சனி, 15 பிப்ரவரி, 2014

தேசத்தை மாற்றப்போகும் மாற்றுக்கொள்கை - எழுச்சியுடன் உருவாகிவரும் மாற்று அணி...!

         
கட்டுரையாளர் : தோழர்.பிரகாஷ் காரத்      
                                பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
           நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், தேர்தல் களம் என்பது இரு அணிகளுக்கு இடையேயானதல்ல, மாறாக மூன்றுவிதமான அணிகளுக்கு இடையேயானது. அதாவது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  மற்றும் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி என உருவாகி இருக்கிறது.

போட்டி இரு வழியில் இல்லை                                                            

               ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் நினைத்திருந்ததுபோல் இன்றுள்ள நிலைமை இல்லை. நரேந்திர மோடி, சென்ற ஆண்டு செப்டம்பரில் ஆர்எஸ் எஸ்-இன் தலையீட்டின் பேரில் பாஜக-வின் பிரதமர் வேட்பாளராக முடி சூட்டப்பட்ட பிறகு, பிரதமருக்கான பிரச்சாரத்தில் மோடியைத் தூக்கி நிறுத்திட ஊடகங்கள் கடுமையாக முயன்று வருகின்றன. காங்கிரஸ் கட்சி, தங்களுடைய கட்சியின் சார்பான பிரச்சாரத்திற்கான பொறுப்பினை ராகுல் காந்தியிடம் தரத் தீர்மானித்த பிறகு, போட்டி என்பது எதையும் செய்துமுடிக்கும் துணிவுள்ள மோடிக்கும் செயல் நயமற்ற ராகுல்காந்திக்கும் இடையிலான ஒன்று என்பது போலச் சித்தரித்து வந்தன. இவ்வாறு மோடிக்கு ஆதரவாக தன்னுடைய அனைத்து விதமான சாமர்த்தியத்துடனும் பாஜக தன்னுடைய பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தது. ஆயினும், மக்களை ஏமாற்றக்கூடிய விதத்தில் இவர்கள் நடத்திவந்த நாடகம் எந்த அளவிற்குப் போலியானது என்பதை கடந்த சில வாரங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் வெளிக்கொண்டு வந்துவிட்டன.
            இது ஒன்றும் இரு தலைவர்களுக்கு இடையிலான அல்லது இரு கட்சிகளுக்கு இடையிலான அல்லது ஏன் இரு கூட்டணிகளுக்கு இடையிலான போட்டி இல்லை என்பது மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீர்கேடு அடைந்து கொண்டிருக்கக் கூடிய பின்னணியில் தான் மக்களவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. மட்டுமீறிய விலைவாசி உயர்வு, ஏழைவிவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளமை, வேலையில்லா இளைஞர் பட்டாளம் மிகவும் அதிகரித்துள்ளமை ஆகியவற்றுடன் சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகக்கூடிய விதத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் வீட்டு வசதிகள் பரிதாபகரமான முறையில் மாறியுள்ளன. இவையனைத்துக்கும், மன்மோகன் சிங் அரசாங்கம் விடாப்பிடியாகக் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகள் தான் காரணங்களாகும். நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளை போவதும், அபரிமிதமான லஞ்ச ஊழலும் இதன் வெளிப்பாடுகளேயாகும். பேராசை பிடித்த நவீன தாராளமயக் கொள்கையின் சமூகத் தாக்கத்தை நாடு முழுவதும் பெண்கள் மீது நடந்துவரும் அதிபயங்கரமான தாக்குதல்கள் மற்றும் உரிமைகளுக்காகப் போராடும் மக்களின் மீதான காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகளிலிருந்து நன்கு பார்க்க முடியும்.
            இவை அனைத்திற்கும் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியது காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தான். காங்கிரஸ் கட்சி இவ்வாறு மக்கள் மத்தியில் தனக்கிருந்த பிடிப்பை முழுமையாக இழந்து, நடைபெறவிருக்கும் தேர்தலில் படுவீழ்ச்சியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்துவரும் கோபத்தை, பாஜக தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நரேந்திர மோடியால் முன்வைக்கப்படும் சிகிச்சை, நோயைவிட மோசமானதாகும். அவர் அரக்கத்தனமான முதலாளித்துவப் பாதையே இப்போதுள்ள துன்பங்களுக்கெல்லாம் மாமருந்து என்று கூறுகிறார். ஆனால் அது மக்களின் இன்றைய அவலநிலையை மேலும் மோசமான அளவிற்கு மாற்றுவதற்கே இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை. ஊழல் காங்கிரஸ் ஆட்சியால் விளைந்துள்ள அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு, அதன்மீது தன்னுடைய கெடு நோக்குடைய பெரும்பான்மை வகுப்பு வாதத்தை முன்னெடுத்துச் செல்வதே அவருடைய “வளர்ச்சி’’ நிகழ்ச்சிநிரலின் கட்டமைப்பாகும்.
             ஆனாலும், மோடி மற்றும் பாஜகவின் செல்வாக்கு என்பது வரையறைக்கு உட்பட்ட ஒன்றே. இதற்கு அதனுடைய ஸ்தாபன செல்வாக்கின்மை மட்டுமல்ல, பல மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக வேறு பல கட்சிகளும் சக்திகளும்கோலோச்சுகின்றன என்பதும், காங்கிரசுக்கு மாற்றாக, பாஜகவைவிட தங்களால் சிறந்ததோர் ஆட்சியை மக்களுக்கு அளிக்க முடியும் என்று அவை மக்கள் மனதை வென்றிருப்பதும்தான் காரணங்களாகும். 

மாற்று துருவம்                                                                 

           காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளை ஒரேகுடையின்கீழ் கொண்டுவருவதற்கான சமீபத்திய முயற்சிகள் இந்திய அரசியலில் இத்தகைய மாற்றுத் துருவத்தை நோக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இவ்வாறு எழுச்சியுடன் உருவாகியுள்ள மாற்றிற்கு அடித்தளமாக மாநிலக் கட்சிகள் அமைந்துள்ளன. இடதுசாரிக்கட்சிகளுடன் இவை இணையும் போது அது ஓர் அகில இந்திய மாற்றுக்கான வடிவத்தைப் பெறுகிறது. 2004லும் 2009லும் நடைபெற்ற கடந்த இரு மக்களவைத் தேர்தல்களிலும், காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக ஆகிய இருகட்சிகளும் பெற்ற ஒட்டுமொத்த வாக்குசதவீதம் என்பது 50 சதவீதத்திற்கும் குறைவேயாகும். உண்மையில், இது 2004ல் 46.7 சதவீதம், 2009ல் 47.4 சதவீதமேயாகும். அதன்பின்னர், பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாநிலக் கட்சிகளின் வலு மெய்ப்பிக்கப் பட்டிருக்கின்றன.
         அவை மக்களிடம் கணிசமான ஆதரவினைப்பெற்று மாநிலங்களில் ஆட்சிகளை அமைத்திருக்கின்றன. அதிமுக, சமாஜ்வாதிக் கட்சி, பிஜு ஜனதாதளம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியாக செயல்பட முன்வந்திருக்கின்றன. இக்கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம், அசாம் கண பரிசத், ஜார்கண்ட் விகாஸ்மோர்ச்சா போன்ற மாநிலக் கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளன. சென்ற ஆண்டு அக்டோபர் 30 அன்று நடை பெற்ற வகுப்புவாதத்திற்கு எதிராகவும், மக்கள் ஒற்றுமைக்காகவும் நடைபெற்ற சிறப்பு மாநாடு ஒன்று நடைபெற்றதை நினைவுகூர்வோம்.
                  அந்த சிறப்பு மாநாட்டில் பதினான்கு கட்சிகள் கலந்து கொண்டன. இவற்றில் தற்போதும் ஐக்கிய முர்பொக்குக் .கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்றஅனைத்துக் கட்சிகளும் பாஜகவை யும், காங்கிரசையும் எதிர்த்து முறியடிப்பதற்கான பொதுவான குறிக்கோளினைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இக்கட்சிகளில் 11 கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ளவை களாகும். இந்த 11 கட்சிகளும் காங் கிரசுக்கும் பாஜகவுக்கும் மாற்றாக, வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் களின்போது ஒன்றிணைந்து செயல்படத் தீர்மானித்திருக்கின்றன. இவற்றுடன் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத மேலும் சில கட்சிகளும் சேரலாம்.

விஷத்தைக் கக்கும் பாஜக                                            

           இக்கட்சிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் வந்திருப்பதை அறிவித்த போது, (இதனை ஊடகங்கள் “மூன்றாவது அணி’’ என்று அழைக்கின்றன) பாஜகவிற்கு கிலி பிடித்துவிட்டது. மூன்றாவது அணி என்பது “ஒரு மாயை’’ என்றும், “தோல்வியடைந்த ஒரு பரிசோதனை’’ என்றும், “மக்களுக்கு ஏற்படையது அல்ல’’ என்றும் மூன்றாவது அணியைத் தாக்கி பாஜக தலைவர்கள் அறிக்கைகளையும், பேச்சுக்களையும் உதிர்த்தவண்ணம் இருக்கிறார்கள். நரேந்திரமோடி மூன்றாவது அணியை “மூன்றாந்தரம்’’  என்று தாக்கி இருக்கிறார். பாஜக இவ்வாறு விஷத்தைக் கக்குவதற்கான காரணம் மிகவும் தெளிவானது. இதுநாள்வரை தேர்தல் களம் என்றால் அது “காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இடையேயானது’’ என்றும், “மோடிக்கும் ராகுலுக்கும் இடையேயானது’’ என்றும் தான் வர்ணிக்கப்பட்டு வந்தது.
இதன்மூலம் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு இருந்து வரும் அபரிமிதமான அதிருப்தியை நன்கு அறுவடை செய்து கொள்ளலாம் என்று பாஜக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கனவு கண்டு வந்தது. ஆனால், காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ''தேர்தல் மாற்று'' ஒன்று எழுச்சியுடன் உருவாகியிருப்பதானது அக்கட்சியை முழுமையாக நிலைகுலையச் செய்துவிட்டது. பாஜகவின் வெற்று ஆரவாரங்கள் எல்லாம் வெட்டவெளிச்சமாகிக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை வகுப்புவாதத்தின் அடிப்படையிலான எதேச்சதிகாரத் தலைவராக ஒருவரை பாஜக முன்னிறுத்தியிருப்பதற்கு முற்றிலும் மாறாக, காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் அணி என்பது முற்றிலும் வித்தியாசமான உருமாதிரியை அடிப்படையாகக் கொண்டதாகும். இடது சாரிக்கட்சிகளும், மாநிலக்கட்சிகளும் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது வலுவான பிடிப்பு உள்ளவைகளாகும். அவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட முன்வந்துள்ளதிலிருந்தே இது நன்கு வெளிப்பட்டது. அக்கட்சிகளுக்கு இடையேயான அடையாளங்களும் சுயாட்சி உரிமைகளும் பரஸ்பரம் மதிக்கப்பட்டன. இது மேலும், நவீன தாராளமயக்கொள்கைகளுக்கு மாற்றாக ''மாற்றுக்கொள்கைகளைப்'' பரப்பிட தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ள இடதுசாரிக் கட்சிகளுக்கும் வாய்ப்பளித்துள்ளது.

கூட்டுப் பிரகடனம்                                        

              தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் 11 கட்சிகளும் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தி, இம்மாற்று உருவானதை அறிவித்திடத் தீர்மானித்துள்ளன. அந்த சமயத்தில் இம்மாற்றின் அடிப்படை வடிவம், கொள்கைகள் மற்றும் திசைவழி ஆகியவை குறித்து ஒரு பிரகடனமும் வெளியிடப்பட இருக்கிறது. இதில் ஒருங்கிணைந்துள்ள கட்சிகளின் தனித்தன்மையைக் கணக்கில் கொண்டு, இக்கட்சிகளுக்கு இடையே ஒரு தேர்தல் கூட்டணியோ அல்லது இக்கட்சிகளுக்கிடையே இடஒதுக்கீடுகளோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
               இக்கட்சிகளில் பெரும்பாலானவை மாநில அடிப்படையில் செயல்படுவதால், அவை இதர மாநிலங்களில் உள்ள கட்சிகளுடன் இடஒதுக்கீடுகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வது சாத்தியமில்லை. ஆனால், இக்கட்சிகள் அனைத்துமே, அகில இந்திய அளவில் கூட்டிணைப்புக்கு வாய்ப்பு அளிக்கக்கூடிய விதத்தில், தங்கள் மாநிலங்களில் வலுவைத் திரட்டிட முடியும். அத்தகைய முறையில் அவை தங்கள் மாநிலங்களில் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாடுகளின் மூலம் காங்கிரசுக்கும், பாஜகவிற்கும் எதிராக தங்கள் அரசியல் நிலைப்பாட்டையும், கொள்கைகளையும் வடிவமைத்து, வலுப்படுத்திக்கொள்ள முடியும்.
         இத்தகைய காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மேடையால் காங்கிரஸ்கட்சியின் ஆட்சியால் கடும்வெறுப்புக்கும் சலிப்புக்கும் ஆளாகியுள்ள மக்களுக்கு ஒரு மாற்றை அளித்திடவும், காங்கிரசுக்கு மாற்று பாஜக தான் என்கிற பாஜகவின் வெற்று ஆரவார முழக்கங்களை வலுவாக முறியடித்திடவும் முடியும். எழுச்சியுடன் உருவாகியுள்ள இத்தகையதொரு மாற்று, காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திட, மத்தியில் வகுப்புவாத சிந்தனைகொண்ட கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுத்திட விரும்பும், நாட்டிலுள்ள அனைத்து மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளும் அணிதிரளும் ஒரு மையமாக அமைந்திடும்.
- தமிழில்: ச.வீரமணி 
நன்றி :
 

கருத்துகள் இல்லை: