடை வேண்டுமா?

சட்டப் பேரவையில் அ.சவுந்தரராசன் பேச்சு :
    இலங்கை அரசும், ராணுவமும் மனித உரிமைகளை மீறி நடத்திய கொடுமைக்கு எதிராக நியாயம் கேட்க வேண்டியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் கட்சித்தலைவர் அ.சவுந்தரராசன் கூறியுள்ளார்.

         இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக்கோரி சட்டப்பேரவையில் புதனன்று (ஜூன் 8) கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது அவர் பேசியது வருமாறு:

      சொல்லத்துடிக்குதடா நெஞ்சம் என்ற அளவிற்கு மிகப்பெரும் கொடுமையை கடந்த 25ஆண்டு காலமாக இலங்கை தமிழர்களுக்கு எதிராக அங்குள்ள அரசு செய்துள்ளது. போர்க்குற்ற நடவடிக்கைகளிலும், மனித உரிமை மீறல்களை யும், மிகப்பெரிய அளவுக்கு நிகழ்த்தியுள்ளது.

         தமிழர்களுக்கு இருந்த சமஉரிமையும், வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு, வாழ வழியில்லை என்ற நிலையில்தான் அவர்கள் போராடத் தொடங்கினார்கள். இந்த காலம் முழுவதும் தமிழர்கள் கண்ணீரிலும், செந்நீரிலும் குளித்தனர்.

         இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நமது ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையிலும் தமிழக முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறோம்.

       இன்னொரு நாடு என்ற வகையில், அந்த நாட்டிலும் மனித உரிமை ஆணையம், உச்ச நீதிமன்றம் உள்ளது. இவ்விரு அமைப்புகளும் அந்நாட்டில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த நிர்ப்பந்திக்க வேண்டும். இதை செய்ய மறுத்தால், இதைக்கூட செய்ய மறுக்கிறார்களே என்று நிர்ப்பந்தித்து நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளதால் அதையும் செய்ய வேண்டும்.

          ஐ.நா. பொதுச்செயலாளர் கூறும் போது, போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா-வால் அமைக்கப்பட்ட குழுவை இலங்கைக்குள் அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை என்றார். ஐ.நா-வால் அமைக்கப்பட்ட குழு இலங்கைக்குள் செல்லாமல் தனக்கு கிடைத்த தகவல்களையும், ஆதாரங்களை யும் கொண்டு ஒரு அறிக்கையை தயாரித்து கொடுத்துள்ளது.

      பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய முடியாது, செஞ்சிலுவை சங்கம் செயல்பட முடியாது, மருந்துகள் கொண்டு செல்வது தடுக்கப்பட்டது, செஞ்சிலுவை சங்கத்தால் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் மீது ராணுவமே குண்டுகளை வீசி தாக்கியது. அதுமட்டுமின்றி மக்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து, விடுதலைப்புலிகளும் தங்களை தற்காத்துக் கொள்ளச் செய்ததாக கருத வேண்டியுள்ளது.

        இத்தகைய கொடுமையை அரசே நிகழ்த்துகிறது. அரசும், ராணுவமும் எந்தச் சூழ்நிலையிலும் மனித உரிமையை மீறக் கூடாது. இந்த கொடுமைக்கு எதிராக நியாயம் கேட்க வேண் டியுள்ளது.

      இலங்கை பிரச்சனையில் தலையிடக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையே கடந்த கால ஆட்சியினர் வழக்கமாக கொண்டிருந்தனர். 
அஞ்சல் வழியே அவர்களின் அரசியல் வழியாக இருந்தது.

     தற்போது அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே உலகின் பல பகுதிகளில் பொருளாதாரத் தடை விதிக்கும்போது குற்றம் செய்த ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்டதில்லை. இராக் மீது அமெ ரிக்கா கடந்த 20 ஆண்டுகளாக கண்மூடித்தனமாக பொருளாதாரத் தடை விதித்த போது, 10 லட்சம் குழந்தைகள் இறந்தார்கள். தற்போது 20வயதுடைய இளைஞர்களே அங்கு இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

      இதுபோன்ற தடையால் குழந்தைகளும் பெண்களுமே அதிகமாக பாதிக்கப்படுகின் றனர். இலங்கை ஆட்சியாளர் களும், ராணுவமும் 
போர்க்குற்றம் புரிந்திருந்தாலும், பொருளாதாரத் தடைவிதிக்கும் போது நாம் யாருக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறோமோ அந்த தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, பொருளாதாரத் தடை வேண்டுமா? என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
     தற்போது பட்டியலிடப்படுகிற குற்றங்கள் அன்றைக்கு நடந்து கொண்டிருந்த போது, மத்திய ஆட்சியாளர்கள் ராஜிய ரீதியில் தலையிட்டிருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். இன்றைக்கு இத்தகைய விவாதமே எழுந்திருக்காது. மேற்சொன்ன திருத்தத்தோடு தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.
இவ்வாறுஅவர்கூறினார்.

 நன்றி : தீக்கதிர்             

கருத்துகள் இல்லை: