சனி, 3 செப்டம்பர், 2011

நீதிபதிகள் தவறு செய்வது நீதித் துறைக்கே களங்கம்..!

                 சமீபத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பணிபுரிந்த நீதிபதி சௌமித்ர சென் மீதான கண்டனத் தீர்மானம் ஒன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட சூழ்நிலையில்,  அடுத்த வாரம் மக்களவையில் இதே தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அவர் தனது நீதிபதி பதவியை  ராஜனாமா செய்து நேற்று  குடியரசுத் தலைவரிடம் கடிதத்தை அளித்திருந்தார். அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவரும் நீதித் துறைக்கே திருப்பியனுப்பியிருக்கிறார். இந்திய நீதித் துறை வரலாற்றிலேயே ஒரு நீதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கல்ங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
                 குற்றவாளிகளுக்கு தண்டனைக் கொடுக்கக்கூடிய நீதிபதியே குற்றம் செய்தால் எங்கே செல்வது..? நீதிபதி  சௌமித்ர சென் அப்படியென்ன தவறு செய்தார்..? இந்தியத் தேனிரும்பு ஆணையம் (செயில்) மற்றும்  இந்திய கப்பல் கழகம் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே 1997-ம் ஆண்டில்  நடைபெற்ற  நீதிமன்ற வழக்கில், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த  சௌமித்ர சென்னிடம் ரூ.33,22,800/-ஐ மறுஉத்தரவு வரும் வரை கொடுத்து வைத்திருக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படி கொடுக்கப்பட்ட  பணத்தை  சௌமித்ர சென் தன் பெயரில் ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் போட்டு வைத்திருந்தார். 2006-ஆம்  ஆண்டு, செயில் தனது பணத்தைத் திரும்பத் தரும்படி கேட்டபோது, 1997 - இல் கொடுத்த அந்தத் தொகையை         மட்டும் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அந்த தொகைக்கு கிடைத்த  வட்டியை மட்டும்  தரவில்லை. ஆனால் அன்றைய தேதி வரை அவர் வட்டியோடு  அளிக்க வேண்டிய தொகை ரூ.57,46,454/- ஆகும். அப்படியென்றால், அவர் சுமார்  ரூ.24 லட்சம் குறைவாகக் கொடுத்திருக்கிறார். ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் நிதியை கையாடல் செய்தது தான் அவர்   மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுயாகும். நீதிபதி பதவியை விலகியதும் இப்போது தூய்மையாகிவிட்டார். 
            இதேபோன்று, தலித் மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களை அபகரித்தது போன்ற  பல முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சிக்கிம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி   தினகரன் அண்மையில் அப்பதவியிலிருந்து விலகிக்கொண்டார். நீதிபதி பதவியை விலகியதும் இப்போது இவரும்  தூய்மையாகிவிட்டார். 
                      முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன் தனது மருமகனுக்காக கேரள மாநிலத்தில் நிறைய சொத்துகள் சேர்த்துக் கொடுத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஆனால் எந்தவிதமான விசாரணையோ நடவடிக்கைகளோ இதுவரை அவர் மீது இல்லை. அதனால் அவரும் தூய்மையாகிவிட்டார்.
                சாதாரணமாக யார் தவறு    செய்தாலும் - குற்றங்கள் இழைத்தாலும் அவர்களுக்கு தண்டனைகளை வழங்கி தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள், அவர்களே தவறு   செய்தாலோ - குற்றங்கள்        இழைத்தாலோ அவர்களுக்கு யார் தண்டனை வழங்குவது. இன்றும் நீதிபதிகள் தங்களை கடவுளாகவே ( Lord ) நினைத்துக்கொள்கிறார்கள். தாங்கள் குற்றச்சாட்டுகளுக்கும், தண்டனைகளுக்கும் அப்பாற்பட்டவர்களாக நினைத்துக்கொண்டு தான் இப்படிப்பட்ட பெரியப் பெரிய தவறுகளையும் குற்றங்களையும் செய்கிறார்கள்.
    அதனால் தான் நீதித்துறையை சேர்ந்தவர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்றும், நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறையை சேர்ந்தவர்களின் ஊழல் புகார்களை விசாரிக்க தனியாக தேசிய நீதித்துறைக் கமிஷன் ஒன்றை நிறுவவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்கிற கோரிக்கையோடு சேர்த்து போராடுகிறது.
                    எனவே வலுவான லோக்பால் மசோதாவும், தேசிய நீதித்துறைக் கமிஷனும் கொண்டு வந்தால் தான்,  நாட்டில் உயர் பதவியில் இருப்பவர்களும், நீதித்  துறையை சேர்ந்தவர்களும் செய்யும் ஊழலை ஒழிக்க முடியும்.

கருத்துகள் இல்லை: