செவ்வாய், 1 நவம்பர், 2011

பூமித் தாயின் 700 கோடிக் குழந்தைகள்...!

                  பூமித் தாய்க்கு இன்று 700 கோடிக் குழந்தைகள். நேற்று தான் உலகத்தின் மக்கள் தொகை எழுநூறு கோடியை தொட்டது. பல லட்சம் ஆண்டுகள் வயதான பூமித் தாய்  பல கோடிக் குழந்தைகளை பெற்றிருக்கிறாள். பல கோடிக் குழந்தைகளை இதுவரை இழந்தும் இருக்கிறாள். ஆனால் இன்று எஞ்சியிருப்பதோ எழுநூறு கோடிக் குழந்தைகள் தான். 
                  நேற்று எழுநூறு கோடியாவது குழந்தையாக இந்த பூமித்தாயின் மடியில் தவழ்ந்தக் குழந்தை உத்திரபிரதேசத்தில் பிறந்தது என்பது இந்தியாவிற்கே பெருமையளிக்கும் விஷயமாகும். அதிலும் அது  ஒரு பெண் குழந்தை என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். பெண்சிசுக்கொலை நடைபெறும் இந்த நாட்டில் தான்... பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து சாகடிக்கும் இந்த தேசத்தில் தான்... பெண் குழந்தைகள் என்றால் வீதியோரங்களில் வீசியெறியும் இந்த தேசத்தில் தான்... இப்படிப்பட்ட பெருமையோடு ''நர்கிஸ்'' என்ற இந்த பெண் குழந்தை பிறந்திருக்கிறது. எழுநூறு கோடியாவது குழந்தையை நாம் வாழ்த்தி வரவேற்போம்...!
                 இத்தனைக் கோடிக் குழந்தைகளை பெற்றெடுத்த இந்த பூமித் தாயிற்கு, அகழ்வாரைத் தாங்கும் அந்தத்  தாயின் குழந்தைகளாகிய நாம் என்ன செய்யப்போகிறோம்...? நாம் உயிர் வாழ காற்று, நீர், நெருப்பு, ஆகாயம், மண் ஆகிய நாம் உயிர் வாழத் தேவையான ஐந்து அத்தியாவசிய தேவைகளை நாம் கேட்காமலேயே நமக்கு அள்ளித்தரும் பூமி தாயிற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்....?
               இவ்வளவையும் நாம் கேட்காமலேயே நமக்கு தந்துவிட்டு பூமித் தாய்  தான் மட்டுமே உஷ்ணத்தால் கொதிக்கிறாள்...! அவளை எப்படி குளிரச் செய்யப் போகிறோம்...? வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... இன்று வாழ்ந்துகொண்டிருப்பவர் கோடி..? ஆனால் நாம் என்ன செய்துவிட்டோம் இந்த பூமித் தாய்க்கு...?
               ''முப்பது கோடி ஜெனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை'' பாடிய பாரதி இன்றிருந்தால் ''இந்த எழுநூறு கோடி ஜெனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை'' பாடியிருப்பான்.   இந்த பூமி அனைத்து எழுநூறு கோடி மக்களுக்கும் பொதுவானது. அனைவருக்கும் சொந்தமானது. எதிர்காலத்தில் இன்னும் பல கோடி குழந்தைகளை தன் மடியிலும், மார்பிலும், தோளிலும் தூக்கி சுமக்கப்போகும் பூமித் தாய்க்கு நாம் என்ன செய்யப்போகிறோம்..? நமக்கான பொறுப்பு என்ன..? சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது..?