புதன், 7 செப்டம்பர், 2011

''எய்தவனை'' மட்டும் விட்டுவிட்டு அம்பை மட்டும் நோவதேன்..? பிரதமரும் அம்பானிகளும் கூடக் குற்றவாளிகள் தான்..!

                      சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -1 -இன் ஆட்சிக் காலத்தில் ஜூலை 2008 - ஆம் ஆண்டில்  பிரதமர் மண்ணு மோகன் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இது தேசத்திற்கு எதிரானது என்று எவ்வளவோ அறிவுறுத்தியும், வற்புறுத்தியும் கேளாமல்  தான்தோன்றித்தனமாக - தறுதலைத்தனமாக   அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றுவதில் முனைப்புடன்  செயல்பட்டு கையெழுத்திட்டார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த உடன்பாட்டில் இருக்கும் ஷரத்துக்களே என்னவென்று இந்த தேசத்து மக்களுக்கே தெரியாது. இன்னும் சொல்லப்போனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாது. அது ஒரு அடிமை சாசனம்.. அதில் கையெழுத்திடக்  கூடாது  என்று நாடு முழுதும் போராட்டங்கள் நடந்தும், அதைப்பற்றியெல்லாம் கவலை படாமல் மன்மோகன் சிங்  கையெழுத்திட்டதை கண்டித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு  கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரிக்கட்சிகள் திரும்பப் பெற்றதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சமயத்தில் மக்களவையில் மன்மோகன் சிங் ஆட்சி தொடர்வதற்கு போதுமான பலம் இல்லாத சூழ்நிலையில், நேர்மையாகவும் நியாயமாகவும் மன்மோகன் சிங் ஆட்சியிலிருந்து இறங்கி இருக்கவேண்டும்.   அல்லது  நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் போதுமான ஆதரவு இல்லாததால் வீழ்ந்திருக்க வேண்டும்.
                    ஆனால் அரசை காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சி  எம்.பி-க்களுக்கு  லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்க பிரதமர் மன்மோகன் சிங் மிகுந்த முனைப்புடன் செயல் பட்டார் என்பதை இந்த  நாடே அறியும். எம்.பி-க்கள் 25 கோடி வரை விலை போனார்கள்  என்பது இந்தியப் பாராளுமன்ற வரலாற்றில் நடைபெற்ற படுகேவலமான  நிகழ்ச்சியாகும். பாராளுமன்ற  ஜனநாயகம் உலக அரங்கில் அவமானப்பட்டு தலைகுனிந்து நின்றது.  அப்படியாக நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு - மன்மோகன் சிங்கிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு, ''தகுதிவாய்ந்த''  எம்.பி-க்களை தேர்ந்தெடுத்து பணத்தைக் கொண்டு சேர்க்கும்  இடைத்தரகராக செயல்பட்டவர் தான் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமர்சிங் என்பவர்.
                     வாக்களிப்பதற்கு எம். பி.-க்களுக்கு பணம் கொடுத்தக் குற்றத்துக்காக  அண்மையில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரோடு சேர்ந்து,  மன்மோகன் சிங்கிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு எங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக சொல்லி, பாராளுமன்றத்தில் ரூபாய் நோட்டுக் கட்டுகளை எடுத்துக்காட்டிய இரண்டு பா. ஜ. க. -யின் முன்னாள் எம்.பி.-க்களையும் கைது செய்திருக்கிறார்கள். அதுவும் மூன்று ஆண்டுகள் கழித்து, உச்சநீதி மன்றம் கண்டித்தப் பிறகே டெல்லி போலீசார் இந்த கைது நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றனர்.
            ஆனால், இவர்கள் மட்டும் தான் இந்த வெட்கக்கேடான வேலைகளுக்குக் காரணமா..?  தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று தொடர்ந்து பிரதமராக நீடிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக, இதற்கு முன்பு இந்த நாட்டின் பிரதமராக பதவி வகித்த அரசியல்வாதிகளே செய்யத் துணியாத வேலைகளை செய்த - நம்பிக்கை வாக்குக்கு கோடிகளை இரைக்க முக்கிய காரணகர்த்தாவாக இருந்த மன்மோகன் சிங் தான் இதில் முக்கிய குற்றவாளி. அவர் மீது  ஏன் டெல்லி போலீசார் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை...? என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள்.     
         அவர் மட்டுமல்ல.. மன்மோகன் சிங்கின் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக கோடி கோடியாய் பணத்தை கட்டுக்கட்டாய் வாரி இரைத்த, மன்மோகனின் நெருங்கிய நண்பரும் இந்திய பெருமுதலாளிகளில் ஒருவருமான அனில் அம்பானியையும் கைது செய்யாததேன்..? என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். அனில் அம்பானி பல நூறு கோடிகளை இரைத்ததனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற மன்மோகன் சிங்  அதற்கு நன்றிக்கடனாக, அதுவரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மட்டுமே நிர்வகித்து வந்த உழைப்பாளி மக்களின் உழைப்பு நிதியான வருங்கால வைப்பு நிதியை ( பி. எப் நிதியை ) மூன்றாக பிரித்து ஒரு பங்கினை  அனில் அம்பானி பங்கு சந்தையில் முதலீடு செய்து  நிர்வகிக்க கொடுத்துவிட்டார். இது மகா ஊழல் இல்லையா..? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அது மட்டுமல்ல 2009 - ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்றதும் மன்மோகன் புதிய அரசின் முதல் பட்ஜெட்டிலேயே அனில் அம்பானிக்கு மட்டுமே  ரூ.46,000 கோடி அளவில் வருமான வரித் தள்ளுபடியும், மானியமுமாக மன்மோகன் சிங்கு  அளித்திருக்கிறார் என்பதையும்   இங்கே அடிகோடிட்டு இந்த நாட்டு  மக்களுக்கு சொல்ல வேண்டி இருக்கிறது.
                வாங்கின காசுக்கு தன் கட்சி கொறடா உத்தரவையும் மீறி மன்மோகன்
சிங்குக்கு  ஆதரவாக வாக்களித்தார்களே பத்தொன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: