செவ்வாய், 18 டிசம்பர், 2012

உலகம் அழியப்போகிறது என்பதெல்லாம் வெறும் கற்பனையே...!


              21 டிசம்பர் 2012 உலகம் அழியும் நாள். ''ருத்ரம் 2012'' அமெரிக்க திரைப்படத்தில் தொடங்கி இன்று வரை அனைத்துத் தொலைக்காட்சிகளும் செய்தித்தாள்களும் மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் உருவாக்கியிருக்கும் நாள் இது தான். அமாவாசை, பவுர்ணமி, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற இயற்கை நிகழ்வுகளை இன்றைய வானவியல் அறிஞர்கள் முன்கூட்டியே சொல்வதைப் போல், உலகம் அழியும் இந்த நாளையும்  3000 ஆண்டுகளுக்கு முன்பே ''மாயன் நாகரீகம்'' என்று சொல்லக்கூடிய ''மத்திய அமெரிக்க நாகரீகம்''  எழுதியிருப்பதாக ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டு இன்றைக்கு  மதவாதமும், முதலாளித்துவமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இது அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட கட்டுக்கதை என்பதை முதலில் நாம் உணரவேண்டும்.
           மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் கி.மு.3113 ஆண்டிலிருந்து கி.பி.2012 - ஆம் ஆண்டு வரை தான் நாட்காட்டி என்ற ஆரூடம்  எழுதி வைத்திருப்பதாகவும், அந்த நாட்காட்டியில் 2012 டிசம்பர் 21 - க்கு பிறகு இல்லை எனவும், அதனால் டிசம்பர் 21 அன்று உலகம் அழியும் என்றும் பலவிதமான  கட்டுக்கதைகள்  கடந்த ஓராண்டு காலமாக மக்களிடையே உலாவந்து, இப்போது அந்த நாள் நெருங்க நெருங்க மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் கிளப்பிவிட்டு மதவாதமும், முதலாளித்துவமும் குளிர் காய்ந்துகொண்டிருக்கின்றன. மதமும் முதலாளித்துவமும் வாழ்ந்தால் தான் ஏகாதிபத்தியம் வாழமுடியும். இவை இரண்டும் தான் ஏகாதிபத்தியத்தை காப்பாற்றுகின்றன.
          அதனால் மக்களின் பீதியையும் அச்சத்தையும் பயன்படுத்திக்கொண்டு  இந்துமதவாதிகள் ''ஹோமம் நடத்துங்கள் கடவுள் நம்மை காப்பாற்றுவார்'' என்று சொல்லி மக்களை அழைத்து ஒரு பக்கம் ஹோமம் நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம் ''ஜெபம் செய்யுங்கள் தேவன் நம்மை காப்பாற்றுவார்'' என்று சொல்லி ஒரு பக்கம் மக்களை அழைத்து ஜெபக்கூட்டம் நடத்துகிறார்கள். மற்றொரு பக்கம் லாமாக்கள் என்று சொல்லக்கூடிய புத்தபிச்சுக்கள் மக்களிடையே இது போன்ற பீதியை கிளப்பிவிடுகிறார்கள்.  இவர்கள் அனைவரும் வெவ்வேறு மதங்களாகவும், வெவ்வேறு விதமான பிரார்த்தனையாகவும் இருந்தாலும் இவர்கள் நோக்கம் என்பது ஒன்று தான். இப்படியெல்லாம் செய்து அழியப்போகும் உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. உலகம் இந்த குறிப்பிட்ட தேதியில் அழியாது என்பது இவர்களுக்கும் தெரியும். இந்த மூடநம்பிக்கையை வைத்து மதத்தை வளர்க்கவேண்டும் என்பது தான் இவர்கள் அனைவரின் ஒரே நோக்கம். எப்படியும் டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போவதில்லை. அந்த நாள் நல்ல விதமாக கழிந்த பிறகு மறு நாள் 22 - ஆம் தேதியன்று '' இதோ பார்த்தீர்களா.... நாங்கள் செய்த ஹோமத்தால் தான் உலகம் அழியாமல் காப்பற்றுப்பட்டுவிட்டது'' என்றும் '' நாங்கள் செய்த ஜெபத்தால் தான் உலகம் அழியாமல் காப்பாற்றுவிட்டது'' என்றும் சொல்லி மதங்களுக்கு அப்பால் இருக்கும் மக்களையும், வேற்று மதத்தில் இருப்போரையும் தங்கள் மதத்தின் பால் இழுப்பதற்கும், அதன் மூலம் தங்கள் மதத்தை வளர்த்துக் கொள்வதற்குமான ஒரு ஏற்பாட்டுக்காகத் தான் அழிந்து போன மாயனுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
          இன்னொரு பக்கம், ''இந்த நாள் எப்படி?'',  ''நிஜம்'', ''உண்மைக்கதை'', ''நடந்தது என்ன..?'', ''நம்பினால் நம்புங்கள்'' - போன்ற ஆரூடங்கள், ஜோசியங்கள்,   கட்டுக்கதைகள் மூலம் மக்களின் மூலைகளில் மூடநம்பிக்கைகளை விதை
த்து அதன் மூலம் இலாபம் பார்க்கிற செய்தித்தாள் நிறுவனங்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் கடந்த சில மாதங்களாக இந்த மாயனைத் தான் கடவுளாக நம்பியிருக்கின்றனர். இவர்களும் டிசம்பர் 21 உலக அழிவைப் பற்றிய பல்வேறு கட்டுக்கதைகளை மக்களின் மூலையில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். மக்களும் செய்தித்தாள்களில் சொல்லப்படுவதும், தொலைக்காட்சிகளில் சொல்லப்படுவதும் உணமையாக தான் இருக்கும் என்று நம்பி பீதியில் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இப்படியாக மக்களின் பீதியையும், அச்சத்தையும் பயன்படுத்தி இவர்கள் ஒரு பக்கம் இலாபம் சம்பாதிக்கிறார்கள்.
            அறிவியல் அறிவும், பகுத்தறிவும் வளராத காலத்தில் - மாந்தரீகம், ஆரூடம், ஜோசியம் - போன்ற மூடநம்பிக்கைகள் மட்டுமே வளர்ந்திருந்த காலக்கட்டத்தில் சொல்லப்பட்டவைகளை, இன்று அறிவியல் அறிவும், பகுத்தறிவும், அறிவியலும், அறிவியல் கண்டுபிடிப்புகளும், அறிவியல் தொழிற்நுட்பங்களும் வளர்ந்திருக்கும் இந்த
அறிவியல் யுகத்தில் மக்களை மீண்டும் பின்னோக்கி அழைத்துச் செல்லும் வேலைகளை நாட்டில் இன்றைக்கு மதங்களும், ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் மத்திய - மாநில அரசுகளோ, நாட்டிலுள்ள மற்ற அறிவியல் அமைப்புகளோ இன்றுவரையில் வாயையே திறக்காமல் மவுனம் சாதிக்கின்றன. மக்களிடம் ஏற்பட்டிருக்கக்கூடிய பீதியையும், அச்சத்தையும் போக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. அதேப்போல் வதந்திகளை பரப்பி பீதியை உண்டாக்குவோர் மீதும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கின்றார்கள். அண்மையில் சீன நாட்டில் உலக அழிவு சம்பந்தமான வதந்திகளை பிரச்சாரம் செய்த நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்திருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள், இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது குறைந்தபட்சம் எச்சரிக்கையாவது செய்திருக்க வேண்டும். ஆனால் அதை கூட செய்யவில்லை. ஏனென்றால் ஆட்சியாளர்களின் தவறான போக்கால் பாதிக்கப்பட்ட மக்களை திசைத்திருப்புவதற்கு  ஆட்சியாளர்களுக்கு இது போன்ற வதந்திகள் அவசியம் தேவைப்படுகின்றன. இது போன்ற வதந்திகளும், புரளிகளும், இவைகளால் ஏற்படும் அச்சங்களுமே மத்திய - மாநில ஆட்சியாளர்களை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.
              மதங்களும், கடவுள்களும், தேவையில்லாத சடங்குகளும், சம்பிரதாயங்களும், மூடநம்பிக்கைகளும், மூடப்பழக்கவழக்கங்களும், வதந்திகளுமே ஏகாதிபத்தியத்தையும், முதலாளித்துவத்தையும், இவையிரண்டையும் நம்பியிருக்கக்கூடிய ஆட்சியாளர்களையும் அழியாமல் காப்பாற்றுகின்றன. அவைகள்  அத்தனையும் ஒழிந்தால தான் இந்த மூவரையும் ஒழித்துக்கட்ட முடியும் என்பதை தான் இன்று உலகம் அழியும் என்று நம்பக்கூடிய மக்கள் உணரவேண்டும்.

2 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

டிசம். 22 அன்னைக்கு "நான் அப்பவே சொன்னேன்" அப்படீன்னு ஒரு பதிவு போட்டுடுங்க.

அய்யய்யோ, இங்கயும் வேர்டு வெரிபிகேஷனா? உலகம் அழிஞ்சாக்கூட இது அழியாது போல இருக்கே!

PKandaswamy சொன்னது…

ஐயகோ, நான் போட்ட பின்னூட்டம் என்ன ஆச்சு, ஒண்ணும் தெரியலயே?