செவ்வாய், 4 டிசம்பர், 2012

ராமதாசை அன்னியப்படுத்துங்கள் - பா.ம.க வை தனிமைப்படுத்துங்கள்...!


        ''மருத்துவர் அய்யா'' தனக்குத் தானே பட்டப்பெயரை வைத்துக்கொண்ட ராமதாசை கடந்த காலங்களில்  சாதி ஓட்டுக்காக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி தலையில தூக்கி வெச்சிகிட்டு ஆடினாங்க. இப்போ ரெண்டு பேருமே தூக்கி எறிஞ்சிட்டாங்க. செல்லா காசா போயிட்டாரு. அதனால அய்யா கையில கவுன்சிலர் அளவுக்குக் கூட யாரும் இல்லை. சில்லரை  காசுக்கும் வழியில்லாம போயிட்டுது. அய்யாவுக்கு பொழுது போகல. இனி மேல் என்னை வேறு மாதிரி பார்க்கப்போறீங்கன்னு சமீபத்தில தான் சொன்னாரு. வெறிபிடிச்சி சட்டைய கிழித்துக்கொண்டு அலையப்போறார்னு இப்பத்தான் தெரியுது. யாருமில்லாத கடையில டீ ஆத்துரதுக்கு பதிலா,  பழைய ஸ்டைல்ல  தன் சாதி ஜெனங்கள சாதி பேரால திசை திருப்பி தன் பக்கம் இழுத்துகிட்டா தமிழ்நாட்டுல நானும் இருக்கேன்னு காட்டிகளாம்னு அய்யா கோதாவில இறங்கி இருக்காரு. அதுவும் விபரீதமான விளையாட்டுல இறங்கி இருக்காரு.
            தர்மபுரியில் தலித் இளைஞன் ஒருவன், வன்னிய சாதிப் பெண்ணை மனம் ஒத்து காதலித்து திருமணம் செய்து கொண்டான் என்பதற்காக, தலித் மக்களையே பழி தீர்க்கும் பொருட்டு அவர்கள் வாழும் பகுதிகளில் 250 - க்கும் மேற்பட்ட குடிசைகளை தீயிட்டுக் கொளுத்தியது என்பது தமிழகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அச்செயலை ராமதாஸ் நியாப்படுத்திருப்பது என்பது அவர் சாதி மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. இனியும் சாதியை சொல்லி எங்களை ஏமாற்ற முடியாது என்று அவர் சாதி மக்களே வெளிப்படையாக பேசுகிறார்கள்.
            அனால் இவரோ தலித் என்றோ, வன்னியர் என்றோ, மற்ற பிற சாதியர் என்றோ பாராமல் ஒற்றுமையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் உழைப்பாளி மக்களிடையே ஒற்றுமையை சீர்குலைத்து சாதி மோதலை உருவாக்கி அதிலே குளிர் காயலாம் என்று நினைக்கிறார். மூழ்கிகொண்டிருக்கும் தனது கட்சியை காப்பாற்றலாம் என்று நினைக்கிறார். இதன் மூலம் தன்  சாதி ஓட்டுகளை அள்ளிக்கொள்ளலாம் என்று கனவு காண்கிறார். தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுமாறு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை ''வில்லத்தனமாக'' உசுப்பேற்றி விடுவதென்பது கண்டிக்கத்தக்கது. தலித் இளைஞர்கள் நவீன உடைகள் அணிகிறார்கள்.  அதனால் தலித் அல்லாத பிற சமூகங்களின் பெண்கள்  அவர்களின்  பொய்யான வாக்குறுதிகளால் கவரப்படுவதாகவும் பிதற்றியிருக்கிறார். அது மட்டுமல்ல, தலித் குடியிருப்புகளின் வழியாகச் செல்லும் பிற சமூகப் பெண்கள் கிண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று அவர் சொல்லியிருப்பது என்பது ''நம்ம சாதிப் பெண்ணை கிண்டல் பண்ணிட்டாண்டா. வெட்டுடா அவனை'' என்று சினிமா வில்லன் சொல்லுவது போல கேளிக்கையாக இருக்கிறது.
           ராமதாஸ் சமீபத்தில் சில சாதிய அமைப்புகளை அழைத்து கூட்டம் ஒன்றைக் கூட்டி “இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டுவிட்டது” என்ற ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். என்னுடைய கேள்வி என்னன்னா... தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று ராமதாஸ் சொல்லும் போது தலித் இளைஞனும் வன்னிய பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டதை பார்த்து ஏன் கொதிக்க வேண்டும்...? கொதிப்படைந்து போய் தலித் மக்கள் வாழும் குடிசைகளுக்கு ஏன் தீ வைத்து கொளுத்தவேண்டும்...? அப்படியென்றால் தீண்டாமைக் கொடுமை எங்கே ஒழிக்கப்பட்டு விட்டது...?
           இதிலிருந்து என்ன தோணுதுன்னா... வேலை வெட்டி இல்லேனா... இப்படி எல்லாமோ கிறுக்குபிடிச்ச மாதிரி எல்லாம் சிந்திக்க தோணுமோ...?
          ஆனால் இதையெல்லாம் விளையாட்டாக பார்க்க முடியாது. ராமதாசின் கடந்த கால அரசியல் முறையை தமிழகம் பார்த்திருக்கிறது. இன்றைக்கு நாட்டில எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட  உழைப்பாளி  மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாம கஷ்டப்படுறாங்க. அவர்கள் வாழ்வுயர, பொருளாதாரம் உயர அவர்களை இணைத்து போராட்டம் நடத்தலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு உழைக்கும் மக்களிடையே சாதி வெறியை கிளப்பி மோதலை உண்டாக்கி அதில் அரசியல் பண்ணத் துடிக்கும் ராமதாசை தமிழக மக்கள் அன்னியப்படுத்தவேண்டும். திராவிடக்கட்சிகள் பாமக - வை தனிமைப் படுத்தவேண்டும்.

கருத்துகள் இல்லை: