செவ்வாய், 7 ஜூன், 2011

கறுப்புப் பணத்தை கைப்பற்றுவதில் மத்திய அரசின் தயக்கம் - கையாலாகாதத் தனம்

ஏன் இந்த பதற்றம்? 
 
    வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை கண்டறிந்து கைப்பற்றுவதில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு தன்னுடைய அக்கறையின்மையையும், கையாலாகாத்தனத்தையும் வெளிப்படுத்தி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் இந்தக் கோரிக்கையை வலுவாக முன்வைத்த போது மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை.

         ஆனால் "சமூக சேவகர்", "யோகாசன குரு" என்று கூறிக் கொண்டு சிலர் கிளம்பிய போது அவர்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் அளித்தது. இதன் விளைவுதான் யோகாசன குரு ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதமும் அதை மத்திய அரசு கையாண்ட விதமும் ஆகும்.

         யோகாசனம் குறித்து பயிற்சி அளிக்க அனுமதி பெற்று தில்லிக்கு வந்த ராம்தேவ் பல அதீத கோரிக்கைகளை முன்வைத்தார். அவரோடு மத்திய அரசு ரகசிய உடன்பாடு செய்து கொண்டது. ஆனால் இருதரப்புமே அதற்கு விசுவாசமாக இல்லை.

           இந்த நிலையில் பல கோடி ரூபாய் செலவில் பந்தல் அமைத்து ராம்தேவ் உண்ணாவிரதத்தை துவங்கினார். நள்ளிரவில் உண்ணாவிரதப் பந்தலுக்குள் நுழைந்து காவல்துறை நடத்திய தாக்குதல் தேவையற்றது; கண்டிக்கத்தக்கது.

     ராம்தேவ் ஒரு ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்பது தெளிவு. உண்மையிலேயே ஊழல் ஒழிப்பிலும் கறுப்புப் பணம் மீட்பிலும் அவருக்கு அக்கறை இருக்கிறதா என்ற வினா எழுகிறது. பின்னணியில் ஆர்எஸ்எஸ், விஎச்பி, பாஜக தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது, தற்போதைய சூழலில் மக்களின் ஆதரவைப் பெற இந்துத்துவா கும்பல் தீட்டியிருக்கிற புதிய நாடகமே இது என்ற தெளிவையும் தருகிறது.

       இப்பிரச்சனையை மத்திய காங்கிரஸ் கூட் டணி அரசு கையாள்கிற விதமும் கடும் விமர்சனத்துக்கு உரியது. பெட்ரோலியப் பொருள் விலை உயர்வு, சமூக நலத்திட்டங்களுக்கான நிதி வெட்டு போன்ற நடவடிக்கைகளிலிருந்து மக்களைக் காக்க, வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்குகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளும், தொழிற்சங்கங்களும், வெகுமக்கள் அமைப்புகளும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளன. அவர்களோடு பேச்சு நடத்த மத்திய அரசு ஒருபோதும் முன்வந்ததில்லை. அரசியல் இயக்கங்களின் போராட்டங்களை மதிக்காமல் இப்படிப்பட்ட “அரசியல் அல்லாத” சக்திகளுடன் மட்டும் பேச்சு நடத்தவும், சமாதானப்படுத்தவும் மன்மோகன் சிங் அரசு முனைப்புக் காட்டுவது ஏன்?

            இடதுசாரிகளும் ஜனநாயக சக்திகளும் முன்வைத்த ஆலோசனைகளின் அடிப்படையில் லோக்பால் சட்ட முன்வரைவை மத்திய ஆட்சியாளர்கள் எப்போதோ கொண்டுவந்திருக்க முடியும். அந்தச் சட்டம் பிரதமர் உள்ளிட்ட உயர்பதவிகளில் இருப்போருக்கும் பொருந்தும் என்ற நிலைபாட்டை ஆட்சியாளர்கள் மேற் கொண்டிருந்தால் ஒரு நம்பகத்தன்மை ஏற்பட்டி ருக்கும். அதையெல்லாம் செய்யாமல் அன்னா ஹசாரேக்களுக்கும் ராம் தேவ்களுக்கும் மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது எதற்காக? மக்களிடையே அரசியல் உணர்வு வேர் கொண்டுவிடக்கூடாது என்ற அற்பமான கார்ப்பரேட் தாதாக்களின் விருப்பத்தை நிறைவு செய்வதன்றி வேறு எதற்காக? ஆயினும், இந்த நாட ங்களை உன்னிப்பாகக் கவனித்துவரும் மக்கள், தங்களது கவனத்தைத் திசை திருப்பும் முயற்சிகளை முறியடிப்பார்கள்.

நன்றி : தீக்கதிர்               ( அரசியல் விழிப்புணர்வு பெற 
                                                    தீக்கதிர்          
                                                     நாளேட்டினைப் படியுங்கள் )

கருத்துகள் இல்லை: