ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

ஆட்சிக்கே வரவில்லை அதற்குள்ளே மிரட்டலும் அடாவடித்தனமும் தொடங்கிவிட்டன...!

                  
                 அமெரிக்காவில் வாழும் இந்தியா மற்றும் இந்திய மக்கள் பற்றிய ஆராய்ச்சி செய்யும்   இந்தியவியல் அறிஞர் வெண்டி டோனிகர் எழுதிய ''த ஹிண்டுஸ்: அன் ஆல்டெர்னேட்டிவ் ஹிஸ்டரி'' ( THE HINDUS - AN ALTERNATIVE HISTORY ) என்றபுத்தகத்தை அச்சிட்டு வெளியிட்ட ''பெங்குவின் புக்ஸ்'' என்ற புத்தக வெளியீட்டு நிறுவனமே  இந்தியாவிலுள்ள புத்தகக் கடைகளிலிருந்து புத்தகங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வது என்று அண்மையில் முடிவுசெய்தது. அதுமட்டுமல்லாமல்  மிச்சம் மீதியிருக்கின்ற அந்தப் புத்தகத்தின் பிரதிகளையும் ஒன்று விடாமல் அழித்துவிடுவதென்றும் முடிவெடுத்திருக்கிறது. 
               இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால்....? ''ஷிக்‌ஷா பச்சாவ் அந்தோலன்''  என்ற இந்துமத பிற்போக்கு அடிப்படைவாதக்குழு அந்த புத்தக நிறுவனத்திடம் காட்டிய மிரட்டலே காரணம். ஆனால் இந்த மிரட்டலுக்கு பெங்குவின் நிறுவனம் பணிந்தது தான் ஆச்சரியத்தை வரவழைக்கிறது. ஏனென்றால் இது போன்ற பிற்போக்கு மத அடிப்படைவாதக் குழுக்களின் மிரட்டல் என்பது பெங்குவின் நிறுவனத்திற்கு புதிதல்ல.  ''த சாட்டானிக் வெர்ஸஸ்'' என்ற  நாவலை வெளியிட்டபோதே உலகளவில் மிகப்பெரிய சவால்களையும், எதிர்ப்பையும், மிரட்டல்களையும் சந்தித்த நிறுவனம் தான் இந்த பெங்குவின் புத்தக நிறுவனம். அப்படிப்பட்ட நிறுவனமே இப்படிப்பட்ட மிரட்டலுக்கு பணிந்துவிட்டது என்பது ஆச்சரியத்தை தான் வரவழைக்கிறது.
              மாற்றுக் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் அல்லது தாங்கிக்கொள்ள முடியாமல் இதுபோன்ற பிற்போக்குத்தனமான செயல்களில் ஈடுபடுவது என்பது கண்டிக்கத்தக்கது. அச்சிட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தை திரும்பப்பெறுவது என்பதும், அல்லது அழிப்பது என்பதும் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல, படிப்பாளிகளின் புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் உரிமைக்கும் எதிரானது. எந்த புத்தகத்தை தேர்ந்தெடுப்பது என்பதும், படிப்பது என்பதும் புத்தகம் படிப்போரின் உரிமை சம்பந்தப்பட்டது. அவர்கள் கையில் சேரவேண்டிய புத்தகத்தை திரும்பப்பெறுவது என்பதும், அழித்தொழிப்பது என்பதும் கண்டிக்கத்தக்கது. பிற்போக்குத்தனமானது. 
              இந்துமதவெறிக் கூட்டத்தினர் இன்னும் ஆட்சிக்கே வரவில்லை. பிரச்சார களத்தில் தான் இருக்கிறார்கள். அதற்குள்ளாகவே இந்த அடாவடித்தனமும், மிரட்டலும் என்றால் ஆட்சிக்கு வந்துவிட்டால் என்னாகும்...? சிந்தித்துப்பாருங்கள்.
 

3 கருத்துகள்:

குலவுசனப்பிரியன் சொன்னது…

//... இப்படிப்பட்ட மிரட்டலுக்கு பணிந்துவிட்டது என்பது ஆச்சரியத்தை தான் வரவழைக்கிறது.//

புத்தகத்தின் இந்திய பதிப்பு மட்டும்தான் முடக்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து வாங்குவதற்கு தடை இல்லை.

http://www.npr.org/blogs/thetwo-way/2014/02/14/277043653/author-of-book-yanked-in-india-says-move-has-backfired

இக்பால் செல்வன் சொன்னது…

முட்டாள்கள். அந்தப் புத்தகத்தில் எதிர்ப்பதற்கு ஒன்றுமில்லை, அண்மையில் வெளியான மிகச் சிறந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று, ஒவ்வொரு இந்தியரும் வாசித்தறிய வேண்டிய புத்தகம். மதக் காட்டுமிராண்டிக் கூட்டம் அரசியல் பண்ண அப்பாவி புத்தகத்தின் மீது வன்மத்தைக் காட்டி உள்ளது. அவ்வளவே.

புரட்சி தமிழன் சொன்னது…

அந்த புத்தகத்தை படித்து பார்த்தீர்களா? ஒரு வரலாற்றை திக காரர்களிடம் கேட்டு எழுதிய ஒரு நூல். ஆராய்ச்சி செய்யாமலே எழுதிய நூல் இந்து மதத்தின் வரலாற்றை மறைத்து சங்க்பரிவார், பாரதிய ஜனதா, சிவசேனா போன்றவைதான் இந்து மதத்தை தோற்றுவித்ததை போல் அவர் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தவறான தகவலை கொடுத்துள்ளார் அதனால் அந்த பதிப்பகம் பிரதிகளை திரும்ப பெற்றது. இந்திய இந்துத்துவ அரசியல் என்று பெயர் வைக்கவேண்டிய புத்தகத்திற்கு இந்து மத மாற்று வரலாறு என்று பெயர் வைத்துள்ளார்.