ஞாயிறு, 5 ஜூன், 2011

சாமியாரை அப்புறப்படுத்தினால் அத்வானிக்கு ஏன் கோபம் வருகிறது ?

                     யோகா பயிற்சி நடத்தப்போவதாக டெல்லிப் போலீசில் அனுமதி பெற்று, ஊழலுக்கு எதிராகவும் கறுப்புப் பணத்திற்கு எதிராகவும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து விட்டு, புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் பா.ஜ.க., ஆர். எஸ்.எஸ்., வி எச்.பி., போன்ற மதவாத சக்திகளின் ஆதரவோடு நேற்று 4 - ஆம் தேதி காலை முதல் உண்ணாவிரதத்தை தொடங்கிய சாமியார் ராம்தேவையும், ஆதரவாக இருந்த மதவாதக் கூட்டத்தையும்  நேற்று இரவு போலீசார் அதிரடியாக அப்புறப்படுத்தினர். 
                   சாமியாரின் இந்த உண்ணாவிரதத்தை பயன்படுத்தி ஏதாவது அரசியல் ஆதாயம் தேடலாம் என்று எதிர்பார்த்த  பா. ஜ. க., - வின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டனர். அதனால்   போலீசாரின் இச்செயலை பார்த்து பா. ஜ. க., தலைவர்களில் ஒருவரான எல். கே. அத்வானிக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. இன்று ( ஜூன் 5 ) சென்னை வந்த அத்வானி செய்தியாளர்களிடம் கடுமையாக பொரிந்து தள்ளியுள்ளார். இது ஏதோ தேசபக்தக் கூட்டத்துக்கு எதிரான நடவடிக்கை போல் இந்த பிரச்சனை பற்றி விவாதிக்க பாராளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டுமாம். போலீசாரின் இந்த செயல் 1975 - இல் நடைமுறையில் இருந்த நெருக்கடி நிலையை நினைவுப் படுத்துகிறதாம். கொதிக்கிறார் அத்வானி. 
                 அதைவிட ஒரு கேவலமான விஷயம் என்னவென்றால்... ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத நாடகக் கூட்டத்தின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கையை பார்க்கும் போது, பஞ்சாப் -அமர்ததரசில் உள்ள  ஜாலியன் வாலாபாகில் நடத்தப்பட்ட  பிரிட்டிஷாரின் நடவடிக்கை தான் என் நினைவுக்கு வருகிறது என்று பேசியது என்பது இந்த தேசத்தின் விடுதலைக்காக இரத்தம் சிந்திய -  உயிர்த் தியாகம் செய்த தியாகிகளை - தலைவர்களை கேவலப்படுத்தி அவமானப்படுத்தி இருக்கிறார். இது மிகவும்  கண்டிக்கத்தக்கது. 
                 ஊழலுக்காக உண்ணாவிரதம் இருப்பது இருக்கட்டும்... திருவாளர் எல்.கே.அத்வானியை, இவரது கட்சி பா.ஜ.க ஆட்சி செய்யும் கர்நாடகா மாநிலத்திற்கும், குஜராத் மாநிலத்திற்கும் போய்ப் பார்க்கச் சொல்லுங்கள். ஊழல் முடை நாற்றம் அடிக்கும். 
                அரபு நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒட்டுமொத்த மக்களின் கோபம் மாபெரும் எழுச்சியாய் - புரட்சியாய் உருவாகி, மக்களுக்கெதிரான அந்த ஆட்சியாளர்களை துரத்திக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தான் இங்கு இந்தியாவில் அது போன்ற ஒரு மக்கள் எழுச்சி நம் நாட்டு மக்களின் எண்ணங்களில் கூட உதித்து விடாமல் தடுக்கத்தான், ஊழலுக்கேதிராக உண்ணாவிரதம் என்கிற நாடகத்தை நடத்தி மக்களின் கவனத்தை திசைத்திருப்புகிறார்கள்.  அதற்காக தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள் தான் இந்த  அன்னா ஹசாரேவும் , ராம் தேவும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஒன்றுபட்ட மக்கள் எழுச்சியின் மூலமும், மக்கள் புரட்சியின் மூலமும் மட்டுமே இந்தியாவில் புரையோடி போயிருக்கும் ஊழலையும், கருப்புப்பணத்தையும் ஒழித்து மக்களுக்கான ஒரு மாற்று ஆட்சியை தேர்ந்தெடுக்க முடியும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை: