சனி, 25 ஜூன், 2011

டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு விலையேற்றம் - மக்கள் ஒரு நாள் பொங்கி எழுவார்கள்

                     மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்யும் "சிறப்பு அதிகாரம்" பெற்ற குழுவின் கூட்டம் நேற்று இரவு கூடி,  டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 - ஆகவும் , மண்ணெண்ணையின் விலையை லிட்டருக்கு ரூ. 2 -ஆகவும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ.50 - ஆகவும்  உயர்த்துவது எனவும், இந்த விலை உயர்வு என்பது உடனடியாக நள்ளிரவு முதலே அமலுக்கு வரும் எனவும்  முடிவெடுத்து அறிவித்தது. ஒரு மாதத்துக்கு முன்பு தான் பெட்ரோலின் விலையை ரூ.5 - ஆக உயர்த்தப்பட்ட சூழ்நிலையில், இப்போது இந்த உயர்வு என்பது மக்களால்  தாங்கிக்கொள்ள முடியாதே என்கிற உணர்வு கூட இல்லாமல் மத்திய அரசு தான்தோன்றித்தனமாக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
               ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வினால் நொந்து போயிருக்கிற மக்களால்  இந்த விலை உயர்வை எப்படி தாங்கிக்கொள்ள முடியும் என்கிற ஒரு அடிப்படை சிந்தனைக் கூட - ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் தான்தோன்றித்தனமாக  மத்திய அரசு செயல்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மக்கள் அத்தியாவசிய பொருட்களின் தாறுமாறான விலை உயர்வால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். இப்படி கட்டுக்கடங்காமல் ஏறிக்கொண்டே போகும் விலையை கட்டுப்படுத்த திராணியில்லாத - வக்கில்லாத - லாயக்கில்லாத மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசுக்கு  மக்களை மேலும் தாக்கக்கூடிய இந்த எரிபொருளின் விலையை உயர்த்தும்   துணிச்சல் என்பது  எப்படி வந்தது. மத்திய அரசின் தவறான கொள்கைகளால், உணவு, குடி நீர், உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகளைத் தேடித்தேடி அலைந்து தேய்ந்து போன இந்த மக்கள் - பலம் இழந்து போன இந்த அப்பாவி மக்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்கிற தைரியம் தான் மத்திய அரசின் துணிச்சலான இந்த விலை உயர்வுக்கான காரணம் என்பது தான் உண்மை. 
                    எகிப்த்து மற்றும்  லிபியா நாடுகளை போல் மக்கள் எழுகிற நாள் விரைவில் வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.     

கருத்துகள் இல்லை: