செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

திருச்சி மாநாடு - திமுகவின் இரட்டை வேடம்....!

                                                                                                                                                         
          அண்மையில் திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற திமுகவின் 10-ஆவது மாநாட்டில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு தேர்தலுக்கு முன்னோட்டம் பார்க்கப்பட்டது. அந்த மாநாட்டில் பல தரப்பட்ட மக்களை திருப்திப்படுத்தும் பொருட்டு - அவர்களின் ஓட்டுக்கு குறிவைத்து வகை வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் ஒன்று சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி சம்பந்தப்பட்டது. இப்போது தான் சில்லறை வர்த்தகத்தைப்பற்றிய அறிவிப்பு வந்தது போலவும், அதனால் பாதிக்கப்படும் வணிகர்கள் மீது அக்கறை காட்டுவது போலவும்  ஒரு நாடகத்தை அரங்கேற்றியதை பார்த்து தமிழக வணிகர்களே எரிச்சலடைந்தார்கள். அப்படி என்ன சொல்கிறது அந்த தீர்மானம் என்றால், ''சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்கக்கூடாது'' என்கிறது. 
             திமுகழகம் சென்ற காலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருந்த போது, சில்லறை வர்த்தகத்தில் அன்னியநேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவெடுக்கும் போது மந்திரிசபைக் கூட்டத்தில் அதை எதிர்த்து கொஞ்சம் கூட வாயை திறக்காமல் தலையாட்டிவிட்டு, பிறகு பாராளுமன்ற இருஅவைகளிலும் அதைப்பற்றிய விவாதம் நடந்தபோது அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவாக வாக்களித்ததை கருணாநிதி வேண்டுமானால் தேர்தலுக்காக மறந்தது போல் நடிக்கலாம். ஆனால் மக்கள் மறக்கவில்லை. பாதிப்புக்குள்ளான வணிகர்கள் மறக்கவில்லை என்பது தான் உண்மை.
             ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலை. இறங்கியதும் ஓட்டுக்காக ஒரு நிலை. திமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். இனியும் ஏமாறமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை: