புதன், 26 பிப்ரவரி, 2014

ஐ.டி .கம்பெனி பணி பெண்களுக்கு பாதுகாப்பற்றது - ஆபத்தானது....!

          
           இன்றைக்கு ஆயிரமாயிரமாய் அள்ளிக்கொடுக்கும் கம்ப்யூட்டர் சயன்ஸ் மற்றும் தகவல்  தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பணியைப்பற்றிய கனவோடு தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் இந்த படிப்புகளுக்கு தான் ஏகப்பட்ட போட்டியாக இருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு இந்த படிப்புக்கான இடத்தை வாங்குவதற்காக பெற்றோர்கள் ''கடன்பட்டு'' பல இலட்சங்களை செலவு செய்கிறார்கள். இடத்தை வாங்குவதற்கு மட்டுமல்ல, அந்த படிப்பை படித்து முடிப்பதற்குள்  ''மீண்டும் மீண்டும் கடன்பட்டு'' பல இலட்சங்களை பெருமையுடன் செலவு செய்கிறார்கள். அப்படியெல்லாம்  செலவு செய்து ''வாங்கிய'' படிப்பை வைத்து  எதிர்காலத்தில் ஒரு கனவுலகில் வாழப்போகிறோம் என்கிற நம்பிக்கையில்  தான் இன்றைய இளைஞர்கள் கஷ்டப்பட்டு படித்து முடிக்கிறார்கள். அவர்கள் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் போதே, இந்தியாவில் இருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள், ஐ.டி கம்பெனிகள், கால் சென்டர்ஸ், பிபிஒ என பலவகைப்பட்ட அமெரிக்க சார்பு நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கு இந்த இளைஞர்களை கூட்டம் கூட்டமாக தேர்வு செய்துவிடுகிறார்கள். பின் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கப்  போகிறது என்பது மட்டுமல்லாமல், தன்னோடு படிக்கும் நண்பர்களுடன் சேர்ந்து பணி செய்யப்போகிறோம் என்கிற இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
             பெரும்பாலும் அவர்களுக்கு சொந்த ஊரிலிருந்து தள்ளி வேறு ஊரில் இருக்கும் கம்பெனியில் தான் வேலை கொடுப்பார்கள். அப்போது தான் வீடு - குடும்பம் என்கிற நினைப்பு இல்லாமல் மணிக்கணக்கில்  அவர்களை வேலை வாங்கமுடியும். 50,000 வரையில் சொற்ப பணத்தைக்கொடுத்து ( நம் இளைஞர்களை பொருத்தவரை அதிக பணம் ), வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் அளித்துவிட்டு, ஐந்து வேலை நாட்களில் ''பத்து நாள்'' வேலைகளை வாங்கி அந்த இளைஞர்களை பிழிந்து சக்கையாக்கி போட்டுவிடுகிறார்கள். அதுமட்டுமல்ல இந்த ஐ.டி வேலை என்பதே பெரும்பாலும் ''இரவு நேரப்பணியாக'' தான் இருக்கும். இதில் பெண்களும் விதிவிலக்கல்ல. இதைப் புரிந்துகொள்ளாமல், இந்த வேலையை செய்யும் இளைஞர்களும், அவர்களின் பெற்றோர்களும் பூரித்துப் போய்விடுகிறார்கள்.
                இதையெல்லாம் தட்டிக் கேட்பதற்கு அங்கு தொழிற்சங்கம் உண்டா என்றால் அதெல்லாம் அங்கே கிடையாது. தொழிற்சங்கமே ஆரம்பிக்கமுடியாது. அங்கு வேலை செய்யும் இளைஞர்கள்  ''தொழிற்சங்கம்'' என்ற வார்த்தையை கேட்டால் ஏதோ கெட்டவார்த்தையை போல் முகம் சுளிப்பார்கள்.
               இரவு நேரப்பணி என்பதால் கொடுக்கப்பட்ட வேலை முடிந்ததும் இரவில் பெண்கள் உட்பட நேரங்கெட்ட நேரத்தில் தான் வெளியே அனுப்பப்படுவார்கள். இது பெண்களை பொருத்தவரை பாதுகாப்பற்றது - ஆபத்தானது என்பதை யாரும் புரிந்துகொள்வதே இல்லை. ஆள் நடமாட்டமில்லாத இரவு நேரங்களில் பணி  முடித்து வரும் அந்த பெண்கள் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இந்த பாலியல் கொடுமை என்பது வெளியில் மட்டுமல்ல. பெண்கள் பணி  செய்யும் ஐ.டி நிறுவனங்களின் உள்ளேயும் ''மனித மிருகங்களின்'' பாலியல் சீண்டல்களும், கொடுமைகளும் நடந்தவண்ணம் தான் இருக்கின்றன. இன்றைய பொருளாதார சூழ்நிலையில் அங்கே கொடுக்கப்படுகிற சம்பளம் அவற்றையெல்லாம் மறைத்துவிடுகிறது.
                  இரவு நேரப்பணி என்பதால், தூங்காமல் விழித்திருந்து வேலை செய்வதற்கு சிகரெட்டை புகைக்க கற்றுக்கொடுக்கிறார்கள். பெண்களும் இந்தப் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாகும். அதுமட்டுமல்ல, கடுமையான வேலை பளுவால் உண்டான மன இறுக்கத்தை போக்குவதற்கு இங்கே வேலை செய்யும் இளைஞர்கள் ''WEEK END PARTY'' என்ற பெயரில் மதுவுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதிலும் பெண்கள் விதிவிலக்கல்ல என்பதும் வேதனைக்குரிய விஷயமாகும். பண்பாடு - கலாச்சாரத்தையே குழித்தோண்டிப் புதைக்கும் இடமாக இன்றைய ஐ.டி  நிறுவனம் உள்ளன.
                   இன்னும் பெண்களுக்கெதிரான எவ்வளவோ பயங்கரங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இதெற்கெல்லாம் காரணம் அன்றைய - இன்றைய ஆட்சியாளர்கள் தான். தொழிலாளர்களுக்கு, பணி  செய்யும் பெண்களுக்கும் பாதுகாப்பை அளித்துவந்த நமது ''தொழிலாளர் சட்டத்தையே'' ஆட்சியாளர்கள் குழித்தோண்டி புதைத்தது தான் காரணம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லக் குழந்தைகளான தாராளமயம் - தனியார்மயம் - உலகமயம் என்ற பேய்களை வாழவைக்க,  அன்றைய வாஜ்பேயி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசு தான் நம் நாட்டில் மிகக்கடுமையாக இருந்த ''தொழிலாளர் சட்டத்தையே'' அழித்தொழித்தது என்பதை அனேகமாக யாரும் மறந்திருக்கமுடியாது. 
                 அதுவரையில் நம் நாட்டின் தொழிலாளர் சட்டத்தில், ஒருவரை வேலையிலிருந்து நீக்கவேண்டுமென்றால் மூன்று மாதம் நோட்டீஸ் கொடுக்கவேண்டுமென்றும், டாக்டர் - நர்ஸ்களை  தவிர பெண்களை  மாலை 6 மணிக்கு மேல் இரவு நேரப்பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் பல்வேறு ஷரத்துக்கள் இருந்தன. ஆனால் இந்தியாவில் மேலே சொன்ன அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளை தடையில்லாமல் நடத்துவதற்கு அன்றைய வாஜ்பேயி அரசு அந்த தொழிலாளர் சட்டங்களை '' காயடித்து நீர்க்க செய்துவிட்டது. வாஜ்பேயி அரசு மிகத் துணிச்சலாக அந்த ஷரத்துக்களையெல்லாம் நீக்கியதன் விளைவாகத்தான், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களும், ஐ.டி கம்பெனிகளும் நம் நாட்டு இளைஞர்களை கொத்தடிமைகளைப் போல் வேலை வாங்கிக்கொண்டு கோடிக் கோடியாய் இலாபம் ஈட்டுகிறார்கள். 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

நீங்கள் சொல்வது உண்மைதான்.... எல்லாவற்றுக்கும் காலந்தான் பதில் சொல்லும்...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-