ஞாயிறு, 5 ஜூன், 2011

மக்களுக்கு மானியம் வழங்கினால் நாடு வளர்ச்சி அடையாதாம் - பொருளாதார மேதை அலுவாலியா சொல்கிறார்....!மானியங்களை குறைக்க வேண்டும் : மான்டேக் சிங் அலுவாலியா


               ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைய மாநிலங்கள் மானியங்கள் அளிப்பதை குறைக்க வேண்டும் என திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறினார். சென்னையில் சென்ற சனிக்கிழமை நடைபெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும்போது , 11-வது ஐந்தாண்டுத் திட்ட இறுதியில் இருக்கும் நாம், அடுத்து வரவுள்ள 12-வது ஐந்தாண்டு திட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் நாடு 9 சதவீத வளர்ச்சியைப் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 8.2 சதவீத வளர்ச்சியைத் தான் நாடு பெற முடிந்துள்ளது.  10-வது ஐந்தாண்டுத் திட்டத்துடன் ஒப்பிடும்போது 1 சதவீத வளர்ச்சியைத் தான் 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் நாடு பெற்றுள்ளது என்றபோதும், கடந்த ஐந்தாண்டுகளில் மிகப் பெரிய உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு இடையே 8.2 சதவீத வளர்ச்சி பெற்றிருப்பது என்பது மிகப் பெரிய விஷயம் ஆகும் என்று குறிப்பிட்டார்.  அடுத்து வரவுள்ள 12-வது ஐந்தாண்டு திட்டத்தை தயாரித்து வரும் நாம், அதில் பல்வேறு பிரச்னைகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைய மானியங்களை குறைப்பது, விவசாய வளர்ச்சி, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.  மாநிலங்கள் தேவையற்ற மானியங்கள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.  மண்ணெண்ணெய், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு மானியங்கள் வழங்குவதை மாநிலங்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்.அவ்வாறு மானியங்கள் குறைக்கப்பட வில்லையெனில் குறைந்த வளர்ச்சி, குறைந்த வேலைவாய்ப்பு, குறைந்த உற்பத்தியையே மக்களும், நாடும் எதிர்கொள்ள வேண்டி வரும்.

             மேலே உள்ளவைகள்... பொருளாதார மேதை மான்டேக் சிங் அலுவாலியா உதிர்த்த "பொன்மொழிகள்"...! அவருக்கு நம்முடைய கேள்வி என்னவென்றால்... 

             1 ) நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு அரசு கொடுக்கும் மானியம் எவ்வளவு ?  நிச்சயம்மாக சில ஆயிரம் கோடி ரூபாய் தான் இருக்கும்.
          
            2 ) பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இந்தியப் பெருமுதலாளிகள்  வழக்கமாக அடிக்கும்  கொள்ளை லாபத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை சமாளிக்க,  அவர்களுக்கு சென்ற ஆண்டு வரிச்சலுகைகளும், மானியமும் வழங்கிநீர்களே... அது எவ்வளவு தொகை தெரியுமா  ?  நிச்சயமாக  5 லட்சம் கோடி ரூபாய் என்பது எங்களுக்கும்  தெரியும்.
          
           3 ) அப்படி என்றால் சாதாரண மக்களுக்கு, மண்ணெண்ணெய், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றிற்குக் கொடுக்கப்படும் மானியத்தால் பொருளாதார வளர்ச்சியை அடையமுடியாது என்றால் பெருமுதலாளிகளுக்கு கொடுக்கப்படும் மாபெரும் மானியத்தால்  நாட்டின் வளர்ச்சி கூரையை பிய்த்து கொட்டுமா..?
             
           பெருமுதலாளிகளுக்கு  5 லட்சம் கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்ததால் தான்... இன்று நாட்டில்  # 85 கோடி மக்கள் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் வாடுகிறார்கள். # 15 கோடி படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் அல்லல்படுகிறார்கள். # படிக்கும் வயதுள்ள 12 கோடி ஏழைக் குழந்தைகள்   பள்ளிக்குச் செல்லமுடியாமல் திண்டாடுகிறார்கள்.

            எனவே மத்திய அரசு, எதிர்வரும் காலங்களில் பெருமுதலாளி-களுக்கு கோடிக் கோடியாய் கொட்டிக்கொடுக்கும் மானியத்தை நிறுத்திவிட்டு, 12 - வது ஐந்தாண்டுத் திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் , ஏழைக்குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வியும் அளிப்பதில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதை இந்தப் பொருளாதார மேதைக்கு எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

கருத்துகள் இல்லை: