ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

திட்டக்குழு போடும் வறுமைக்கோடு - யாரை ஏமாற்றும் வேலை..?

                 இன்றைக்கு நாட்டில் எங்கும் எதிலும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பொருளாதாரக் கொள்கையை  ஆட்சியாளர்கள் மூர்க்கத்தனமாக நடைமுறைப்படுத்தி வரும் சூழ்நிலையில் இந்திய மக்கள் தொகையில் சுமார் 47 சதமானத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வசிப்பவர்கள் என்கிற அவலம்.
           உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாயன்று (செப்.20) ஒரு விசாரணைக்காக தனது வாக்குமூலம் ஒன்றைத் தாக்கல் செய்த திட்டக்குழு,
ஒரு நாளைக்கு கிராமப்புறத்தில் ரூ.25-க்கும், நகர்ப்புறத்தில் ரூ.32-க்கும்  மிகாமல் வருமானம்  இருப்பின் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு க் கீழ் உள்ளவர்கள்  சொல்லி இருக்கிறது. ஒருவர் தனது உணவுக்காகவும் கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் செலவிட கிராமப்புறமாக இருந்தால் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.25 வரை ஈட்டினால் போதும் என்று கூறியிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், 25 ரூபாய்க்கு மேல் ஒரே ஒரு ரூபாய் கூடுதலாகக் கிடைக்கக்கூடிய எவரும் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்கிறவர்களாகவே கருதப்படுவார்கள் என்பதுதான். நகர்ப்புறத்தில் ஒரு பிச்சைக்காரர் கூட 32 ரூபாய்க்கு மேல் ஒரே ஒரு ரூபாய் கூடுதலாக கிடைத்துவிட்டால் அவர் வறுமைக்கோட்டுக்கு மேலே வந்துவிடுவார். 
          வறியவர்களை நேரடியாக ஒழித்துக்கட்டவோ, நாட்டை விட்டு வெளியேற்றவோ வழியில்லை என்பதால், வறியவர்கள் என்பதற்கான அடையாளத்தை அழித்து விடுவது என்ற வழிமுறையில் திட்டக்குழுவின் மூலமாக இறங்கியிருக்கிறது மத்திய அரசு என்பது தான் உண்மை.
                குடிமக்களின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்வோருக்கான அரசின் புதிய திட்டத்தால் பயனடையக் கூடியவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தையே கேட்டிருந்தது. அதை நேரடியாகத் தெரிவிக்காத மாண்டேக்சிங் அலுவாலியா தலைமையிலான திட்டக்குழு, இப்படி சுற்றி வளைத்துக் கூறியிருக்கிறது.
                 இதன் உண்மையான நோக்கம், ஏழைகளுக்கான அரசுத்திட்டங்களின் பயனாளிகள் எண்ணிக்கையை கணிசமாகக் குறைப்பதுதான். குடிமக்களின் வாழ்வாதாரத் தேவைகள் உணவுப் பொட்டலத்தோடும், பாடப்புத்தகத்தோடும், விலை மலிவான மாத்திரைகளோடும் நின்று விடுவதில்லை. ஆகப் பெரும்பாலான அடித்தட்டு மக்கள் தங்களது வாழ்விடங்களிலிருந்து வெகுதொலைவுக்குச் சென்றுவருவதன் மூலமாகவே இந்த குறைந்தபட்ச வருவாயை ஈட்ட முடிகிறது. சாதாரண நகரப்பேருந்துகளிலும், புறநகர் ரயில்களிலும் கூட்டத்தில் தொற்றிக் கொண்டு வேலைக்குச் சென்று வருகிற முறைசாராத் தொழிலாளர் உள்ளிட்டோரைப் பணக்காரர்கள் என்று திட்டக்குழு கருதுகிறது போலும்!                இது போல் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோரின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதன் மூலம், ஏழை மக்களுக்கான நலத்திட்ட நிதிகளை குறைத்துக் கொள்வதற்கும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கான பொது விநியோக முறையை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்கும், இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் காரணமாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்த மக்கள் மேலேவந்துவிட்டனர் என்று எடுத்துக் காட்டுவதற்கும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் குறைந்துவிட்டனர் என்கிற பொய்யை சொல்வதற்கும் இந்த வாக்குமூலத்தை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.
              இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இடதுசாரி கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் பொது மக்கள் போராடாமல் அரசின் இந்த முயற்சியை மாற்றமுடியாது.

கருத்துகள் இல்லை: