ஞாயிறு, 9 டிசம்பர், 2012

சின்னத்திரையில் விஸ்வரூபம் - அதீத துணிச்சலில் கமல்ஹாசன்...!


           நடிகர் கமல்ஹாசன் தயாரித்து எழுதி இயக்கிய திரைப்படமான ''விஸ்வரூபம்'' இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக வித்தியாசமான முறையில் திரையிடப்படுகிறது. வழக்கமாக ஒரு திரைப்படம் என்பது பெரிய திரையில் திரையிடப்பட்டு பிறகு தான் சின்னத்திரையில் திரையிடப்படும். ஆனால் இம்முறை ''இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக'' என்று சொல்வதற்கு பதிலாக  ''இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக'' என்று தான் விளம்பரப்படுத்த வேண்டும். இதுவரையில் யாரும் - எந்த திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், பெரிய நடிகரும் செய்யத் துணியாததை, நடிகர் கமல்ஹாசன் துணிந்து முயற்சி செய்திருக்கிறார்.
   # இதன் மூலம், திரையரங்கையே மறந்து போனவர்கள், திரையரங்கிற்கே செல்லமுடியாதவர்கள், குடும்பத்துடன் சென்றால் அதிக செலவாகுமென்பதால் திரையரங்கம் செல்லத் தயங்கியவர்கள் உட்பட பல பேர் சேர்ந்து குடும்பத்துடன், நண்பர்களுடன் உலகம் முழுதும் ஒரே நேரத்தில் வீட்டிலிருந்தபடியே திரைப்படம் பார்க்கும் வாய்ப்பை கமல்ஹாசன் கொடுத்திருக்கிறார்.
    # மேலும் வழக்கமாக புதிய படமென்றால் அரசின் ஒப்புதலுடன் திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்கம் முழுமைக்கும் வித்தியாசமில்லாமல் - மனசாட்சியில்லாமல் டிக்கெட்டுக்கு மிக அதிகமான பணத்தை வசூல் பண்ணுவார்கள். கமல்ஹாசனின் இந்த திரைப்படம் சின்னத்திரைக்குப் பிறகு தான் பெரிய திரைக்கு செல்வதால் அந்த கொள்ளை என்பது தடுக்கப்படும்.
         # அதுமட்டுமல்ல, இதே திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் திரையிட்டு முதல் இரண்டு வாரங்களுக்கு டிக்கெட்டை கவுண்டரில் கொடுப்பதற்கு பதிலாக ''பிளாக்கில்''  ஒரு டிக்கெட் ஆயிரம் ரூபாய் வரையில் கள்ளத்தனமாக விற்பதன் மூலம் அடிக்கப்படும் ''மெகா கொள்ளை'' என்பதும் இதன் மூலம் ஒழிக்கப்படும்.
         # ஒரே திரைப்படத்தை ஊரிலுள்ள அத்தனை திரையரங்குகளிலும் திரையிட்டு மூன்றே நாளில் திரைப்பட உரிமையாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் கோடிக்கணக்கில் கொள்ளை இலாபம் அடித்துவிடுவார்கள்.
     # இப்படி சின்னத்திரையில் திரையிடப்படுவதால் ''திருட்டு விசிடி-க்கு'' முற்றுபுள்ளி வைக்கப்படும். கொள்ளை இலாபம் அடிக்கும் திருட்டு விசிடி கும்பல் ஒழிக்கப்பட்டு விடும்.
         மேலே குறிப்பிட்டது போன்ற பல நல்ல பலன்கள் பொது மக்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும், சினிமா துறைக்கும்  கிடைக்கின்றன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பொது மக்களும், சினிமா ரசிகர்களும் இதை கண்டிப்பாக வரவேற்பார்கள்.
         இத்தனை நாட்களாக கொள்ளை இலாபத்தையே பார்த்துக்கொண்டிருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு தான் கமல்ஹாசனின் இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. திரைப்படத்துறையில் அல்லது திரைப்பட வர்த்தகத்தில் இதுவும் ஒரு பரிணாம வளர்ச்சி தான் என்பதை திரையரங்கு உரிமையாளர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, தன்னுடைய படம் எங்கு திரையிடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை திரைப்பட உரிமையாளருக்கு உண்டு என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
         இதனால் திரையரங்குகள் பாதிக்கப்படுமா என்றால்... நிச்சயம் பாதிக்கப்படும். எதிர்காலத்தில் திரைப்பட உரிமையாளர்கள் அனைவரும் கமல்ஹாசனை பின்பற்றினால், திரையரங்குகள் நிச்சயம் மூடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் இது போன்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
         ஆரம்பக்காலத்தில் மக்களின் பொழுதுபோக்கு என்பது ''தெருக்கூத்து'' என்பது தான். அதன் பரிணாம வளர்ச்சியாக ''மேடை நாடகங்கள்'' வந்த பிறகு தெருக்கூத்து என்பது அழிந்து போனது. பிறகு மேடை நாடகத்தின் பரிணாம வளர்ச்சியாக ''சினிமா'' வந்த பிறகு மேடை நாடகங்கள் அழிந்து போனது. இப்போது சினிமாவில் கூட தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பழைய தொழில்நுட்ப முறைகள் மறைந்து போய்விட்டன. புதிய தொழிநுட்பக் கலைகளை கற்றுக்கொள்ள முடியாதவர்கள் காணாமல் போய்விட்டார்கள். ஒரு காலத்தில் திரைப்பட விளம்பர பேனர்களையும் போஸ்டர்களையும் ஓவியர்கள் தங்களின் கைவண்ணத்தில் வரைந்து கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு கம்ப்யூட்டர்  பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் விளம்பரங்களை செய்வதால் ஓவியர்கள் வேலைவாய்ப்பின்றி அழிந்துபோனார்கள்.  இவைகளை எல்லாம் திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா...?
        அதுமட்டுமல்ல தொலைக்காட்சி பெட்டிகளும், பல்வேறு சீரியல்களும் வந்த பிறகு பாதிக்கும் மேற்பட்ட திரையரங்குகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டனவே. எஞ்சியிருப்பது கொஞ்சம் தானே.
        அதனால் கமல்ஹாசனின் துணிச்சலான இந்த செயலினைப் பாராட்டி அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கமல்ஹாசனைப் பொறுத்தவரையில் இது ஒரு ''அக்னிப்பரிட்சை'' - ''அமிலப் பரிசோதனை''. எதையும் துணிச்சலுடன் வித்தியாசமாக செய்யும் கமல்ஹாசன் இம்முறை ''விஸ்வரூபம்'' எடுத்திருக்கிறார். அவரை நெஞ்சார பாராட்டுவோம்.

கருத்துகள் இல்லை: