புதன், 5 பிப்ரவரி, 2014

நடிகர் விஜயகாந்த் ஒரு தேர்ந்த அரசியல் வியாபாரி...!

                            நடிகர் விஜயகாந்த் இரண்டு நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகில் ''ஊழல் ஒழிப்பு மாநாடு'' என்கிற பெயரில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தன்  கட்சியோடு தேர்தல் உடன்பாடு செய்யத் துடிக்கும் கட்சிகளுடன் ''பேரம்'' பேசும் வியாபார தந்திரத்தை - வியாபார வித்தையை தன்னை நம்பி மாநாட்டுக்கு வந்த ஆயிரக்கணக்கான ''அப்பாவி தொண்டர்களை'' கூட்டி செய்து காட்டியிருக்கிறார். அங்கு கூடியிருக்கும் தொண்டர்களை வைத்துக்கொண்டே மற்றக் கட்சிகளிடம் பேரம் பேசுவதைப் பார்க்கும்போது நடிகர் விஜயகாந்த் ஒரு கைதேர்ந்த அரசியல் வியாபாரியாக தான் தெரிகிறார். 
               ''கூட்டணி வேண்டுமா... வேண்டாமா...?'' என்று கூட்டத்தைப்பார்த்து கேட்கிறார். கூட்டம் சத்தம் போடுகிறது. இவராகவே ''வேண்டாமா...?'' என்று கூறிவிட்டு, ''இத பாருங்க பத்திரிக்கையாளர்களே... என் தொண்டர்கள் கூட்டணியே வேண்டான்னு சொல்றாங்க'' என்று அங்கேயே தன்னுடைய பேரத்தை உயர்த்துகிறார். கூட்டணியைப் பற்றி அந்த மாநாட்டில் அறிவிப்பேன் என்று முன்பு அறிவித்துவிட்டு, மாநாட்டிற்குள் ஒரே சமயத்தில் மூன்று கட்சிகளோடு, அதாவது காங்கிரஸ் கட்சியோடும், பி.ஜே.பி - யோடும், திமுக-வோடும் பேரத்தில் ஈடுபடுகிறார். யார் இவரது கையில் இவர் எதிர்ப்பார்ப்பது போல் பல கோடிகளையும் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளையும் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டு என்பது தான் தற்போதைக்கு  இவரது வியாபார தந்திரம். ஆனால் மாநாட்டிற்குள் விஜயகாந்த் எதிர்ப்பார்த்தது போல் கோடிகளும்  தொகுதிகளுமான பேரம் படியாததால் தன் கூட்டத்தைக்காட்டி மிகத் திறமையாக மேடையிலேயே பேரம் பேசியிருக்கிறார். தன்னுடைய தொண்டர்களையே அவர்களுக்கு தெரியாமலேயே ஏலம் விட்டு விற்றிருக்கிறார் என்பது தான் அதற்கு பொருள். விஜயகாந்த் உண்மையிலேயே மிகவும் திறமைசாலி தான். 
                கூட்டணி வேண்டாமென்று தொண்டர்கள் சொல்கிறார்கள் என்று கூட்டணிக்காக காத்திருக்கும் கட்சிகளுக்கு ஒரு மிரட்டலையும் விடுத்து, அதே மேடையில் ''இருந்தாலும் தலைமை எடுக்கிற முடிவுக்கும் நீங்க கட்டுப்படணும்''  என்ற தகவலை அங்கு கூடியிருந்த தன் தொண்டர்களுக்கும் சொல்லியிருப்பதிலிருந்து தனக்கு எந்தக் கட்சியோடு பேரம் படிகிறதோ அவர்களோடு கூட்டணி சேருவேன் என்ற செய்தியையும் விஜயகாந்த் தன் கூட்டத்தினருக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறார். மெடிக்கல் காலேஜ் மற்றும் இன்ஜினீரிங் காலேஜ் நடத்தி சொத்து சேர்ப்பதிலும், அதைக் காப்பாற்றுவதற்காக கட்சி நடத்துவதிலும் ஒரு கை தேர்ந்த ''கல்வி வியாபாரியாக'' இதுவரை தெரிந்த விஜயகாந்த் இப்போது தன்னுடைய அரசியல் கட்சியையும், தொண்டர்களையும் வைத்துக் கொண்டு சொத்து சேர்ப்பதிலும்  ஒரு கைதேர்ந்த ''அரசியல் வியாபாரியாக'' காட்சித் தருகிறார்.
ஒரு உபரி தகவல் :  
         மாநாடு நடைபெற்ற அந்த உளுந்தூர்பேட்டையை ஒட்டிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக்கில் மட்டும் மாநாடு நடைபெற்ற அந்த நாளில் மட்டும் 4 இலட்சம் மது பாட்டில்கள் விற்பனையாகியிருக்கிறது என்ற தகவல் கூட வெளியாகியிருக்கிறது.  இந்த மாநாட்டின் மூலம் விஜயகாந்த் எதிர்க்கும் அரசுக்கு அதிக வருமானத்தை உருவாக்கியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: