புதன், 14 செப்டம்பர், 2011

நம்ப நரவேட்டை நரேந்திர மோடி புனிதர் ஆயிட்டாருடா டோய்...!

        கடந்த 2002 - ஆம் ஆண்டு  குஜராத்தில் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ் பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் முஸ்லிம் சிறுபான்மை மக்களை குறிவைத்து, நரேந்திரமோடி அரசின் முழு ஆதரவோடு, பாஜக-ஆர்எஸ்எஸ் - விஎச்பி - பஜ்ரங்தள் உள்பட மதவெறிப் பரிவாரம் கொடிய வெறியாட்டம் போட்டதை நாடு மறந்திருக்க முடியாது. சுமார் 3 ஆயிரம் இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டதையும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.  இந்த நரவேட்டை தொடர்பாக 10 முக்கிய வழக்குகள் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அவற்றில் ஒரு வழக்கு குர்பர்க் வீட்டு வசதிக்கழக பகுதியில் 37 பேர் எரித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
                 கடந்த 2002 பிப்ரவரி 28ம்தேதி அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் வீட்டுவசதிக்கழக வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈசான் ஜாப்ரி உள்பட 37 பேர் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டனர் என்பது நமது ரத்தத்தையே உறைய வைக்கும் சம்பவமாகும். அது மட்டுமல்லாது, சம்பவம் நடந்தபோது காவல் துறையினர் அருகிலேயே இருந்தபோதிலும், மதவெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கதறியபோதும், எரித்துக் கொல்லப்படுவதை காவல் துறையினர் பார்த்துக் கொண்டே இருந்தனர் என்பதும் நெஞ்சை பதறவைக்கும் சம்பவமாகும்.
            மேலும்  கொல்லப்பட்ட ஈசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, முதலமைச்சர் நரேந்திரமோடி மற்றும் 62 பேர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மாநில டிஜிபியிடம் புகார் அளித்தார். ஆனால், மோடி அரசின் காவல்துறை அதை கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்தது. இதையடுத்து அவர், குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குஜராத் உயர் நீதிமன்றமோ அதை  நிராகரித்தது என்பது அதைவிட கொடுமையானது.
         இதற்கிடையே 2008 மார்ச் 26ம்தேதி, குஜராத்தில் நடந்த குர்பர்க் வீட்டு வசதிக்கழக  படுகொலை உள்பட 10 பெரும் படுகொலை வழக்குகள் குறித்து புலனாய்வு செய்வதற்காக சிபிஐயின் முன்னாள் இயக்குநர் ஆர்.கே. ராகவன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆனால், இந்தக் குழு தனது விசாரணையில் குல்பர்க் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பதாக புகார் கூறி சிறப்பு பொது வழக்கறிஞர் ஆர்.கே.ஷா மற்றும் அவரது துணை வழக்கறிஞர் நைனா பட் ஆகியோர் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்தனர். இந்தப் பின்னணியில் அதே ஆண்டு மார்ச் 27ம் தேதி குல்பர்க் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதலமைச்சர் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு நேரில் அழைத்து விசாரணை நடத்தியது. இதன் பின்னர் மே 14ம் தேதி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
                   இந்த அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்தும், பிரதான குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நரேந்திர மோடியின் நடவடிக்கைகள்  பற்றியும்  எதுவுமே குறிப்பிடப்படாததது  குறித்தும் அதிருப்திகளும், சந்தேகங்களும் வலுவாக எழுந்த நிலையில், சிறப்பு விசாரணை அதிகாரியாக நீதிபதி ராஜு ராமச்சந்திரனை நியமித்தது. அவர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும், சாட்சிகளிடமும், மனுதாரர்களிடமும் நேரடியாகவும், சுயேட்சையாகவும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தர விட்டது. அதன் அடிப்படையில் தான், கடந்த 2011 ஜூலை 25ம்தேதி, மேற்கண்ட சிறப்பு விசாரணை அதிகாரி ராஜு ராமச்சந்திரன், தனது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்தார். இந்த அறிக்கையின் மீது தான் செப்டம்பர் 12ம்தேதி திங்களன்று தனது உத்தரவை வெளியிட்ட உச்சநீதிமன்றம், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவானது இந்த வழக்கில் மேலும் விசாரணையை விரிவு படுத்தி நடத்த வேண்டும் என்றும், அதன்பின்னர் தனது இறுதி அறிக்கையை அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறியுறுத்தி  உத்தரவு பிறப்பித்தது.
                கடந்த 9 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் சிறப்பு விசாரணை அதிகாரி அளித்த அறிக்கையை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் விசாரணையை தொடராமல், வழக்கை சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றமே நடத்த வேண்டும் என்றும், அதன் முடிவுக்காக காத்திருக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதை,   2002 மதக்கலவர கொலை   வழக்கில் நரேந்திரமோடியை குற்ற மற்றவராக உச்சநீதிமன்றமே  அங்கீகரித்து விட்டதாக ஒரு பிரம்மையை உருவாக்கி பாரதீய ஜனதா கட்சியின் கூடாரத்தில் ஒரு கொண்டாட்டமே நடந்து வருகிறது.
             பா.ஜ.க - குள்ளேயே தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கிடையே குடுமிபிடி சண்டை ஒரு பக்கம். மக்களுக்கு நன்கு அறிமுகமான  பிரபலமான தலைவருக்கு ஏற்பட்டுள்ள பஞ்சம் இன்னொரு பக்கம். கட்சியில் இளைஞர்களே இல்லாத சூழ்நிலையில் அவர்களை ஈர்ப்பதற்கு ஏதாவது மாயஜாலம் செய்யவேண்டிய கட்டாயம் மற்றொரு புறம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உச்ச நீதிமன்றத்தின் அறியுறுத்தலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, ''ஆயிரம் தலை வாங்கிய  அபூர்வ சிந்தாமணி'' நரவேட்டை நரேந்திர மோடிக்கு புனித நீராட்டுவிழா நடத்தி, ''இவரு ரொம்ப நல்லவரு''ன்னு  ஒரு பட்டத்தைச் சூட்டி, பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக பட்டாபிஷேகம் நடத்தி எதிர்வரும் தேர்தலில் ''எப்படியாவது'' ஆட்சியை பிடித்துவிடலாமென்று கனவு காண்கிறார்கள் பாரதீய ஜனதா கட்சியினரும், நரவேட்டை நரேந்திர மோடியும் என்பது தான் வெளிப்படையாக மக்களுக்கு தெரிகின்ற உண்மையாகும்.

2 கருத்துகள்:

mondia சொன்னது…

தொடர வாழ்த்துக்கள் ...

Thanu சொன்னது…

ஏறக்குறய 15,000 தமிழர்களை நேரடியாக ஈழத்தில் ஐ பி கே எப் என்ற பெயரிலும், 2,00,000 தமிழர்களை மறைமுகமாக ஈழத்தில் 2009 லும், 500-க்கும் மேற்பட்ட தமிழக தமிழர்களை இலங்கை கடற்ப்படை கொல்ல தூண்டியவர்களும், 15,000 சீக்கியர்களை இந்திய தேசத்தில் நேரடியகவும் கொன்றவர்களும், ஆலமரம் சாய்கையில் புல் பூண்டுகள் அழியத்தான் செய்யும் என்று சீக்கிய கொலையை நியாயப்படுத்தியவர்களும் இன்று ஆழ்பவர்கள்(ராஜிவின் வம்சம்),
ஆதிக்க சக்திகளுக்கு இந்தியாவை விலைபேசுபவர்கள், ஏதிர்ப்பவர்களை மாவோஸ்டுகள் என்றும் நக்சல்வாதிகள் என்றும் பட்டம் சூட்டுபவர்கள்
அன்னிய தலைமையால் ஆட்டிப்படைக்கபடும் ஆதிக்கவெறி பிடித்த இந்த மானம் கெட்ட காங்கிரசுடன் ஒப்பிடுகையில், பி ஜே பி 1000 மடங்கு மேல்....