செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

இத்தனைக் காலம் ''குட்டித்தலைவர்'' ராகுல் எங்கே போயிருந்தார்...?

       
         “நாம் சாதாரண மனிதர்களின் முன்னேற்றம் குறித்து, குறிப்பாக விவசாயிகளின் முன்னேற்றம் குறித்து யோசிக்கிறோம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நாம் உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு விவசாயத்தில் ஈடுபடும் வாய்ப்பினை காங்கிரஸ் வழங்குகிறது. ஆனால், பாஜக விவசாயத்தில் ஈடுபட அவர்களை கட்டாயப்படுத்துகிறது” என்று விவசாயிகளின் மீது தங்களுக்கு அக்கறை இருப்பது போல் காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல்காந்தி அண்மையில் உருக்கமாக பேசியிருக்கிறார். விவசாயிகளுக்காக இவ்வளவு தூரம் உருகிப் பேசும் ''குட்டித்தலைவர்'' நடந்து முடிந்த 15-ஆவது நாடாளுமன்றத்தில் ஒரு கூட்டத் தொடரில் கூட -  ஒருமுறைகூட விவசாயிகள் குறித்து இவ்வளவு உருக்கமாக வாய் திறந்து பேசியது இல்லையே.  எந்த பிரச்சனைகளைப் பற்றியும் இவர் பேசியது இல்லை. முதலில் இவர் பாராளுமன்றக் கூட்டங்களுக்கு வந்தா தானே...? இவர் தான் 15-ஆவது பாராளுமன்றத்தில் எல்லோரையும் விட மிகக்குறைவான கூட்டங்களில் கலந்துகொண்ட ''பெருமைமிகு'' எம்.பி. ஆவார். அந்த அளவிற்கு மக்களின் மீதும் விவசாயிகளின் மீதும் அவ்வளவு அக்கறை. இப்படிப்பட்டவர் தான் இன்றைக்கு விவசாயிகளைப் பற்றி இவ்வளவு உருக்கமாக பேசுகிறார். இன்றைக்கு இவரு மட்டுமல்ல, இன்னொரு பக்கம் பாஜகவின் ''பிரதமர் கனவு வேட்பாளர்'' ஊர் ஊராகத் திரியும் நரேந்திர மோடியும் கூட விவசாயிகள் குறித்து இன்றைக்கு கண்ணீர் வடிக்கின்றார். 
           ஆனால் உண்மையில் அந்த இரு கட்சிகளுமே அமெரிக்கா சார்ந்த கொள்கையைக் கொண்டு இந்தியாவின் கோடானுகோடி விவசாயிகளையும்,  விவசாயத்தையும் வஞ்சித்தவர்களே என்பதை நாடு அறியும். பிரதமர் மன்மோகன் சிங் ஒருமுறை விவசாயிகள் விவசாயத்தைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்கள் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் துணிச்சலாக கூறினார். இதன் பொருள் என்ன...?  இனிமேல் இந்தியாவில் சிறுகுறு விவசாயிகளுக்கு இடம் இல்லை. விவசாயத்தையும் சேர்த்து பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெருமுதலாளிகளும் பார்த்துக் கொள்வார்கள். விவசாயிகள் இனிமேல் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் கூலிகளாக பிழைத்துக் கொள்ளட்டும் என்பது தான் பிரதமர் பேசியதன் பொருள் என்பதைக் கூட விவசாயிகள்  இதுவரை புரிந்துகொள்ளவில்லை. புரிந்திருந்தால் அப்போதே ராகுல் காந்தியை நாக்கை பிடுங்குகிற மாதிரி கேள்வி கேட்டிருப்பார்களே...? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் இந்தியாவில் அதிர்ச்சி தரும் அளவிற்கு விவசாயிகளின்  தற்கொலை எண்ணிக்கை அதிகரித்தது என்பதை ராகுல் வேண்டுமானால் வசதியாக மறந்திருக்கலாம். ஆனால் விவசாயிகள் அதை மறந்திருக்கமாட்டார்கள். 
            இன்றைக்கு விவசாயிகள் மத்தியில் சென்று பேசும் ராகுல்காந்தி, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கான சூழலை மாற்ற ஒருபோதும் முயற்சித்ததில்லை. அந்த விவசாயிகள் விதியினால் சாகவில்லை ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைமையிலான அரசும் செய்த சதியினால் தான் செத்து மடிந்தார்கள்.  பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை இவர்கள் அனுமதித்ததால் தான் அதைப் பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகள் வாழ வழியின்றி உயிர் விட்டனர். மேலும் உரத்திற்கான  மானியம் இவர்கள் ஆட்சிக்காலத்தில் தான் தொடர்ந்து வெட்டப்பட்டது. விளைபொருள்களுக்கும்  கட்டுபடியான விலை கொடுக்கப்படவில்லை. ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் மோசடி வர்த்தகத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதித்ததாலும் நஷ்டப்பட்டது விவசாயிகள் தான். காங்கிரஸ் கட்சியின் இப்படிப்பட்ட விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை மக்களும், விவசாயிகளும் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள்.
        இன்றைக்கு விவசாயிகளுக்கு முற்றிலும் விரோதமான கட்சியாகவே காங்கிரஸ் கட்சி உள்ளது என்பதை ராகுல் காந்தி உணரவேண்டும்.  ஆனால் இந்த ''குட்டித்தலைவர்'' ராகுல்காந்தி ஏதோ இப்போதுதான் விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு இறங்கி வந்தவர் போலவும், நாட்டில் இதுவரை நடந்தது எதுவுமே தனக்கு  தெரியாதது போலவும் இன்றைக்கு பேசுகிறார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச நிவாரணம் அளிக்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கொடுத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மன்மோகன் சிங் அரசு கடைசிவரை மறுத்தே வந்துள்ளது என்பதை மறைத்து - மறந்து , விவசாயிகளுக்கான விளைபொருளை கொண்டு செல்வதற்கான பிரத்யேக வழியை உருவாக்க உறுதி பூண்டுள்ளதாகவும் ராகுல் காந்தி விவசாயிகளிடம் அளந்துள்ளார். ஆனால் விவசாயிகளின் இறுதியாத்திரைக்கு வழி அமைத்த அரசு தான் இவருடைய அரசு என்பதை நாடு மறந்துவிடவில்லை.

கருத்துகள் இல்லை: