வெள்ளி, 30 செப்டம்பர், 2011

ஒரு தொழிற்சங்கப் போராளியின் பணி நிறைவு - புரட்சிகர நல்வாழ்த்துகள்...

                       கடந்த 1951 - லிருந்து இந்திய இன்சூரன்ஸ் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு - குறிப்பாக பொதுத்துறை எல். ஐ. சி மற்றும் பொது இன்சூரன்ஸ் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பாய் - பக்கபலமாய் இருக்கும் அகில் இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இன்சூரன்ஸ் ஊழியர்கள் அனைவரையும் வழிநடத்திச்செல்லும் எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய தோழர் கே. வேணுகோபால் அவர்கள் 30  செப்டம்பர் 2011 அன்று 41 ஆண்டு கால எல் ஐ. சி பணி நிறைவு செய்கிறார்.  
               கடந்த 11 ஆண்டுகாலமாக அவர் ஆற்றிய சங்கத்தின்  பொதுச்செயலாளர் பணி என்பது மிகவும் பாராட்டத்தக்கப் பணியாகும். மண்டல மற்றும் கோட்டச்சங்க மாநாடுகள் மட்டுமின்றி சங்கத்தின் அனைத்து மனிதநேய பணிகளுக்கும் சிரமம் பாராமல் பல்வேறு வேலைகளுக்கு நடுவில் ஓடோடி வந்து தோழர்களோடு சேர்ந்து  அந்த தொழிற்சங்கப் பணிகளை செய்திருக்கிறார்.
              2004  - ஆம் ஆண்டு தமிழகம் சுனாமியால் பாதிக்கப்பட்ட போதும், 2005 - ஆம் ஆண்டு காஷ்மீர்   பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட போதும் அங்கெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அனைத்து உதவிகளையும் செய்துகொண்டிருந்த AIIEA சங்கத்  தோழர்களோடு சேர்ந்து களப்பணிகளை செய்யக்கூடியவர். தோழர்கள் செய்த வேலைகளை பாராட்டவும் தயங்கமாட்டார். அவர் இரண்டு முறை சுனாமி சம்பந்தப்பட்ட  நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதுவைக்கு வருகை புரிந்தது என்பது  மறக்க முடியாத நிகழ்வுகளாகும். புதுச்சேரியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட  மக்களுக்காக சங்கத்தின் சார்பில் நான் செய்த பணிகளை குறிப்பிட்டு சங்க மாநாடுகளிலும், என்னிடம் நேரிலும் அவர் பலமுறை பாராட்டியது என்பது மறக்கமுடியாததாகும்.
               வெறும் சம்பள உயர்வு வாங்குவதற்கு மட்டுமே தொழிற்சங்கம் என்ற பிற்போக்குத்தனமான சுயநல சங்கங்களுக்கு மத்தியில் சமூக அக்கறை கொண்ட - தேச பக்தி கொண்ட தொழிற்சங்கமாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை மாற்றிய தலைவர்களில் இவரும் ஒருவர். எல். ஐ. சி. ஊழியர்களுக்கு அரசியல் விழிப்புணர்வையும், சமூக பார்வையையும், தேசபக்தியையும் ஊட்டியவர்.
               இன்று செப்டம்பர் 30 -இல்   எல். ஐ. சி.  பணி  நிறைவு செய்யும் தோழர். கே. வேணுகோபால் அவர்களை வாழ்த்தி வழியனுப்புகிறோம். புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். தோழர். கே. வேணுகோபால் வாழ்க..

கருத்துகள் இல்லை: