சனி, 3 செப்டம்பர், 2011

பிரதமர் - மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியீடு..! மக்களின் காதுகளில் பூ....!

          இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு தனது ஆட்சியில்  அடுத்தடுத்து அணிவகுத்த மகா ஊழல்கள்.. அதேப்போல் ஊழல் செய்து மாட்டிக்கொள்ளும் அமைச்சர்கள் மற்றும் உயர் பதவி வகிப்போர் தண்டனைப் பெறாமல் தப்பித்துக் கொள்ள, மலட்டுத் தன்மை வாய்ந்த வலுவிழந்த லோக்பால் மசோதா.. இவைகளினால் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட பிரதமர் மண்ணு மோகன்  சிங்,   நம்பிக்கையை பெறுவதற்கு என்னென்னமோ மாயஜால வித்தையெல்லாம் காட்டுறாரு என்று   தான் சொல்லவேண்டும்.                   
       இன்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் சொத்து விபரங்களை பிரதமரின் அலுவலகம் தன்னுடைய இணையத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதை பார்த்ததும் குபீரென்று சிரிப்புதான் வந்தது. தலை கிர்ருன்னு சுத்துது. அந்த அளவிற்கு மன்மோகன் சிங் மக்களின் காதுகளில்  ஒரு பெரிய ''பூச்சரத்தையே'' சுற்றியிருக்கிறார்.   அந்த அளவிற்கு பிரதமர் வெளியிட்டுள்ள பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பற்றிய  சொத்து விபரங்கள் நம்பக்கூடியதாக இல்லை என்பது தான்  உண்மை.
                      நம்ப பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ரூ. 4.8 கோடி அளவிற்கு தான் சொத்து இருக்காங்க பாவம். மத்திய அமைச்சர்களிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் தெரியுமாங்க.. மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையமைச்சர் கமல்நாத்து தானுங்கலாம். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 276.64 கோடி தானாம்.
                ரொம்ப பரம ஏழை யாருன்னா.. பாதுகாப்பு அமைச்சர் ஏ. கே. அந்தோணி தானுங்கலாம்.  இவரு பேருல ரூ. 1.8 லட்சமும், இவரு மனைவி பேருல ரூ. 30 லட்சம் அளவுக்குத் தானுங்க சொத்து இருக்கு. பாவங்க இவரு கோடியையே பாக்காத அமைச்சரு.
           நம்ப ''பங்கு சந்தை'' சிதம்பரம் சொத்துக்களை படிச்சிப் பாத்தீங்கனா நாம்பல்லாம் எவ்வளவுப் பெரிய கேனையன்களா இருக்கோம்னு புரியும். இவரு பேருல ரூ. 11 கோடியும், இவரு மனைவி பேருல ரூ. 12 .8 கோடியும் மட்டுமே தங்களுடைய சொத்துக்களாக காட்டியிருக்கார். இதுல என்ன வேடிக்கை இன்னா.. பங்கு சந்தையையே வளைச்சிப்போட்டிருக்கும் ப.சிதம்பரம் ஒரு சைக்கிளையும் தன்னுடைய சொத்தாக காட்டியிருப்பது தான் மிகப் பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. கேக்கறவன் கேனையனா இருந்தா.... எருமை மாடு ஏரோப்பிளேன் விடுதுன்னு சொல்லுவானுங்க போலிருக்கே.
                           கைதுக்கு பயந்துகிட்டு குடும்பத்தோடு ஊரையே காலிபண்ணிட்டு போயிட்டாரே.... நம்ப ''அஞ்சாநெஞ்சன்'' மு.க.அழகிரிக்கு ரூ. 30 கோடி அளவுக்குத் தான் சொத்து இருக்காம். நாலே நாலு காரு தானுங்க வெச்சிருக்காரு. பாவம்.. தங்கம் - வெள்ளி    எல்லாம் ரொம்ப குறைவா தானுங்க வெச்சிருக்காரு. நிலத்தை எல்லாம் இங்க பட்டியல் போட நேரமில்லைங்க..அந்த அளவிற்கு ரொம்ப ரொம்ப குறைவா தானுங்க வெச்சி இருக்காரு.
                             நம்ப விவசாயத் துறை அமைச்சரைப் பாத்தீங்கனா.. நம்ப நாட்டு விவசாயமும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டது போல அவரும் ரொம்ப தான் பாதித்திருக்காருன்னு தெரியுதுங்க.... பாத்துக்கோங்க.. வறுமையில வாடுற விவசாயிங்க மாதிரி இவரும் தற்கொலை பண்ணிக்கப்  போறாரு.. ஏன்னா.. பாவம் இவரு ரொம்ப வறுமையில இருக்காரு. இவருடைய சொத்து மதிப்பு என்னன்னா.. வெறும் 12 கோடி தானுங்கலாங்க.. ஹீ...ஹீ...ஹீ...
           அதே மாதிரி மத்திய அமைச்சர்கள் பல பேருடைய சொத்துக்கள் நாமெல்லாம் பரிதாபப் படுகிற அளவுக்கு தானுங்க இருக்கு.
                      எவ்வளவோ  சொத்து வெச்சிருந்த அப்பாவோட பையன் ஜி.கே. வாசன் இவருக்கு இருக்கும் சொத்தின் மதிப்பே சில லட்சங்கள் தானாம். இவரைப் போலவே எஸ்.எம்.கிருஷ்ணா , வீரப்ப மொய்லி போன்ற அமைச்சர்களின் சொத்து மதிப்புக்களும் சில லட்சமே என்பதும் ஒரு வேடிக்கையான அம்சமாகும்.
            ''வேண்டா.. முடியல... அழுதுடுவேன்..'' அப்படின்னு நீங்க சொல்லுறது என் காதுல நல்லாவே விழுது..
                   இப்படியாக அவர்கள்  சொத்துகளின் மதிப்பு இவ்வளவு தான் என்று காட்டி, தங்களை யோக்கியர்களாகவும், நல்லவர்களாகவும் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்ள மன்மோகன் சிங் முயற்சி செய்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.  இந்த நாட்டு மக்கள் முட்டாள்கள் என்றும், அவர்களுக்கு  ஒன்றுமே  தெரியாது என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது  தான் உண்மை. விழித்துக்கொள்ளுங்கள் மக்களே.. விழித்துக்கொள்ளுங்கள். இவர்கள்   சேர்த்தது லட்சங்களா.. கோடிகளா.. என்பதல்ல நம் கேள்வி. நம் கண்ணில்  மண்ணைத் தூவி எப்படி சேர்த்தார்கள் என்பது தான் நம் கேள்வி.. அதற்கு தான் வலுவான - வலிமையான லோக்பால் மசோதாவே நமக்குத் தேவை. அதை செய்யத் துணியாத  மத்திய அரசு, இன்று மக்களை   திசைத் திருப்பும் வேலைகளை   செய்து கொண்டிருக்கிறது. இதை அனுமதிக்கமுடியாது.

கருத்துகள் இல்லை: