சனி, 22 பிப்ரவரி, 2014

தினமலர் ஏன் நாறுகிறது...?

           
           ''சோவியத் யூனியன்'' என்று பெரிய தலைப்பிட்டு நியாயமான விலையிலான உணவகம், மருந்தகம், திரையரங்கம் போன்றவற்றை உருவாக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளை தினமலர் (பிப்ரவரி 20) விமர்சித்துள்ளது. கருத்துப்படம் ஒன்றையும் போட்டு, ஒரு தொழிலாளி (அதுவும் சிகப்பு சட்டையோடு...!!) வயிறு முட்ட சாப்பிடுகிறாராம். மினி பஸ்சில் ஏறுகிறார்... குவார்ட்டர் ஊற்றுகிறார்... தியேட்டரில் சினிமா... அதுவும் பலான படமாம்.. பின்னர் தலை கிறுகிறுத்து, வாரச்சந்தையில் வாந்தி எடுக்கிறார்... மருந்தகத்தில் மருந்து வாங்குகிறார்... என்பதாக அந்த கருத்துப்படம் உள்ளது. அதாவது, தொழிலாளி வேலையே செய்யாமல் தினமும் இப்படி தான் உலாவும்படியான நிலைமை உருவாகிவிட்டது என்று தினமலர் ஆவேசப்படுகிறது.
                    தமிழ்நாட்டில் வலை போட்டுத் தேடினாலும் அப்படி ஒரு தொழிலாளி இருக்க முடியாது என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் சொல்வது போன்ற அன்றாட நடவடிக்கைகள் யாருக்காவது இருக்க முடியுமா என்றால் நாட்டிலுள்ள பெருநிறுவனங்களின் முதலாளிகள் பெரும்பாலானோரின் அன்றாட வாழ்க்கையே இப்படித்தான் இருக்கும். இருக்கிறது. அதை யாராலும் மறுக்கமுடியாது. தன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத - அரசாங்கத்திற்கு வரி கட்டாமல் ஏய்க்கின்ற - வங்கியில் வாங்கிய கோடிக்கணக்கான கடனை திருப்பிக் கட்டாமல் வராக்கடனில் சேர்த்த இந்திய பெருமுதலாளி விஜய் மல்லையா அண்மையில் மிக தைரியமாக 14 கோடி ரூபாய்க்கு ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரரை ஏலத்துக்கு எடுக்க முடிகிறது. இதில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு வேறு. இதற்கு தினமலர் ஏன் சிறப்பு தலைப்பிடவில்லை..?? இதை ஏன் தினமலர் விமர்சனம் செய்யவில்லை....?
               திரையரங்கம் என்றால் அதில் திரையிடப்படுவது ''பலானப்படமாகத்'' தான் இருக்கவேண்டுமா...? ஏன் பலான படம் தான் தினமலர் நினைவுக்கு வருகிறது...? சாதாரணக் கட்டணம் என்றால் அப்படிப்பட்ட படம்தான் போட வேண்டும் என்று தினமலர் சொல்ல வருகிறதா அல்லது சகவாச தோஷமா...? ஏனென்றால் பாஜகவினருக்கு மிகவும் பிடித்தமான படங்கள் ''பலானப்படங்கள்'' தான் என்பதை நாடே அறியும். கர்நாடகம்  மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திலேயே பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே  அமர்ந்து பார்த்த பலான படத்தை நாடே பார்த்ததே.       
             அதுமட்டுமல்லாமல் சோவியத் யூனியனில் அனைத்தும் மலிவு விலையில் வழங்கப்பட்டதால், உற்பத்திப்பணி அங்கு நடைபெறவில்லை என்பது போன்று தினமலர் அரற்றுகிறது. உற்பத்தியில் பெரும் சாதனையைப் படைத்தது சோவியத் யூனியன் என்பதை முதலாளித்துவ ஆதரவாளர்கள் கூட ஒப்புக் கொள்வார்கள். அதன் சாதனைகள் என்ன என்பதைப் பட்டியலிட்டால், நீண்டுகொண்டே போகும். ஆனால், சோவியத் யூனியனின் பொருளாதார நிலைமை கெட்டுப் போய்விட்டதாகச் சொல்லப்படும் அதன் இறுதிக்காலத்தில் இருந்த பலத்தைக் கூட இன்னும் முதலாளித்துவ ரஷ்யாவால் அடையமுடியவில்லை. சோவியத் யூனியன் காணாத வறுமை, பட்டினி, சுகாதாரமின்மை, கல்வியின்மை போன்றவை தற்போதைய ரஷ்யாவில் பெருகிக் கிடக்கின்றன.
          இது ஒருபுறம், இருக்கட்டும். சென்னையில் உள்ள பல பன்னாட்டு கணினி நிறுவனங்களில் காலையில் விரைவில் வருபவர்களுக்கு மலிவு விலையில் சிற்றுண்டி, இரவு வரை இருந்து வேலை செய்பவர்களுக்கு மலிவு விலை உணவு என்றெல்லாம் தந்து, 13, 14 மணிநேரம் வேலை வாங்கிக் கொண்டிருக்கும் நிலைமை உள்ளதே... இதைக் கண்டித்து தினமலர் ஏன் தலைப்புச் செய்தி எழுதவில்லை...?? சாதாரண மக்களுக்கு பலன் தரப்போகும் வாரச்சந்தையைப் பார்த்து வாந்தி எடுக்கும் கருத்துப்படம் போடும் தினமலர், கல்வி மற்றும் மருத்துவத்தில் மிகப்பெரிய வியாபாரச் சந்தையாக தமிழகம் உருவெடுத்துள்ளதை ஏன் கண்டுகொள்ள மாட்டேனென்கிறது...?
             இது எத்தகைய உற்பத்தியை உருவாக்கியுள்ளது என்று பட்டியல் போட்டிருக்கலாமே..? ராகுல்காந்தியா அல்லது மோடியா என்ற விளம்பரப்படம் போணியாகாமல் போய்விடுமோ என்ற கவலை நாடு முழுவதுமுள்ள பெரும் பணக்காரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால் தினமலரிடமிருந்தும் முனகல் ஒலி கேட்கிறது. சிறப்புநிருபர் செய்தி, வாசகர் கடிதம் என்று அதிமுக-பாஜக கூட்டணி அமைய வேண்டுமென்று தினமலர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றதும் சேர்ந்து கொண்டதால் முனகல் ஒலி கூடுதலாகக் கேட்கிறது. அதனால் தான் தினமலர் நாறுகிறதோ....?
நன்றி :

கருத்துகள் இல்லை: