புதன், 12 பிப்ரவரி, 2014

முதலைக்கண்ணீர் வடிக்கும் மன்மோகன் சிங்...!

                           கடந்த 5-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆறு நாட்களாக மக்களவையும், மாநிலங்களவையும் நடத்த முடியாமல் முடக்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 10 ஆண்டுகளாகவே நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்றால் இப்படித் தான் நடக்கிறது. நாடாளுமன்றம் ஒரு நாள் முழுதும் முழுமையாக தன்னுடைய அலுவல்களை கவனித்ததாக சமீபக் காலமாக வரலாறு இல்லை. எதிர்கட்சியான பாரதீய ஜனதாக்கட்சிவும், ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி மறைமுகமாகவும், இந்த இரு கட்சிகளும் இரகசிய உடன்பாடு செய்துகொண்டு பாராளுமன்றத்தை முடக்கும் வெட்கக்கேடான வேலைகளை ''வெற்றிகரமாக'' செய்து வருவதை நாடு நன்கறியும்.
                 ஆனால் இந்த முறை நாடு சற்று வித்தியாசமாக நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், கடைசி கூட்டத்தொடரான இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும்  நேரடியாக களத்தில் இறங்கி இரு அவைகளையும் நடக்கவிடாமல் முடக்குகிறார்கள் என்பதும் வெட்கக்கேடானது. ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிப்பதை எதிர்த்து - ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தை விரும்பக்கூடிய காங்கிரஸ் கட்சி எம்.பி-க்களே அரசின் செயலை எதிர்த்து அரசிற்கு எதிராக பாராளுமன்றத்திற்குள்ளேயே போராட்டம் நடத்தி கடந்த ஆறு நாட்களாக பாராளுமன்ற அலுவல்களை நடத்தவிடாமல் முடக்கிவருகிறார்கள். 
           அதேப்போல் இன்றும் பாராளுமன்றத்தில் இடைக்கால இரயில்வே பட்ஜெட்டை இரயில்வே அமைச்சர் தாக்கல் செய்து வாசிக்கும் போது அவரை வாசிக்க விடாமல் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் இடையூறு செய்திருக்கிறார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீதும், பாராளுமன்ற நடவடிக்கைகளின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கும் வண்ணம் பாரதீய ஜனதாக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கும் செயலில் ஈடுபடுவது என்பது இந்த நாட்டின் சாபக்கேடாகும்.
              இப்படியெல்லாம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாராளுமன்ற முடக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இது வரை அதைத் தடுப்பதற்கு எந்தவித முயற்சியையும் எடுக்காமல் வாய் மூடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங், இன்று தான் தனது வாயைத் திறந்திருக்கிறார். 
             நாடாளுமன்றத்தில் நடக்கும் காட்சிகளை பார்க்கும்போது தமது இதயத்தில் இருந்து ரத்தம் வழிந்தோடுவதாக பிரதமர் கூறியிருப்பதை பார்த்தால், இத்தனை ஆண்டுகளாக பிரதமர் ''கும்பகர்ணனைப்'' போல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாரோ என்ற சந்தேகம் வருகிறது. இன்று பிரதமரின் இதயத்திலிருந்து இரத்தம் வழிதொடுவது, இரயில்வே பட்ஜெட்டை இடையூறு செய்கிறார்கள் என்பதற்காக அல்ல. இன்னும் அமெரிக்காவின் ''ஆணைப்படி'' நிறைவேற்றப்படவேண்டிய நிலுவையில் உள்ள மசோதாக்களை பாராளுமன்ற முடக்கத்தினால் முடியாமல் போய்விடுமோ...? - தன் எஜமானின் நிராசையாக போய்விடுமோ...? என்ற ஏமாற்றத்தில் வந்த ''வேதனை குமுறல்'' தான் அது. மன்மோகன் சிங் விடுவது என்பது ''முதலைக் கண்ணீர்'' தான் என்பது நமக்கு தெரியாதா என்ன...?

கருத்துகள் இல்லை: