வியாழன், 24 நவம்பர், 2011

பவார் வாங்கிய அறை - ஒட்டுமொத்த இந்திய மக்கள் ஆட்சியாளர்களுக்கு கொடுத்த மரண அடி..!                             இன்று புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரை இளைஞன் ஒருவன் அறைந்தது என்பது நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் தொடர்ந்து அரங்கேறிவரும் ஊழல்களாலும் விலைவாசி உயர்வுகளாலும்    வெறுப்படைந்த இளைஞன் ஒருவன்  ''ரௌத்திரம்'' பழகியிருக்கிறான். சரத் பவார் என்ன யேசுநாதரா... ஒரு கன்னத்துல அறைந்தால் மறு கன்னத்தை காண்பிப்பதற்கு...? இல்லையே...! அறை   வாங்கிட்டு   ஆடிப் போய்ட்டார்.
                   இந்த நிகழ்ச்சியை பற்றி கேள்விப்பட்ட இந்திய மக்கள் அனைவருக்கும் ரொம்ப சந்தோசம் தான். நம்மால் முடியாததை அந்த இளைஞன் செய்திருக்கிறானே என்று ஒரே சந்தோசம் தான் போங்க..!
            ஆனால் இந்த நிகழ்ச்சி என்பது,  ஒட்டு மொத்த இந்திய மக்களின் கோபத்தின் வெளிப்பாட்டைத் தான் காட்டுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இன்று பவாருக்கு கொடுக்கப்பட்ட அடி என்பது ஒட்டு மொத்த  ஆட்சியாளர்களுக்கும்  கொடுக்கப்பட்ட  மரண அடியாகும் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. 
                எத்தனை நாள் தான் ஆட்சியாளர்கள் கொடுக்கும் அடியை மக்கள் வாங்கிக்கொண்டே இருப்பார்கள்.... தாங்கிக்கொண்டே இருப்பார்கள்.
                இது போன்ற  நிகழ்ச்சிக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாதாம்... இந்த நிகழ்ச்சியைப் பற்றி பிரதமர் சர்வசாதாரணமாக சொல்கிறார். ''அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...''

கருத்துகள் இல்லை: