புதன், 21 செப்டம்பர், 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் - மக்களின் அச்சமும் போராட்டமும் நியாயமானதே..!

             அண்மையில் நிகழ்ந்த சுனாமியினால் ஏற்பட்ட ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குள்ளான  பிறகு, உலக அளவில் அணு மின் நிலையங்கள் குறித்து மக்களுக்கு  பயமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளன என்பது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மையாகும்.  இந்தப் பின்னணியில் தான்  இந்தியாவின் தென்கோடியில் உள்ள  கூடங்குளத்தில் மிக விரைவில் மின் உற்பத்தியை தொடங்கவிருக்கும் அணுமின் நிலையத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும், அங்குள்ள பொது மக்களும் கடந்த பதினொரு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
                ஜப்பானில் நேரிட்ட ஆழிப்பேரலைத் தாக்குதல் மற்றும் நிலஅதிர்வின் காரணமாக புகுஷிமா அணுஉலை விபத்துக்குள்ளாகி, கதிர்வீச்சு கசியத் தொடங்கிய நிகழ்வு மட்டுமே அந்த மக்களை பாதிக்கவில்லை. பிரான்ஸ், ஜெர்மன் போன்ற மேலை நாடுகளெல்லாம்  அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மின் உற்பத்திச் செய்யும் அணுஉலைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவித்திருப்பது என்பதும் கூட , கூடங்குளம் பகுதி மக்களுக்கு அச்சத்தை மேலும் அதிக படுத்தியுள்ளது என்பதும் உண்மை. அதனால் தான் இத்தனை காலமாக இல்லாத அளவுக்குப் போராட்டம் தீவிரமடைந்தது .
                 அணுமின் நிலையம் அமையுமானால், அணுஉலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் என்பது கதிரியக்கம் உள்ள கனநீர் ஆகும். எதிர் காலத்தில் இந்த கன நீரென்பது கடலில்தான் கலக்க விடப்படும். அதனால் அப்பகுதியில் மீன்வளம் குறைந்துவிடும். மீன்வளத்தை நம்பிவாழும் கடலோர மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதுபோன்ற அச்சமும்  இப்பகுதி மக்களிடையே எழுந்து அது எதிர்ப்பாக மாறியுள்ளது. மேலும், எதிர்காலத்தில்  அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்படுமானால் அதன் பின்விளைவுகள் பற்றிய அச்சமும் அதனோடு  சேர்ந்துகொண்டுவிட்டது என்பதும் தான் உண்மை.
                கூடங்குளம் அணுமின் நிலையம் கூடாது. அது மூடப்படவேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராடுவதில் நியாயம் இருக்கிறது. அதே சமயத்தில்  அந்த மக்களின் நியாயமான அச்சத்தை போக்குவதிலும் மத்திய - மாநில அரசுகளுக்கு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது.            
              அணு ஆற்றல் ஆணைய முன்னாள் தலைவர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் அவர்கள் இந்த போராட்டம் குறித்து பேசுகையில்,
             கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான பிரசாரத்தை முறியடிக்க, தீவிர மக்கள் தொடர்பு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஜப்பானில் ஃபுகுஷிமாவில் நடந்த விபத்தால், கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் பற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் மனதில் தவறானக் கருத்து குடிகொண்டுள்ளது.  அணு ஆற்றல் துறை, அணுமின் கழகம், அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியம் ஆகியவை மேற்கொண்ட விரிவான சோதனையில், ஃபுகுஷிமா விபத்து போன்ற சூழல் கூடங்குளத்தில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  
                 அணு மின்னாற்றலைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர்கள்தான், அணு உலைகளால் மனித உயிர்களுக்கு ஆபத்து என்று கூறி வருகிறார்கள். கூடங்குளத்தில் கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்துவதாகவும், அதனால் மீனவர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் வதந்திகள் உலா வருகின்றன.  பல அணு உலைகளை நிறுவ நேர்ந்தாலும், கூடுதல் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தாராப்பூர் மற்றும் கல்பாக்கத்தில் எவ்வித இடைஞ்சலும் இன்றி மீன்பிடி பணிகள் நடந்து வருகின்றன.  புதிய அணுமின் நிலையங்களைக் கட்டமைப்பதில் சீனா வேகமாகச் செயலாற்றுகிறது. மகாராஷ்டிர மாநிலம், ஜெய்தாபூரில் அணு உலை அமைக்க வேண்டும்.  கூடங்குளத்தில் ஒரு அணு உலை செயல்படும் நிலைக்கு வந்துள்ளது. மற்றொன்று அடுத்தாண்டு முதல் இயக்கப்படும். கூடங்குளத்தில் அதிகளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதை முடக்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அணு மின்னாற்றல் இந்தியாவுக்கு தவிர்க்க முடியாதது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் மின் தட்டுப்பாடு இருக்கிறது. இதைப்போக்க அணு மின்னாற்றல்தான் சிறந்த வழி என்றார் அவர்.
                 அவர் கூறிய தகவல்களையும் அச்சத்தில் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். முதலில் மக்களின் அச்சத்தை போக்கவேண்டும். அது தான் அரசின் முதல் கடமை ஆகும்.
 
 

1 கருத்து:

பா.சதிஷ் சொன்னது…

அன்புள்ள திரு ராம்ஜி
நீங்கள் இந்த கட்டுரையில் அணுமின நிலையம் தேவை என்ற வகையில் கட்டுரையை எழுதியுள்ளீர்கள். அதாவது மக்களுக்கு அரசாங்கம் அணுமின நிலைய பாதுகாப்பை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பதே உங்கள் கருத்து. எனவே அணுமின நிலையம் கண்டிப்பாக பாதுகாப்பானது என்று நீங்கள் நம்புகிருரீர்கள் . அணுமின நிலையத்தால் நமது மின் தேவை தீர்ந்துவிடும் என்றும் கூறுகிறீர்கள் . இரண்டையும் நிச்சயமாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை .
இந்திய முழுவதுமே அணுமின நிலையத்தின் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தியானது தோராயிரமாக 3 சதம் மட்டுமே . ஆனால் மற்ற மாற்று மின்னுற்பத்தி மூலம் கிடைக்கும் மின் உற்பத்தி அதை விட பலமடங்கு அதிகமாக கிடைகிறது. இத்தனைக்கும் நாம் அதார்க்கு செலவிடும் தொகையும் மிக குறைவே . ஆனால் அணு மின் நிலையத்திற்கு ஆகும் செலவானது மிக அதிகம் . அதே போல அணுமின நிலையத்தில் விபத்து ஏற்பட்டு பாதிக்கபட்டால் குறைந்தது பத்தாயிரம் ஆண்டுகள் வரை அதன் பாதிப்பு நம் சந்ததிகளை பாதிக்கும் . மேலும் கூடங்குளம் அணுமின நிலையம் அதிக மக்கள் நெருக்கடி உள்ள பகுதி . விபத்து என்பதே நம் பாதுகாப்பையும் எதிர்பார்ப்பையும் மீறி நடுக்கும் ஒன்றுதான் . இங்கே எதுவும் நூறு சதம் பாதுகாப்பானது அல்ல . எனவே ஒரு சதம் கூட பெரும் உயிரிழப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தும் . விபத்து நேர்ந்துவிட்டால் ஏற்படும் விளைவு பயங்கரமானது . இங்கே அரசு மீது நம்பிக்கை கொள்வது கண்டிப்பாக தவறானதே . மேலும் கூடங்குளத்தில் ஏற்படுத்தப்படும் அணுமின நிலையம் ரஷ்யாவில் பயன்படுத்தி அது பாதுகாப்பானது அல்ல என்று அங்கே அதற்க்கு எதிர்ப்புகள் வந்து அந்த தொழிநுட்பத்தை நிறுத்தியும் இருக்கிறார்கள் . நாம் இங்கே அந்த பழைய பாதுகாப்பற்ற தொழில் நுட்பதையே உபயோகிக்கிறோம். இப்படி இருந்தும் அரசு இதை பயன்படுத்துவது நிச்சயமாக அணு ஆயுதம் தயாரிக்க இது ஒன்றே வழி என்பதால் தான் . ஆயுதம் தயாரிக்க ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பணயம் வைப்பது எவ்விதம் சரி ?

சமூஹம் சார்ந்த கட்டுரையில் நீங்கள் ஏன் இவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் மேலோட்டமாக அதுவும் அதற்க்கு சிறிது ஆதரவாக எழுதுகிறீர்கள் . உங்கள் வீடுவரை அணுமின நிலையத்தின் கதிர் வீச்சு வராது என்ற காரணத்தாலா?