ஞாயிறு, 9 டிசம்பர், 2012

மன்மோகன் சிங்கின் பொய்யும் புரட்டும்....!

        பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் பொன்விழாவை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மன்மோகன் சிங்கிற்கு ''கவுரவ டாக்டர் பட்டம்'' அளிக்கப்பட்டது. நாட்டை பற்றியே சிந்திக்காத ஒருவருக்கு எதற்கு டாக்டர் பட்டம்...?  இது போல் இருபதுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மன்மோகன் சிங்கிற்கு  ''கவுரவ டாக்டர் பட்டம்'' அளித்துள்ளன . இத்தனை டாக்டர் பட்டம் எதற்கு...? யாருக்கும் உதவாத பட்டம்...! நாட்டிற்கோ அல்லது  நாட்டு மக்களுக்கோ உதவாத டாக்டர் பட்டம் எதற்கு...? அதை தூக்கி எறியவேண்டும். 
          பல் பொருள் சில்லரை வர்த்தகத்தில் நாடாளுமன்ற ஒப்புதலை பெற்ற மறுநாளே  நடைபெற்ற அந்த பட்டமளிப்பு விழாவில், அறிவு ஜீவிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். விழாவிற்கு வந்திருந்தவர்கள் காதுகளில் பூச் சுற்றியிருக்கிறார்.
         சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டால் விவசாயிகளும், நுகர்வோர்களும் பலனடைவார்களாம். புதிய தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி சந்தையில் புதிய முதலீட்டையும் அந்நிய நேரடி முதலீடு  அறிமுகப்படுத்துமாம். அடுத்து உணவு சில்லரை விற்பனையில் பெரும் விநியோக சங்கிலி, தொழில் நுட்பம், நிர்வாகச் செயல் அனுபவத்தை இந்தியா கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். அந்நிய நேரடி முதலீட்டால் விவசாயிகள் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதாம். நாட்டில் உள்ள நமது நுகர்வோரும் பலன் அடைவார்களாம். இப்படியெல்லாம் பேசி அந்த ''பொருளாதார மேதை''  எல்லோர் நாக்கிலும் தேனை தடவியிருக்கிறார்.
         ஆனால் உண்மை நிலை என்ன...? 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிப்பதற்கு மார்க்சிசிட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக்கட்சிகளும், மற்ற எதிர் கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கும் சூழ்நிலையில் சென்ற வெள்ளியன்று, பல்பொருள் விற்பனையில் சர்ச்சைக்குரிய நேரடி அந்நிய முதலீடு வாக்கெடுப்பில் அரசு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்ததால் குறுக்கு வழியில் வென்றது. அந்நிய நேரடி முதலீடு வரக்கூடாது என்ற தீர்மானத்தை ஆதரித்து 109 வாக்குகளும்,  அதற்கு எதிராக 123 வாக்குகள் கிடைத்தன.
          பாராளுமன்ற எண்ணிக்கையை வைத்து மன்மோகன் சிங் வெற்றிபெற்றிருக்கலாம். அதுவே மக்களிடமிருந்து கிடைத்த அனுமதி சீட்டாகாது. அந்நிய நேரடி முதலீட்டை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று பொருளாகாது. மக்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள். மக்களின் நாடி தெரியாதவர் பல்கலைக்கழக விழாவில் கண்டபடி நாடி ஜோசியம் சொல்கிறார்.

கருத்துகள் இல்லை: