சனி, 24 செப்டம்பர், 2011

சிதம்பரத்தின் யோக்கியதை இப்போதாவது புரியட்டும்..!

                சமீபத்தில் தான்  உயர் நீதிமன்றத்தில் குண்டுவெடித்து ஓய்ந்து தலைநகரம் அமைதியாகி  இருக்கிறது. அதற்குள் இன்னொரு குண்டு வெடித்திருக்கிறது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு எழுதிய கடிதம் வெளியாகியிருக்கிறது. யோக்கியன் சிதம்பரத்தின் வேஷம் கலைந்திருக்கிறது. ''சிதம்பர ரகசியம்'' இப்போது தான் மக்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.
                 சென்ற ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசின் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தால்  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலைத் தடுத்திருக்க முடியும் என்று கடந்த மார்ச் 2011-ல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியிருப்பது வெளிவந்திருக்கிறது. நிதி அமைச்சக அதிகாரி ஒருவரின் கடிதத்தில் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தின் விலை மற்றும் ஒதுக்கீடு தொடர்பாக நிதி அமைச்சகத்தில் துணை இயக்குநராக உள்ள டாக்டர் பி.ஜி.எஸ்.ராவ் என்பவர் பிரதமர் அலுவலக இணை இயக்குநர் வினி மகாஜனுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பிரணாப் முகர்ஜி இந்த 11 பக்க கடிதத்தை ஆய்வுசெய்து ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கடிதம் குறித்து சமூக ஆர்வலர் விவேக் கார்க் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம்  மூலம் கேள்வி கேட்டு தகவல் பெற்றிருக்கிறார். இந்த கடிதத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் , 2ஜி உரிமங்களை ரத்து செய்ய தொலைத்தொடர்புத் துறையை நிர்பந்தம் செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அ.  ராசாவின் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என அந்த கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அலைக்கற்றை உரிமங்களுக்காக 2001ல் விதிக்கப்பட்ட நுழைவுக் கட்டணமே 2008 டிசம்பர் 31 வரை அமலில் இருந்துள்ளது என அந்த கடிதம் குறிப்பிடுகிறது. இந்த கடிதம் குறித்து தகவல் பெற்ற விவேக் கார்க் கூறுகையில் நிதி அமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடக்க சாத்தியமில்லை. ஆர்டிஐ மூலம் பிரதமர் அலுவலகத்திடம் இருந்து பெற்ற ஆவணம் இதை வெளிப்படுத்தியுள்ளது. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது என கார்க் தெரிவித்தார்.
                இன்னொரு பக்கம், 2ஜி ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். உடனே மத்திய அரசு பதறுகிறது. லட்சுமணக் கோட்டை தாண்டக்கூடாது என உச்சநீதிமன்றத்தையே மிரட்டும் வகையில் மத்திய அரசு வாதிடுகிறது. ஏன் இந்த பதற்றம்..? ஏன் இந்த மிரட்டல்..? மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயம் எதற்கு?. ஊழலில் பங்கு இல்லை என்றால் வழக்கை சந்திக்கலாமே!.
                  யார் லட்சுமணக்கோட்டை தாண்டியது..? மக்களிடம் வாக்குகளை வாங்கி அமைச்சர்களானவர்கள் தானே  மக்கள் பணத்தை பாதுகாக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் இணைந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டது எந்தக் கோட்டிற்கு உட்பட்டது ?. ஊழல் மலிந்தும், சிபிஐ அதனை ஒழுங்காக விசாரிக்காமல் விடுவதும், பரவலான தீமை, சீர்கேடுகளுக்கு காரணமாக இருக்கிறது என மீண்டும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
       இவ்வளவு தகவல்கள் கிடைத்தப்பின்னும்,  2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்காமல்  அவரை பாதுகாத்து வருவது மட்டுமல்லாமல், சிதம்பரத்தின் நேர்மை மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாக  பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது என்பது மக்களுக்கு பலத்த சந்தேகத்தை வரவழைக்கிறது.
               எனவே 2ஜி ஊழலில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரித்து, உண்மையை கண்டறிவதன் மூலமே 2ஜி வழக்கின் ஆழத்தை கண்டறிய முடியும். அதன் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். உள்துறை அமைச்சரானாலும் சட்டத்திற்கு உட்பட்டவரே. ஆக சிதம்பரம் தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
             ஊழல் புகாரில் சிக்கி குற்றம் சாட்டப்பட்டுள்ள ப. சிதம்பரம் நேர்மையான முறையில் பதவி விலகி, மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உட்படவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் எடுக்கவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
              நாட்டின் முதலாவது நிதியமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம் செட்டியாரும், பின்னர் நிதியமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியும், தங்கள் மீது ஊழல் புகார்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டவுடன் தாமதிக்காமல், தங்கள் பதவிகளைவிட்டு விலகி, விசாரணையை எதிர்கொண்டனர் என்பது இந்த நாட்டின் கடந்த கால வரலாறு. அந்த இரு தமிழர்களும் காட்டிய நேர்மையான பாதையை ப.சிதம்பரம் பின்பற்ற வேண்டும் என்பது தான் நம்முடைய இன்றைய எதிர்ப்பார்ப்பு. நடக்குமா...?

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

chettiayr ayya , sapitathu pothum, veliye vanga, Nadu urupudatum