ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

யார் நல்லாசிரியர்..? எது நல்லப் பள்ளி..?

இந்திய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்....                         
                 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 -ஆம் தேதி வந்தாலே மத்திய - மாநில அரசுகள் ஆசிரியர் - ஆசிரியைகளை தேர்ந்தெடுத்து ''நல்லாசிரியர்'' விருது அளிப்பார்கள். விருது பெற்றவர்கள் மட்டுமே நல்லாசிரியர்களா..?  மற்ற ஆசிரியர்களெல்லாம் நல்லாசிரியர்கள் இல்லையா..?  அப்படியென்றால்,    யார் நல்லாசிரியர்..? எது நல்லப் பள்ளி..?    
                   இந்த நாட்டில் கோடிக்கணக்கான குழந்தைகள், தூய்மையான குடிநீர் இல்லாமலும், ஊட்டச்சத்துள்ள  உணவு  இல்லாமலும், வாழ இருப்பிடமில்லாமலும், சுகாதாரமான கழிப்பிட வசதி இல்லாமலும்,  கல்வி பெரும் சூழல் இல்லாமலும், பாதுகாப்பும் பரிவும் இல்லாமலும்  வசதியற்றக் குழந்தைகள் மட்டும், தான் ஆசிரியராக பணிபுரியும் அரசு பள்ளிகளில் படிக்கையிலே, தன வீட்டுக் குழந்தைகளை மட்டும் மேலே சொன்ன எந்தவித குறைகளும் இல்லாமல் தன்னலத்தோடு தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறார்களே.... அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..?
                      மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஆசிரியர்கள், இந்த மாணவ சமூகத்தின் ஒட்டுமொத்த நன்மைக்காக தனது வருமானத்தில் சிறு பகுதியையோ.. அல்லது மற்றவர்களை விட அதிகமாக கிடைத்துள்ள ஓய்வு நேரத்தையோ செலவிடாமல்,  தன் வருமானத்தை மேலும் பெருக்கிக்கொள்ள காலையிலும் மாலையிலும் தனி வகுப்பு நடத்துகிறார்களே.... அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..?
            மனித மாண்புகளையும், மனித உரிமைகளையும்   கற்றுக் கொடுக்காமல், அடிமை வேலைகள் மட்டும் ஆயிரம் செய்ய கற்றுக் கொடுக்கும் இன்றைய கல்வி முறையின் குறைகளைப் பற்றி சற்றும் சிந்திக்கத் தெரியாமலேயே, தான் உண்டு  தன் வேலை உண்டு என்ற வாழ்வியல் சிறைக்குள்ளே பிள்ளைகளை  அடைத்து, எதிர்காலத்தில் தவறுகளை தட்டிக்கேட்கவும், அநீதிகளை எதிர்க்கவும் தகுதியில்லாத மனிதர்களாக மாணவர்களை உருவாக்குகிறார்களே....அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..?     
                   #  எந்த ஓர்  ஆசிரியர்,  தான்  பணிசெய்யும் பள்ளியில் வகுப்பறை சுதந்திரத்தையும் வகுப்பறை   ஜனநாயகத்தையும் கடைப்பிடித்து  மாணவர்களை பேசுவதற்கு வாய்ப்பளிக்கின்றாரோ..
           # எந்த ஓர் ஆசிரியர், தன் ஓய்வு நேரத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பள்ளிக்கு வெளியே தனி வகுப்பு எடுப்பதை தவிர்க்கின்றாரோ..
                 #   எந்த ஓர் ஆசிரியரிடம் படிக்கும் மாணவர்கள் ஒருவர் கூட வெளியில் தனிவகுப்பு செல்லும் கட்டாயம் உருவாக்காமல்  கற்பிக்கின்றாரோ...
                 #  எழுதப் படிக்க மட்டும் கற்றுக்கொடுப்பது ஓர் ஆசிரியரின் பணியல்ல.. வெறும் மனப்பாடத் திறமையில் தகவல் தொகுப்பாக மாணவர்களை மாற்றுவது ஓர் ஆசிரியரின் பணியல்ல..மாறாக ஒட்டு மொத்த
சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் விருப்பு வெறுப்பின்றி விசாரணை செய்வதும், அதன் மூலம் சமூக அநீதிகளைக் களைவதும், ஒரு சிலர் மட்டும் அனுபவிக்கும் முறையற்ற செல்வப் பகிர்வை உலகில் உள்ள அனைவருக்கும் பயனுடையதாக மாற்றுவதும் ஓர் ஆசிரியரின் நோக்கமாக இருக்கவேண்டும்.
              இப்படிப்பட்ட ஆசிரியர்களே மிக சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும். அவர்களே இந்த தேசத்தின் நல்லாசிரியர்கள்.  

3 கருத்துகள்:

hariharan சொன்னது…

அருமையான் கருத்துக்கள்..

சிறந்த ஆசிரியர்கள் தான் சிறந்த மாணவர்களை எதிர்காலத்தை உருவாக்கமுடியும்.

puduvairamji.blogspot.com சொன்னது…

என்னை ஊக்கப்படுத்தும் ரத்னவேல் அய்யா அவர்களுக்கும், ஹரிஹரன் அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி...

பெயரில்லா சொன்னது…

Nalla karuthu.