வியாழன், 27 டிசம்பர், 2012

அன்புள்ள மோடிக்கு, ஹிட்லர் எழுதுவது… !

அன்புள்ள நரேந்திர மோடிக்கு
         நான் என்னை அறிமுகம் செய்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்காது. நாம் இதுவரை சந்தித்துக் கொண்டதில்லை என்றாலும் உன்னை என்னுடைய சகோதரனாகவே கருதிவந்தேன். இப்போது உன்னை குருவாக ஏற்றுக்கொண்டுவிட்டேன். இனவெறுப்பு அல்லது இனஅழித்தொழிப்பு என்னும் பெயரால் என் செயல்கள் இன்று அழைக்கப்படுகின்றன. மனித குலத்தின் விரோதியாகவும், படுபயங்கர சாத்தானாகவும் என்னைப் பலர் உருவகப்படுத்துகிறார்கள். 
          பல லட்சக்கணக்கானவர்களை நான் கொன்றேனாம். குழந்தைகள் என்றும் பெண்கள் என்றும் வயதானவர்கள் என்றும் பாராமல் யூதர்களை நான் தேடித்தேடி சிறைப்பிடித்து அழித்தேனாம். என்ன ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு! ஜெர்மனியைச் சுத்தப்படுத்தியவன் நான். கசடுகளைக் கண்டறிந்து களைவது ஒரு குற்றமா? நோயைக் கண்டுபிடித்து அழிப்பது தவறாகுமா? 
           நல்லவேளை, நரேந்திர மோடி, என்னை நீ நன்கு அறிந்து வைத்திருக்கிறாய். ஏன், உன் இயக்கத்தில் உள்ள பலரும் என்னைப் பற்றிய மிகச் சரியான மதிப்பீட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி தான். மீடியாவை எப்படி கையகப்படுத்திக் கொள்ள வேண்டும், வலுவான ஒரு பிரசாச வாகனமாக எப்படி அதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உலகுக்குக் கற்றுக்கொடுத்தவன் நான். குழந்தைகள் முயல்களைப் போல் தாவிவந்து பூங்கொத்து கொடுத்து என்னை வரவேற்பது போலவும், லட்சக்கணக்கான ஜெர்மானிய வீரர்கள் என் தலைமையின் கீழ் உற்சாகத்துடன் களத்துக்குச் செல்வது போலவும் பல புகைப்படங்களை வெளியிட்டு என் மக்களை நான் ஈர்த்திருக்கிறேன். 
          ஆஹா ஹிட்லரைப் போன்ற தலைவர் இந்த அகிலத்தில் உண்டா என்று வாய்பிளக்கச் செய்திருக்கிறேன். ஆனால், நீ என்னை மிஞ்சிவிட்டாய், நரேந்திர மோடி. என்னைக் கடந்து நீ வெகு தூரம் சென்று விட்டாய். மூன்று நாள்களாக நீ நடத்திய உண்ணாவிரதத்தைக் கண்டு நான் வெலவெலத்துப் போய்விட்டேன். என்னவொரு சாதுர்யம்! என்னவொரு மேதாவிலாசம்! நீ எத்தனை கூர் மதி படைத்தவன் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு சம்பவம் போதாதா? 
          பிப்ரவரி 2002ல் குஜராத் கலவரத்தால் வெடித்த போது நான் இப்படிச் சொல்லிக்கொண்டேன். ‘பாவம் மோடி, இனி அவன் மீண்டும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது!’ உன் ஆசிர்வாதத்துடனும் அங்கீகாரத்துடனும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குஜராத்தில் கொல்லப்பட்ட போது, பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது, உயிர் பயத்துடன் முஸ்லிம்கள் குஜராத்தைக் காலி செய்து கொண்டு ஓடிய போது, உன் சகாப்தம் முடிந்து விட்டது என்று கருதினேன். 
             காலம் இறுதித் தீர்ப்பெழுதி விட்டது என்று பயந்தேன். எனக்கு நானே தீர்ப்பெழுதிக் கொண்டு விட்டது உனக்குத் தெரியும். எந்த மூளையைப் பயன்படுத்தி யூதர்களை அகற்றினேனோ அந்த மூளையை நானே சிதறிடித்துவிட்டேன். நான் தோல்வியடைந்துவிட்டேன். என்னால் யூதர்களை மட்டுமே வெற்றி கொள்ள முடிந்தது. உலகத்தை அல்ல. என் ஜெர்மனி இன்று என்னைக் கைவிட்டுவிட்டது! உனக்கும் இப்படிப்பட்ட நிலைமை தான் வந்து சேரும் என்று நினைத்தேன். எப்படி உதித்தது இந்த உண்ணாவிரத யோசனை? யார் சொன்னது? என் அருமை கெப்பல்ஸால்கூட இப்படியொரு திட்டத்தைத் தீட்டியிருக்க முடியாது! 
             மூன்று தினங்கள். வெள்ளாடை உடுத்தி தேவகுமாரன் போல் நீ நடந்து வந்தாய். அலங்கரிக்கப்பட்ட, குளிரூட்டப்பட்ட மேடையில் பாந்தமாக அமர்ந்திருந்தாய். கேள்விக் கணைகளைத் திறமையாகவும் பொறுமையாகவும் எதிர்கொண்டாய். உலகமே உன்னைத் திரும்பிப் பார்த்தது. என் மீதும் குஜராத் மீதும் வீசப்பட்ட கற்களை நான் அமைதியாகச் சேகரித்து வந்தேன். அந்தக் கற்களைக் கொண்டு தான் குஜராத்தை பலமாகக் கட்டமைத்தேன்!’ எவ்வளவு அழுத்தமான வாசகம்! உன் எதிரிகளின் அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் ஒரு நொடியில், ஒரு வாக்கியத்தில் தகர்த்து உதிர்தது விட்டாய், மோடி! அமைதியாக காரியத்தைச் சாதித்து விட்டாய்! உன் சித்தாந்தமும் என்னுடையதும் ஒன்று தான். உன் அணுகுமுறையும் என்னுடையதும் ஒன்றுதான். ஆனால், உன் செயல்திட்டம் அபாரமானது. 
                யூதர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை முடிவெடுத்தவுடன் நான் என் ராணுவத்தை தான் அழைத்தேன். அவர்களிடம் தான் பொறுப்பை ஒப்படைத்தேன். ஜெர்மனியிலும் ஜெர்மனியைத் தாண்டியும் பல வதை முகாம்களை அவர்கள் உருவாக்கினார்கள். வீடுகளில் புகுந்து, இனம் கண்டு யூதர்களை இழுத்து வந்தார்கள். நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாகக் கொன்றார்கள். ஆனால் நீயோ இஸ்லாமியர்களை அழிக்க இந்துக்களைப் பயன்படுத்திக் கொண்டாய். யோசித்துப் பார்த்தால் இதைவிட அற்புதமான ஒரு திட்டத்தை யாராலும் வகுக்க முடியாது என்றே தோன்றுகிறது. 
          செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு நீ அழகாக ஒதுங்கிக் கொண்டு விட்டாய். ம், விளையாடு என்று பச்சைக்கொடி காட்டி விட்டு நீ புன்னகையுடன் பின் நகர்ந்து விட்டாய். யூதர்கள் ஜெர்மனியின் இதயத்தை அழிக்க வந்த கிருமிகள் என்பதை ஜெர்மானியர்கள் நம்பினார்கள். நம்ப வைத்தேன். ஆனால், அவர்களையே யூதர்களுக்கு எதிராகத் திருப்பி விடும் கலையை நான் கைக்கொள்ளவில்லை. நீ என் சகோதரன் அல்ல, என் குரு என்று நான் அழைத்ததன் காரணம் இப்போது புரிகிறதா? மோடி, நீ காந்தி பிறந்த மண்ணில் இருந்து தோன்றியிருக்கிறாய். 
                 விமானப் படைகளைக் கொண்டு தான் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை என்னால் வீழ்த்த முடிந்தது. ஆனால், காந்தி உண்ணாவிரதம் மூலமாகவே பிரிட்டனை விரட்டியடித்து விட்டாராமே! எப்பேர்ப்பட்ட சாதனை! எனக்கும் கூட மிஸ்டர் காந்தியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அகிம்சையின் முக்கியத்துவம் பற்றி. யூதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்வது பற்றி. சத்தியத்தின் முக்கியத்தும் பற்றி. யூதர்களுக்கும் கூட அவர் கடிதம் எழுதியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். வன்முறையை உதறிவிட்டு, அன்பாலும் நேசத்தாலும் என்னை வீழ்த்த வேண்டுமாம்! ஓவென்று சிரித்துவிட்டு காந்தியை நான் மறந்து போனேன். ஆனால், நீ மறக்கவில்லை. மூன்று நாள் உணவை மறுத்ததன் மூலம், உன் ஒட்டுமொத்த எதிரிகளையும் நீ வாயடைக்கச் செய்துவிட்டாய். 
            ‘குஜராத்தில் சிறுபான்மையினருக்காக நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?’ பந்தலில் இந்தக் கேள்வி உன்னிடம் கேட்கப்பட்ட போது நான் கூர்மையாக உன் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு அசைவும் இல்லை உன்னிடம். விரிந்த புன்னகை விரிந்த படியே இருந்தது. உன் கண்கள், புருவம், கன்னம் எதிலும் அசைவில்லை. நீ துடிக்கவில்லை. பதறவில்லை. (ஒருமுறை தொலைக்காட்சி பேட்டியில் நீ தயங்கியும் சீறியும் பயந்தும் நடுங்கியதைப் பார்த்திருக்கிறேன்!) நீ உன் உதடுகளை இயல்பாகப் பிரித்தாய். 
                பிறகு சொன்னாய். ‘சிறுபான்மையினருக்காக நான் எதுவும் செய்யவில்லை. பெரும்பான்மையினருக்காகவும் எதுவும் செய்யவில்லை. நான் குஜராத்துக்காக உழைக்கிறேன். குஜராத்தின் முன்னேற்றத்துக்காகவே பணியாற்றுகிறேன். சிறுபான்மை, பெரும்பான்மை என்று மக்களை நான் பிரித்து பார்ப்பதில்லை.’ சொல்லி முடித்துவிட்டு, அடுத்த கேள்வி என்ன என்பது போல் ஒரு பார்வை பார்த்தாயே! அந்த இடத்தில் நான் மீண்டும் இறந்து போனேன். 
          என் அகந்தை அழிந்த சமயம் அது. நீ என்னை உலுக்கியெடுத்து விட்டாய், நரேந்திர மோடி. என் அத்தனை சாதனைகளையும் நீ துடைத்து அழித்து விட்டாய். முதல் முதலாகப் பயத்தை நான் தரிசித்தது உன்னிடம்தான். நடைபெற்றதை ‘கலவரம்’ என்று அழைக்கும் துணிச்சல் உனக்கு மட்டும்தான் இருக்கிறது. சடலங்கள் புதைக்கப்பட்ட கையோடு தேர்தலில் நின்று, வாக்கு சேகரித்து, வெற்றி பெறும் தீர்க்கமும் தீரமும் உன்னிடம் மட்டும் தான் இருக்கிறது. 
                  நான் கேள்விப்பட்டது நிஜமா என்று தெரியவில்லை. குஜராத்துக்கு மட்டுமின்றி முழு இந்தியாவுக்கும் நீ தலைமை தாங்கப் போகிறாயாமே! உண்மைதானா? அதற்கான முன்னோட்டம் தான் இந்த உண்ணாவிரதமா? நிச்சயம் நீ வெற்றி பெறுவாய் நரேந்திர மோடி. ஆரிய ரத்தம் தூய்மையானது. உலகை ஆளும் திறன் கொண்டது. நீ மெய்யான ஆரியன். நீ வெல்வாய்! குஜராத்தைப் போலவே இந்தியாவையும் மோடி வளர்த்தெடுக்க வேண்டும் என்று பலர் என் காதுபடப் பேசிக் கொண்டார்கள். நான் சிரித்துக் கொண்டேன். நீயும் சிரித்துக்கொண்டுதான் இருப்பாய் அல்லவா? 
                                                                                                         அன்புடன் 
                                                                                                 அடால்ஃப் ஹிட்லர் 

கருத்துகள் இல்லை: