புதன், 14 செப்டம்பர், 2011

2014 - ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளர்களை அமெரிக்கா அறிவித்தது - கண்டிக்கத்தக்கது...!

       சென்ற 2009 - ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத் தேர்தலிலே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் முழு தலையீடு என்பது இருந்தது. தேர்தல் அறிவித்தவுடனேயே அமெரிக்காவின் உளவுத்துறை சி. ஐ. ஏ-வின் தலைவர் வெளிப்படையாகவே தலைநகருக்கு வந்து ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அவரை இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் ஓட்டல் அறைக்கு சென்று சந்தித்தார் என்பதை நாம் மறந்திருக்க முடியாது.  அமெரிக்க உளவுத்துறையும், இந்தியாவில்  உள்ள அமெரிக்க தூதரகமும் தான் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் வேலைகளை செய்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுவும் குறிப்பாக இடதுசாரிகள் ஆட்சி செய்த மேற்குவங்கம்  மற்றும்  கேரளாவில் இடதுசாரிகளுகெதிராக  இவர்கள் கடுமையாக வேலை செய்தது மட்டுமல்ல,  அமெரிக்க பணம் ஒரு இலட்சம் கோடிக்கு மேல் இங்கே கொட்டி இரைத்தார்கள். காங்கிரஸ் கட்சிக்காக மற்ற மாநிலக் கட்சிகளோடு கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு பற்றிய பேச்சுவார்த்தைகளையும் கூட  இவர்களே நடத்தினர். சிவகங்கையில் தோற்றுப்போனவரை வெற்றிபெற்றதாக அறிவித்ததில் அமெரிக்க தூதரகத்தின் பங்கு அதிகம்.
             இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  அமெரிக்காவுடன் மன்மோகன் சிங்கினால் போடப்பட்டிருக்கும் ''அமெரிக்க அணுசக்தி  ஒப்பந்தம்'' ரத்து செய்யப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள்  வெளிப்படையாகவும் தைரியமாகவும்  தங்களின் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது தான் அமெரிக்கவின்  இந்த தலையீட்டுக்கு  மிகப் பெரிய  காரணம்.
              இந்த சூழ்நிலையில் தான், அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை (Congressional Research Service) மன்ற உறுப்பினர்களுக்காக இந்திய அரசியல் சூழல் குறித்து 94 பக்க அறிக்கையொன்றைத் தயாரித்துள்ளது. உறுப்பினர்களின் கவனத்துக்காக மட்டும் தயாரிக்கப்படும் இது போன்ற குறிப்பறிக்கைகள் வெளியில் உள்ள எவருக்கும் தரப்படுவதில்லை. ஆயினும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியான இந்த அறிக்கை அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (Federation of American Scientists) மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வந்துள்ளது. இது வரும் 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கிற இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கு இந்திய மக்களை மூளைச் சலவைச் செய்து தயார்படுத்துவதற்கான வேலையை அமெரிக்கா தொடங்கிவிட்டது.   
             அந்த அறிக்கையில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டி என்பது , பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நரேந்திர மோடிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்திக்கும் இடையே தான் இருக்கும். இந்த இருவர் மட்டும்  தான்  பிரதமர் பதவிக்கான பிரதான வேட்பாளர்களாக இருப்பார்கள் என்று அமெரிக்கா ஆரூடம் சொல்கிறது. நரேந்திர மோடி தான் பாரதீய ஜனதா கட்சிக்கு பலம் வாய்ந்த வேட்பாளர் எனவும் குறிப்பிடுகிறது.
                மேலும் அந்த அறிக்கையில்,  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செயலாற்றல் மிக்க நிர்வாகத்துக்கு  சிறந்த உதாரணமாக உள்ளார். ஊழலைக் கட்டுப்படுத்துவதிலும் அரசு நிர்வாகத்தில் தாமதத்தை ஒழிப்பதிலும் வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக 11 சதவீதமாக உள்ளது. எனவே  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மோடி முக்கிய பங்கு வகிக்கிறார் இப்படியாக நரேந்திர மோடிக்கு அமெரிக்கா  நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது.
             இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான வேலையை அமெரிக்கா இப்போதே தொடங்கிவிட்டது. இனி தேர்தல் முடியும் வரை இந்திய மக்கள் பல்வேறுவிதமாக மூளைச் சலவை செய்யப்படுவார்கள்.
             ஊழலுக்கு அப்பாற்பட்ட இடதுசாரிகள் பக்கம் மக்களின் பார்வை திரும்பி விடாமல் இருப்பதற்கான வேலைதான் இது. ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த அன்னா அசாரேக்கு, உண்ணாவிரத நாடகம் அரங்கேற்ற   அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் உலகவங்கி நிதியுதவி அளித்ததையும், அன்னா அசாரேயும் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளினார் என்பதையும் பொருத்திப் பார்த்தால் நம் நாட்டில் யார் பிரதமராக வரவேண்டும் என்பதைப் பற்றியும், யார் ஆட்சி செய்யவேண்டும் என்பது பற்றியும் ஏன் அமெரிக்கா கவலைப்படவேண்டும் என்ற இந்திய அரசியல் நிகழ்வு போக்குகளை மக்கள் தான்  உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: