வியாழன், 6 டிசம்பர், 2012

மன்மோகனின் எஜமான விசுவாசம் வெற்றிபெற்றது...!


               
             "சில்லரை வர்த்தகத்தில்  அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது'' என மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டு வந்த தீர்மானம் ''கூட்டல் - கழித்தல் - வகுத்தல்  பெருக்கல்'' என்ற எண்ணிக்கை கணக்கு அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு மன்மோகன் சிங் கொடுத்த விருந்துக்கு நன்றியாக செஞ்சோற்று கடன் செய்து கருணாநிதியும், முலாயம் சிங்கும், மாயாவதியும் மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவை அளித்து தங்களது விசுவாசத்தை :மிக நன்றாகவே காட்டியிருக்கின்றார்கள்.
                ஆனால் விசுவாசம் காட்டுவதில் இவர்களுக்கெல்லாம் கண்டிப்பாக ''இரண்டாம்'' இடம் தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இவர்களை விட பல படி மேலே போய் அதிகப்படியான விசுவாசம் காட்டியவர் யார் என்று கேட்டால், அது மன்மோகன் சிங்கு தான். இவர் காட்டினதோ ''எஜமான விசுவாசம்''. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சில்லரை  வர்த்தகத்தை  அன்னியர்களுக்கு திறந்தே விடுவேன் என்று தன் தேசத்தின் மீது விசுவாசம் காட்டாமல் அமெரிக்க எஜமான விசுவாசத்தை மிக தைரியமாக காட்டியிருக்கிறார். இப்போது அவரது எஜமான விசுவாசம் வெற்றிபெற்றுவிட்டது.
            இந்த தேசத்தை காக்கும் போராட்டத்தில் தங்களை தன்னலமில்லாமல் இணைத்துக்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பாராளுமன்றத்திலும், நாடு முழுதும் மிகப்பெரிய அளவில் போராட்டடங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மன்மோகன் சிங்கைப் போல் மக்கள் வாயை திறக்காமல் பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார்கள். கோபமே வரவில்லை. என்ன ஜென்மங்களோ....?