வியாழன், 27 பிப்ரவரி, 2014

பாரதீய ஜனதாக் கட்சிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது...!

          
           பாரதீய ஜனதாக் கட்சிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்பதை அண்மையில் டெல்லியில் இஸ்லாமியர்கள் மத்தியில் அந்தக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் பேசிய பேச்சிலிருந்து நம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. அந்தக்  கூட்டத்தில் தனக்கு முன்னே கூடியிருந்த இஸ்லாமியர்களைப் பார்த்து கைக்கூப்பி மன்னிப்புக் கேட்டிருக்கிறார். நல்லவேளை இதை நம்ப ''கேப்டன்'' பார்க்கவில்லை. பார்த்திருந்தால் '' தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு'' என்று சொல்லியிருப்பார். திடீரென்று  மன்னிப்புக் கேட்க ''ஆணவத்தின் உச்சியில்'' இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு அப்படி என்ன அவசியம் ஏற்பட்டது. அண்மையில் ''மூன்றாவது மாற்று அணி'' கொஞ்சம் கொஞ்சமாக உருவம் பெற்று எழுச்சிக் கொண்டு விஸ்வரூபம் எடுப்பது கண்டு, ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியோ உருவம் தெரியாமல் காணாமல் போய்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பாரதீய ஜனதாக் கட்சியோ கரைந்து போய்  கொண்டு இருக்கிறது. அதன் காரணமாக பாரதீய ஜனதாக் கட்சிக்கு  தேர்தல் பயம் வந்து நடுங்குவது நமக்கு நன்றாக தெரிகிறது. 
             அந்த பயத்தில் தான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ராஜ்நாத் சிங் இஸ்லாமியர்களின்  கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்புக் கேட்கிறார். ''இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு எப்போதாவது, எங்கேயாவது எங்கள் சார்பில் ஏதாவது தவறுகளோ குறைபாடுகளோ நிகழ்ந்திருந்தால் அதற்காக நாங்கள் தலை வணங்கி மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளோம்'' என்று பாவமன்னிப்பு கேட்டு நெஞ்சுருக பேசியிருக்கிறார். அப்படி பேசியதன் மூலம் இஸ்லாமியர்களுக்கெதிராக ''நரவேட்டை'' நரேந்திர மோடி செய்த கொடுமைகள் அனைத்தும் உண்மை தான்என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
            மேலும் அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர்களைப் பார்த்து கதறியிருக்கிறார். ''பாரதீய ஜனதாக் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. எங்களுக்கு எதிரான தவறான பிரச்சாரத்தை நம்பவேண்டாம். நாட்டின் நலன் கருதி இந்த முறை எங்களுக்கு வாக்களியுங்கள். ஒருமுறை வாக்களித்துப் பாருங்கள். ஒரு அரசை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதற்காக நீங்கள் வாக்களிக்க கூடாது. சகோதரத்துவம், மனிதநேயம் மிக்க வலுவான நாட்டை உருவாக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்று கதறு கதறு என்று கதறியிருக்கிறார். 
                    இவர்களுக்கு எதிராக யாரும் பிரச்சாரம் பண்ணவேண்டாம். இவர்களது ''பிரதமர் கனவு வேட்பாளர்'' மோடி ஒருவரே போதும், இவரைப் பார்த்தாலே மக்கள் பாஜக-விற்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். இஸ்லாமியர்களுக்கு அந்த அளவிற்கு ''நல்லது'' செய்திருக்கிறார். நரேந்திர மோடி என்பவர் பாரதீய ஜனதாக் கட்சி தானே தலையை சொறிந்துகொள்ளும் ''கொள்ளிக்கட்டை'' என்பதை மறந்துவிடக்கூடாது. இப்போது கண் கேட்டபோது சூரிய நமஸ்காரம் எதற்கு...?  எப்போதாவது - எங்கேயாவது மோடியால் அல்லது பாரதீய ஜனதாக் கட்சியினால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை விளைந்திருக்கிறதா...? இல்லையே. இஸ்லாமிய இனப்படுகொலையை செய்த இவர்கள் இஸ்லாமியர்களிடமே எப்படி தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்கிறார்கள். இஸ்லாமியர்கள் ஒரு முறை பாஜக ஆட்சி செய்ய வாய்ப்புக் கொடுத்தால், அது இவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்று அவர்களுக்கு தெரியாதா...? 
               மதத் திமிர், வக்கிரகுணம், ஆணவம்,  அதிகார போதை, பிற்போக்குத்தனம், ஆர்.எஸ்.எஸ்.-ன் குணம்  ஆகியவற்றின் மொத்த உருவமான நரேந்திர மோடி, பன்முக சமூகங்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டில் வாழத் தகுதியற்றவர் என்பதை அவரே நிருபித்து காட்டியிருக்கிறார். அவர் மனித உருவில் உள்ள ஒரு  மிருகம் என்பதை குஜராத்தில் இஸ்லாமியர்கள் நேரில் பார்த்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர் வேற்றுமையில் ஒற்றுமை, மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த இந்த தேசத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இங்குள்ள இஸ்லாமியர்களின் எதிர்காலம், அவர்களது வாழ்க்கைப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், உயிர் மற்றும் உரிமைகள் எல்லாம் என்ன ஆகும்...? அந்த ''குஜராத் மாடலை'' நாடு முழுதும் பார்க்கவேண்டுமா...? இது தான் ராஜ்நாத் சிங்கைப் பார்த்து இந்திய இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்வி...?????????????????????

கருத்துகள் இல்லை: