சனி, 8 டிசம்பர், 2012

அரசின் முறையற்ற செயல்கள் — நாடகம் முடிந்தது..! அரிதாரம் கலைந்தது...!!


 கட்டுரையாளர் : தோழர். டி . கே. ரங்கராஜன், எம்.பி.,         
      
    நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதம் என்பது சற்று மாறுபட்டதாக இருக்கும். ஆகவேதான், இதற்கு ''மூத்தோர் அவை'' என்று பெயர். மாநிலங்களின் சார்பாக பிரதிநிதித்துவப் படுத்தப்படக்கூடியவர்கள் மட்டுமல்லாமல், அறிவு ஜீவிகள், விஞ்ஞானிகள், முதலாளித்துவ அமைப்பைச் சார்ந்திருக்கக்கூடிய பிரதிநிதிகள் என்று பலரும் நியமன உறுப்பினர்களாகவும் அமரக்கூடிய இடம். அரசியலில் ஓய்வு பெற்றவர்களுக்கும் கூட இங்கே இடம் உண்டு. 
            இந்தப் பகுதியை வாசகர்கள் படிக்கும்போது மாநிலங்களவையிலும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் முழுமையாக நுழைவதற்கான ஒப்புதலை ஐமுகூ அரசு பெற்று விடும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத்தான், மாநிலங்களவையிலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விவாதங்கள் நடக்கத் துவங்கி இருக்கிறது. பிரதமர் பத்திரிகையாளர்களைப் பார்த்துப் பேசுகிறபோது மாநிலங்களவையிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அதற்குப் பிரதான காரணம், ஐமுகூ அரசை ஆதரிக்கக்கூடிய மாயாவதி, சமாஜ்வாதிக் கட்சியின் சார்பில் உள்ள 15 வாக்குகளையும் ஆளும் கட்சிக்கு அளிப்பதாக அவர் தெளிவாகக் கூறிவிட்டார். மாநிலங்களவையில் மாயாவதி பேசுகிறபோது, பிரதானத் தாக்குதல் மதவாதத்தை எதிர்த்து, பாஜகவை விமர்சித்து, மதச்சார்பற்ற தன்மையில் தனக்கு இருக்கக்கூடிய உறுதியைக் காட்டிக் கொண்டார். 
          மாநிலங்களவையில் இந்த விவாதத்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கி வைத்தது. அதனுடைய தலைவர் வி. மைத்ரேயன் தங்களுடைய அஇஅதிமுக, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ஏற்றுக்கொள்ளாது என்றும், ஐமுகூ ஒரு சிறுபான்மை பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் அரசு என்றும், இதற்குப் பெரும் பான்மை இல்லாதபோது இது இப்படிப்பட்ட முக்கிய மான முடிவுகளை எடுக்க அருகதை இல்லை என்றும், தமிழகத்தில் அஇஅதிமுக சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்காது என்றும் குறிப்பிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விவாதத்தில் கலந்து கொண்டு பேசியபோது சீத்தாராம் யெச்சூரி, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் குழு 2004 - இல் ஓர் அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது என்று கூறி அதில் கூறப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டினார்.
‘‘வால்மார்ட் வெற்றி என்பதன் பொருள், ஊழி யர்களுக்கு அளிக்கப்படும் ஊதியங்கள் மற்றும் பயன்களை வெட்டிக் குறைப்பது என்பதாகும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது என்பதும், நாடு முழுதும் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் என்பதுமாகும். ஒரு வர்த்தக நிறுவனத்திற்கான வெற்றி என்பது தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் வயிற்றில் அடித்து வரக்கூடாது. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இத் தகைய குறுகியபார்வை கொண்ட உத்திகள், கடைசியில், நம் பொருளாதாரத்தின் அடித்தளத்தையே அழித்திடும்.’’ இவ்வாறு அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள அதே நிறுவனத்தைத் தான் நம் ஆட்சியாளர்கள் இந்தியாவிற்குள் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார். 
            சீத்தாராம் யெச்சூரி மேலும் கூறியதாவது:‘‘வால்மார்ட் நிறுவனம் என்பது இன்றைய தினம் உலகில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் கொள்ளை லாபம் ஈட்டுவதில் முதலாவதாகும். உலக வரலாற்றில் மிகவும் பிரம்மாண்டமான வர்த்தக நிறுவனமாகும். இன்றைய தினம் அதன் லாபம் ஓராண்டிற்கு 36 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். (இந்திய ரூபாயின் மதிப்பில் 154 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகும்.) அதாவது ஒரு நிமிடத்திற்கு 21 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயின் மதிப்பில் 11 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்களாகும்) இத்தகைய கம்பெனிகளைத்தான் இந்திய அரசு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து, வால்மார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை என்ன? வால்மார்ட்டில் பணிபுரியும் 16 லட்சம் ஊழியர்களில் 1.2 விழுக் காடு ஊழியர்கள்தான் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்பவர்கள். மற்ற அனைவரும் அந்தந்த நாடு களில் உள்ள வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர் கள்தான். இத்தகையவர்கள் வருவதால் நாட்டில் வேலைவாய்ப்பு உயரும் என்று சொல்லிக் கொண் டிருக்கிறீர்கள். இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் தொடர்பாக சர்வதேச ஆய்வுகள் என்ன கூறுகின்றன? ஐ.நா. அமைப்பைச் சேர்ந்த நிறுவனமொன்று ஓர் ஆய்வினை மேற்கொண்டது. அது, ''ஒரு குறிப்பிட்ட அளவிலான பொருள்களை விற்பதற்கு கடை வீதியில் கூவி விற்போர் எனில் 18 பேர் தேவைப்படுகிறது, பாரம்பர்யமாக சிறிய அளவில் கடை வைத்து விற்பவர் எனில் 10 பேர் தேவைப்படுகிறது, சற்றே பெரிய கடை என்றால் 8 பேர் தேவைப்படுகறது, சூப்பர் மார்க்கெட் என்றால் 4 பேர் தேவைப்படுகிறது'' என்று அது குறிப்பிட்டுள்ளது.
             எனவே வேலைவாய்ப்பை அதிகரித்திட இது எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. தற்போதுள்ள கடைகளில் 3 நபர்கள் வேலை பார்க்கிறார்கள் எனில், அதே அளவுக்குப் பொருள்கள் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் 1.2 வேலையாட்களை வைத்துக்கொண்டு வேலையை முடித்து விடுவார்கள். இவ்வாறு இருக்கும் வேலையாட்களையும் சுருக்கத்தான் இது இட்டுச் செல்லும்.இரண்டாவதாக, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இது தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு கூறுவதென்ன? ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டில் கோக்கோ சாக்லேட் தயா ரிப்பதற்கான கோக்கோவை உற்பத்தி செய்திடும் விவசாயி சாக்லேட்டின் விலையில் 3.9 விழுக்காடு அளவிற்குத்தான் பெறுகிறார் என்றும் ஆனால் 34 விழுக்காடு அளவிற்கு லாபம் அதனை விற்பனை செய்யும் வணிகர்களுக்குச் செல்கிறது என்று கூறுகிறது. வால்மார்ட் நிறுவனம் வங்க தேசத்தில் உடை கள் தயாரித்திடும் ஆலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. 110க்கும் மேற்பட்டவர்கள் அதில் இறந்துபோனார்கள். இதுபோல் அதன் கீழ் உள்ள ஆலைகளில் எந்தப் பாதுகாப்பு முறைகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. எதைப்பற்றியும் அவர்கள் கவலைப்படுவதுமில்லை. ஒரே குறிக்கோள், கொள்ளை லாபம் ஈட்டுவது என்பது மட்டுமே. ஆயினும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இந்நிறுவனம் தொடர்பாக சர்வதேச அளவில் உள்ள அனுபவம் என்ன? சில்லரை வர்த்தகத்தில் பல்வேறு அங்காடிகள் இருக்கும்போது உள்ள விலையைவிட ஒரேயொரு வாங்குபவர், ஒரேயொரு விற்பவர் என்று வரும் பட்சத்தில், பொருள்களின் விலைகள் மிக மிக அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுதான் சர்வதேச அனுபவமாகும். எனவே விவசாயிகளுக்கு நல்ல விலைகள் கிடைக்கும் என்று கூறுவதெல்லாம் கதையாகும்.’’ இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். 
         இதற்குப் பிறகு, திமுக சார்பில் பேசிய திருச்சி சிவா, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்தும் அதன் பாதகமான விஷயங்களையும் சொல்லி முடித்தபின், ஆயினும் நண்பர்களை நாங்கள் கைவிட்டதில்லை என்றும், காங்கிரஸ் எப்போதுமே எங்களுடைய நண்பர்கள் என்றும் கூறி முடித்தார். பாஜக சார்பில் பேசிய அருண்ஜெட்லி, மாநிலங்கள் விரும்பினால் இந்தக் கடைகளைத் திறக்காமல் இருந்துவிடலாம் என்று சொல்வதெல்லாம் பொய் என்றார். இஷ்டம் இருந்தால் மட்டுமே மாநிலங்கள் இந்தக் கடைகளைத் திறந்துகொள்ளலாம் என்ப தெல்லாம் பொய் என்று கூறினார். உண்மை அல்லாத விஷயத்தை மத்திய அரசு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறது. இருநாடுகளுக்கு இடையே வரக்கூடிய ஒப்பந்தம்  என்பது இரு நாடுகளுக்கும் இடையே அமலாக்கப்பட வேண்டிய ஒன்று என்றும்,  இந்தியா போன்ற நாடுகளில் இந்த மாநிலம், அந்த மாநிலம் அமலாக்க மாட்டேன் என்று சொல்லவே முடியாது என்றும் கூறினார். நம்முடைய நாட்டில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரம் என்பது அவற்றால் நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றிற்கான சட்டங்களைக் கொண்டுவரலாமே ஒழிய, அதற்குமேல் அவற்றிற்கு அதிகாரங்கள் கிடையாது என்றார்.
                தற்போது நாட்டில் இயங்கும் சுபிக்சா, ரிலயன்ஸ், ஸ்பென்சர் போன் றவை எப்படி எல்லா மாநிலங்களுக்கும் செல்ல முடியுமோ அதேபோன்று வால்மார்ட்டும் இதர பன்னாட்டு நிறுவனங்களும் எல்லா மாநிலங்களுக்கும் செல்ல முடியும் அதை யாரும் தடுக்க முடியாது, அவ்வாறு தடுப்பதற்கான அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் கிடையாது என்றார். இவ்வாறு அருண்ஜெட்லி கூறும்போது பிரதமரும், ஆனந்த் சர்மாவும் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருப்பதற்கு அவர்களுக்கு மான்யங்கள் கொடுக்கப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் இருக்கும் மான்யங்களை ரத்து செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் கட்டுப்படியாகாமல் தவிக்கக்கூடிய நேரத்தில் இது நடக்கிறது.உண்மையிலேயே அரசு வரலாறு காணாத அளவிற்கு நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் பேசக்கூடிய வர்கள் சொல்கிறார்கள். நாட்டில் இறக்குமதியை விடவும் ஏற்றுமதி என்பது குறைவாக இருக்கிறது. அரசின் செலவுகள் மிகவும் ஊதாரித்தனமாகவும், அபரிமிதமாகவும் மாறி இருக்கிறது. இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டால் இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அந்த உண்மையை வெளிப்படையாகச் சொல்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடந்த எட்டரை ஆண்டுகளில் நாட்டினுடைய பொருளாதாரத்தை நவீன தாராளமயம் என்ற பெயரால் எந்த அளவிற்குப் பாழ்படுத்த முடியுமோ அந்த அளவிற்குப் பாழ்படுத்தி விட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியினரும் தனித்தனியே போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்படுவதன் மூலமாகத்தான் அர சுக்கு நிர்ப்பந்தத்தை மேலும் அதிகப்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை: