வியாழன், 13 பிப்ரவரி, 2014

இன்றைய தலைமுறைக் கலைஞர்களின் ஆசான் பாலுமகேந்திரா...!

                           எம்ஜிஆர் - சிவாஜி காலத்திற்கு பிறகு திரைப்படத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி, தமிழ்த் திரைப்படத்தின் திசைவழியையே மாற்றியவர் மறைந்த திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா என்பதை யாராலும் மறுக்கமுடியாது. சமூக அக்கறை எதுவுமில்லாமல், இலாபத்தை மட்டுமே குறிவைத்து காசுக்காக ஆபாசத்தையும், வன்முறையையும் கலந்து திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் பாலுமகேந்திரா உயர்ந்து நிற்கிறார். சமூக அக்கறை கலந்த திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல், தனது படத்தின் மூலம் மக்களை சிந்திக்கவும் செய்தார். இயக்குனாராக விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பு, இயற்கை எழில்களை தன் கேமிராக்குள் சிறைபிடிக்கும் ஒரு திறமைசாலியான காமிரா கலைஞனாக மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னுடைய காமிராவை திருப்பி மற்றக் கலைஞர்களுக்கும் ஒரு ஆசானாக திகழ்ந்தார். காமிராவைத் தூக்கிக்கொண்டு மக்கள் வாழும் பகுதிகளுக்கு செல்லவேண்டும் என்று இன்றைய இளையத்தலைமுறைக் கலைஞர்களுக்கு தமிழ் திரைப்படம் செல்லவேண்டிய திசைவழியை காட்டினார். அதற்கு எடுத்துக்காட்டாக ''வீடு'' மற்றும் ''தலைமுறைகள்'' போன்றவைகள் அவர் தீட்டிய படங்கள் அல்ல... பாடங்கள்...!
              காமிரா கலைஞனாக - முற்போக்கு இயக்குனராக - திறமையான நடிகராக பல்வேறு பரிமாணங்களில் ஒளி வீசிய பாலுமகேந்திரா இன்று மறைந்துவிட்டார். இன்று காமிரா தனக்கு தோள் கொடுத்த தோழனை இழந்துவிட்டது. என்றாலும் அவர் நடத்திய திரைப்படப் பாடங்கள், இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் திரையுலகில் நுழையும் இளையத்தலைமுறையினருக்கு நல்ல வழி காட்டும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. எதிர்காலத்தில் திரைப்படக் கலைஞர்களுக்கு நல்லாசானாய் திகழ்வார் இயக்குனர் பாலுமகேந்திரா என்பது நிச்சயம்.

கருத்துகள் இல்லை: