செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

உள்ளத்தில் ‘இந்து ராஷ்ட்ரா’, உதடுகளில் வளர்ச்சி மந்திரம்...!

கட்டுரையாளர் : சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,             

           “இலக்கு ஒரு பக்கம், பார்வை எதிர்ப்பக்கம்”. இது எங்களது தலைமுறை இளமைக்காலத்தில் கேட்டு ரசித்த இந்தி திரைப்படப்பாடல். பி.ஜே.பி / ஆர்.எஸ்.எஸ்-ன் இன்றைய பிரச்சாரம் எனக்கு இந்தப் பாடலையே நினைவுபடுத்துகிறது. சகிப்புத்தன்மையற்ற, பாசிச இந்து ராஷ்ட்ரா என்ற இலக்கினை மத அடிப்படையிலான திரட்டல் மூலம் அடைவது ஆர்.எஸ்.எஸ்-ன் செயல் திட்டம். ஆழ்மனதில் உள்ள இந்த உண்மையான இலக்கினை மறைத்து, வளர்ச்சி, முன்னேற்றம் என்று பி.ஜே.பி மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது. எனினும், அதனுடைய இரட்டைத்தன்மை பல இடங்களில் தவிர்க்க இயலாத நிலையில் வெளிப்பட்டும் வருகிறது.

கூட்டாட்சித் தத்துவ முகமூடி!       

           நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில், வகுப்புவாத வன்முறை மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது பி.ஜே.பி அதைக் கடுமையாக எதிர்த்துத் தடுத்து நிறுத்தி விட்டது. கூட்டாட்சி நெறியினை அந்த மசோதா சிதைப்பதாகக் கூறியது. இடதுசாரிகள் எப்போதுமே வகுப்புவாதத்தை தடுப்பதற்கும், வகுப்புவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு மற்றும் நஷ்ட ஈடு விரைவில் கிடைப்பதற்கும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உடனடியாக நீதி கிடைப்பதற்கும் வழிவகை செய்கின்ற இது போன்ற மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென்று தொடர்ந்து கோரி வந்திருக்கின்றனர். அதே நேரத்தில், மாநில அரசாங்கங்களின் உரிமைகளுக்கும், மத்தியில் கூட்டாட்சிக் கட்டமைப்புத் தன்மைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதிலும் இடதுசாரிகள் உறுதியாக உள்ளனர். பாரதீய ஜனதா கட்சி இந்த மசோதாவை எதிர்த்ததற்கு ஒரே காரணம் அதனுடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு எந்தவொரு பங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான். அது தான் பி.ஜே.பியின் உண்மையான கவலை. ஆனால், அதை மறைப்பதற்காக கூட்டாட்சி நெறிமுறைகளைக் காப்பாற்றும் காவலன் என்ற முகமூடியினை அது அணிந்து கொண்டது.

ஒற்றை அரசே இறுதி இலக்கு!             

         உண்மையில் கூட்டாட்சிக் கட்டமைப்பினைத் தகர்க்க வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ் / பி.ஜே.பியின் நோக்கம். எம்.எஸ். கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ் / பி.ஜே.பி கட்சியின் குருவாகக் கருதப்படுபவர். ‘இந்து ராஷ்ட்ரா’வினை உருவாக்குவதற்கான சித்தாந்தக் கட்டமைப்பினையும், ஸ்தாபனக் கட்டமைப்பினையும் உருவாக்கிக் கொடுத்தவர் இவர். 1939-ம் ஆண்டு இவர் எழுதிய ‘நாமும், நமது தேசமும் - ஒரு வரையறை’ என்ற நூலில் ”இந்து ராஷ்ட்ரா” கட்டுவது குறித்தும், சங் பரிவாரின் ஸ்தாபன அமைப்பு இந்து ராஷ்ட்ரா என்ற நோக்கத்தை எட்டும் வகையில் எவ்வாறு தகவமைக்கப்பட வேண்டும் என்றும் விவரித்துள்ளார்.
        அதில் அவர் இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் பேசும் கூட்டாட்சி நெறிமுறையினை குழி தோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்றும், அனைத்து “சுயேச்சையான” அல்லது “அரைகுறை சுயேச்சையான” மாநில அரசுகளை ஒழித்து விட்டு, நாடு முழுவ தற்குமான ஒற்றை அரசை உருவாக்கிட வேண்டும் என்றும் கூறுகிறார். அந்த ஒற்றை அரசின் பெயர் பாரதம் என்றும், ”ஒரே நாடு, ஒரே அரசு, ஒரே சட்டம், ஒரே தலைவர்” என்றுஅதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் நமது அரசியலமைப்புச் சட்டத்தினை மறுவரையறை செய்து, ஒற்றை அரசாங்கத்தின் கீழ் இந்த நாடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். (1966ம் ஆண்டு எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ மூன்றாம் பதிப்பு, பக்கம் 227).

சந்தர்ப்பவாத சாகசங்கள்!               

         ஒரு பக்கம் பாரதீய ஜனதா கட்சி ஜார்க் கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் உருவானதற்கான பெருமை தன்னைச் சாரும் என்று கூறிக் கொள்கிறது. மறுபுறம், தெலுங்கானா விவகாரத்தில் இரட்டைநிலைப்பாட்டை எடுத்து வருகிறது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, மொழிவாரி மாநிலங்களைபிரிக்கக்கூடாது என்று மிகத் தெளிவான நிலைபாட்டினைக் கொண்டுள்ளது. ஆர்.எஸ்எஸ்சும்பாரதீய ஜனதா கட்சி யும் தொடர்ந்து ”ஒரு நாடு,ஒரே மக்கள், ஒரே தேசம்” என்று ஒரு பக்கம்பேசிக் கொண்டே, மறுபுறத்தில், மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் சந்தர்ப்ப வாதத்தை அளவு மீறி கடைப்பிடித்து வருகின்றன.

குஜராத் ‘வளர்ச்சி’யின் லட்சணம்!                 

              அதே போலத்தான் “குஜராத் மாதிரி”யை முன்னிறுத்துவதும், வளர்ச்சி பற்றி பேசும் பிரச்சாரமும் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி கடைப்பிடிக்கும் தந்திரமேயாகும். மாநில அரசுகளின் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியிலும், அந்நிய நேரடி மூலதன வரவிலும், தொழிலில் பின்தங்கிய மாநிலங்களான ஒடிசாவிற்கும், சத்தீஸ்கருக்கும் கீழே தான் குஜராத் மாநிலம் உள்ளது என்று திட்டக்கமிஷன் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது. தனிநபர் வருமானம் என்ற அடிப்படையில் பார்த்தாலும், குஜராத் இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஆறாவது இடத்திலும், வறுமைக் குறியீட்டின் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலும், ஆயுட்காலத்தின் அடிப்படையில் எட்டாவது இடத்திலும் உள்ளது.
            மனிதவளக் குறியீட்டின் அடிப்படையில், இந்தியாவின் அனைத்து முக்கிய மாநிலங்களில், குஜராத் மாநிலம் பத்தாவது இடத்தில் உள்ளது. ஆரோக்கியத்திற்கான குறியீட்டின்படியும், கல்விக்கான குறியீட்டின் அடிப்படையில் பார்த்தாலும் குஜராத் ஆறாவது இடத்தில் தான் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளும், 55 சதவீத பெண்களும் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தான் ‘குஜராத் மாடல் வளர்ச்சி’. உண்மை இப்படி இருந்தும் கூட, “குஜராத்தின் வளர்ச்சி கதை” இந்திய கார்ப்பரேட் உலகினால் மிகவும் பாராட்டப்படுகிறது.

இந்து தீவிரவாதம்!                

           இந்துத்துவா தீவிரவாதக் குழுவின் முக்கியமான நபர்களில் ஒருவரான அசீமானந்தா பற்றிய ஒரு முகப்புக் கட்டுரையை ‘கேரவன்’ பத்திரிகை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. தற்போது சிறையில் உள்ள அவர் 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சம்ஜட்டா இரயில் குண்டு வெடிப்புச் சம்பவம், 2007ம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற மெக்கா மசூதி குண்டு வெடிப்புச் சம்பவம், அக்டோபர் 2007ல் நடைபெற்ற அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றவற்றில் முக்கிய குற்றவாளி யாவார்.
மேலும் செப்டம்பர் 2006ல் மலேகா னிலும், 2008ல் மஹாராஷ்ட்ராவிலும் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டி ருப்பினும், இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்படவில்லை. இத்தகைய குற்றவாளி யைப் பற்றி பேசும்போது, ”அவருடைய இந்த தீவிரவாதத் தாக்குதல்கள் ஆர்எஸ்எஸ்சின் உயர்மட்டக் குழுவின் ஒப்புதலுடன் நடைபெற் றவை என்றும், தற்போது ஆர்எஸ்எஸ்சின் தலைவராக உள்ள மோகன் பகவத் அப்போது ஆர்எஸ்எஸ்சின் பொதுச் செயலாளராக இருந்தார்” என்றும் சுட்டிக் காட்டுகிறது.மேலும், “இதை கண்டிப்பாக நிறைவேற் றியே ஆக வேண்டும்.
ஆனால் இதையும் சங் பரிவாரையும் தொடர்புபடுத்திப் பார்க் கக்கூடாது” என்று மோகன் பகவத், அசீமானந்தாவிடம் கூறியுள்ளார். ‘கேரவன்’ ஏடு இன்னும் விரிவாகப் பல விஷயங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. அசீமானந்தாவிற்கு பக்க துணையாக உடந் தையாக இருந்தவர் ஆர்எஸ்எஸ்சின் சுனில் ஜோஷி. இவர் தான் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு சதிகளில் யார் யார் எங்கே கூடுவது, எங்கே குண்டு வைப்பது என்பது உட்பட அனைத்திற்கும் இணைப்புக் கயிறாக விளங்கியவர். இவர் டிசம்பர் 2007ல் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

குற்றமற்றவரா மோடி...?          

                   2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் நடைபெற்ற வகுப்புவாத படுகொலையின் போது, குஜராத் மாநில அரசின் முதலமைச்சராக இருந்த மோடிக்கும் இந்த மனிதப் படுகொலைகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று சட்ட ரீதியாக ”குற்றமற்றவர்” என்று சான்றிதழ் பெறுவதற்காக இன்றைக்கு ஆர்எஸ்எஸ்சும், பாரதீய ஜனதா கட்சியும் கடுமையாக முயன்று வருகின்றன. பிப்ரவரி 2012ல் சிறப்பு புலன் விசாரணைக் குழு சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கையை தங்களுக்கு சாதகமான ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
                  ஆனால், அந்த அறிக்கை இவர்களுக்குச் சாதகமாக அப்படி எதையும் கூறி விடவில்லை. இந்த சிறப்பு புலன் விசாரணை குழு ஜாப்ரி வழக்கில், ஜூன் 2006ல் குல்பார்க் தாக்குதலில் ஏராளமான தடயங்கள் இருப்பதாகவும், அகம தாபாத் கலவரத்தின் போதும் இந்த தடயங்கள் எல்லாம் உண்மையானவை, சரியானவை என்றும் அபிப்பிராயம் கொண்டிருந்தது. ஆனால் இந்தத் தடயத்தை மட்டும் வைத்துக் கொண்டு சட்டப்படி குற்றம் சாட்டுவதற்கு வழியில்லை என்று மட்டும் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இயலாமையினைத் தெரிவித்திருக்கிறது.
                 மேலும், உச்சநீதி மன்றத்திற்கு அமிக்கஸ் கியூரி (அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்புக்களுக்கு அப்பாற்பட்டு நீதி மன்றத்திற்கு உதவி செய்யும் நடுநிலையாளர்) அளித்த அறிக்கை நரேந்திர மோடிக்கு எதிராக உள்ளது. இந்திய குற்றப் பிரிவு 153ஏ, 153பி, மற்றும் 166 ஆகியவற்றின் அடிப்படையில் அவரை நீதிவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனஅந்த அறிக்கை கூறுகிறது. 2002ம் ஆண்டின்இறுதித் தீர்ப்பைப் பொறுத்தவரை 2002ம் ஆண்டு திட்டமிட்டு நடத்தப்பட்ட வகுப்புவாத மனிதப் படுகொலையைப் பொறுத்த வரையில் , உயர் நீதி மன்றங்களில் மறு பரிசீலனைக்கான மனுக்கள் பல இன்றைக்கும் நிலுவையில் உள்ளன. எனவே, ‘குற்றமற்றவர்’ என்ற சான்றிதழ் பெறுவதற்கான எந்த வாய்ப்பும் மோடிக்கு இல்லை.
மறந்து விட வேண்டுமாம்!
                  இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் 2002ஐப் பற்றி மறந்து விடும்படி மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் ஒரு வளமான எதிர்காலத்தை காண்பதற்காக 2002ம் ஆண்டை மறந்து விட வேண்டுமாம். ஆனால், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களில் இதே அளவுகோல் பொருந்தாதாம். மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசான நமது நாட்டில் ஆறாத சீழ் வடியும் புண் போல, 1984ம் ஆண்டு முதல் நமது மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது. நமது அண்மைக்கால நினைவில் இருக்கும் 2002ம் ஆண்டு மிகவும் மோசமா னது.
எப்போது நீதி வழங்கப்படுகிறதோ அப்போது தான் நமது குடியாட்சி சுத்தப் படுத்தப்பட்டு பலப்படுத்தப்படும். இந்த இரண்டு வழக்குகள் மட்டுமல்லாது வேறு பல வழக்குகளிலும் நீதி தொடர்ந்து தாமதப் படுத்தப்பட்டு வருகிறது. எனவே அது மறுக் கப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டில் நமது நாட்டிற்கு தேவைப்படுவது ஒரு மாற்று அரசியல் ஏற்பாடு. நீதி வழங்கப்படுவதற்கும், நமது குடியரசை பலப்படுத்துவதற்கும் அத்தகைய மாற்று அரசியல் ஏற்பாடு மிக மிக அவசியம்.
நன்றி : `ஹிந்துஸ்தான் டைம்ஸ், 10.02.2014
தமிழில் : ஆர். எஸ். செண்பகம்,திருநெல்வேலி     

கருத்துகள் இல்லை: